ஜூனியர் விகடன்: ஐ.டி துறையினர் மன உளைச்சலை எப்படி சரி செய்வது? (March 9, 2014)

ஐ.டி துறையினர் மன உளைச்சலை எப்படி சரி செய்வது?
நேர்காணல் செய்தவர்: பாலகிஷன், ஜூனியர் விகடன்

ஜூனியர் விகடனில் படிக்க! Junior Vikatan 09.03.2014

ஐ.டி. துறையில் பணிபுரியும் பலருக்கும் இருக்கும் முக்கியப் பிரச்னை மன உளைச்சல். அதை எப்படி சரி செய்வது? காம்கேர் சாஃப்ட்வேர் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் கே.புவனேஸ்வரி வழிகாட்டுகிறார்.

* ”அத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தும் இவர்கள் மனம் உற்சாகமாக இல்லை என்பதால்தான் ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் உண்டாகிறது. இதை விரட்டும் ஆயுதம் அவர்கள் கைகளில்தான் உள்ளது.

* வேலை பிடிக்கவில்லை, ஸ்ட்ரெஸ், பிழிந்து எடுக்கிறார்கள் என்பதைப் போன்ற வார்த்தைகளுக்குக்கூட உங்கள் மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவை உங்களை அரித்துத் தின்றுவிடும்.

* குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளுங்கள்

* இரவு அலுவலகத்தில் இருந்து வந்ததும் வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்துவிட்டு, சாப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டு பாருங்கள். உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆவது உறுதி.

* இரவு எத்தனை மணிக்கு அலுவலகத்தில் இருந்து வந்தாலும், அடுத்த 1 மணி நேரத்துக்குள் தூங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

* அதுபோல வீட்டுக்கு வந்ததும் செருப்பை அல்லது ஷூவை வெளியே வைத்துவிட்டு வருவதைப்போல, மற்ற எல்லா நினைவுகளையும் வெளியே விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும். வீட்டையும் இரண்டாவது அலுவலகமாக மாற்றிக்கொள்ளக் கூடாது.

* இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினால், மொபைல், லேப்டாப் ஆகியவற்றை தூர வைத்துவிடுங்கள்.

* கூடுமானவரை அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பும்போது குறைந்தபட்சம் சக ஊழியர் யாருடனாவது பேசிக்கொண்டே வீடு திரும்பலாம். அன்றைய தினம் அலுவலகத்தில் நடந்த மனதை நெருடும் விஷயங்களை பகிர்ந்துகொண்டாலே, பாதி ஸ்ட்ரெஸ் குறையும். தயவுசெய்து பர்சனல் விஷயங்களைத் தவிர்க்கவும்.

* ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மது, சிகரெட்டுக்கு இணையாக போதை ஏற்றுபவை. அதில் உட்கார்ந்துவிட்டால் எழுவது என்பது மிகவும் கடினம். எனவே, கூடுமானவரை இரவு 9 மணிக்குப் பிறகு அவற்றில் நாட்டம் கொள்ள வேண்டாம்.

* தினமும் ஏதேனும் ஒரு புத்தகம் படிக்கலாம். அல்லது பிடித்த ஹாபியைச் செய்யலாம். பாடுவது, பாட்டு கேட்பது, எழுதுவது என்று எதையாவது ஒன்றை கட்டாயமாக்கிக்கொள்ளலாம். இதன் காரணமாக மனதில் ஒரு நிறைவு ஏற்படும். நல்ல தூக்கம் வரும்.

* வீட்டுக்கு வந்ததும் அம்மா, அப்பா, கணவன், மனைவி இவர்களில் ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

* கடவுள் பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை கோயிலுக்குச் சென்றுவரலாம். அந்த அமைதி மனதில் மாற்றத்தை உண்டு செய்யும். வாரம் ஒரு சினிமா அல்லது பீச் எங்காவது செல்லலாம். எதுவாக இருந்தாலும் வீட்டு மனிதர்களுடன் செல்லவும். அலுவலக நண்பர்களைத் தவிர்த்துவிடவும்.

* மாதம் ஒருமுறை நம் விருந்தினர்கள் வீடுகளுக்குச் சென்றுவரலாம். அக்கா, சித்தி, பெரியப்பா, மாமா, மாமி என்று உறவு முறை சொல்லி அழைத்துப் பேசுவோம்.

* அதுபோல வார விடுமுறை நாட்களில் மாறுதலுக்காக வீட்டு வேலைகளைச் செய்யலாம். மனம் ஒன்றிச் செய்யும்போது மனதில் உங்களை அறியாமல் ஒரு நிறைவும் சந்தோஷமும் உண்டாகும்.

* எனக்குத் தெரிந்த சிறிய அளவில் பிசினஸ் செய்யும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையை ‘ஒய்ஃப் டே’ என்று சொல்லுவார். ஏனெனில், அன்று முழுவதும் அவர் வீட்டுக்காகவே தன் நேரத்தை செலவழிப்பார். இது நல்ல ஐடியாவாக இருக்கிறதல்லவா?

* இங்கு நான் சொன்ன அத்தனை விஷயங்களையும் நான் என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். பலன் கிடைக்கும்போது சந்தோஷம் பலமடங்காகும்.”

பாலகிஷன், ஜூனியர் விகடன்

(Visited 906 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon