அவள் விகடன்: ஐ.டி கம்பெனி வேலை! (February 2014)

அவள் விகடனில் ஐடி கம்பெனி வேலை குறித்த நேர்காணல்!
நேர்காணல் செய்தவர்: சா. வடிவரசு, விகடன்

ஐ.டி கம்பெனி வேலை!

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியன் தயாரிப்புகளை மட்டுமே தயாரிக்கின்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை, எந்த பிசினஸ் பின்னணியும் இல்லாமல், 0-ல் இருந்து தொடங்கி, பெயர் சொல்லும் நிறுவனமாக வளர்த்துள்ளவர். ஐடி நிறுவன வேலை குறித்து அவள் விகடன் வாசகர்களுக்காக தன் அனுபவங்களை  பகிர்ந்துகொண்டார்.

அதிகமானோர் கணிப்பொறி துறையை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? 

நம்நாட்டில் ஐ.டி துறை வளர்ச்சியடையாத, சுமார் 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் சின்னக் குழந்தையிடம் கேட்டாலும் ‘நான் டாக்டராகப் போகிறேன், இன்ஜினியர் ஆகப் போகிறேன்’ என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லும். ஏனென்றால் அப்போது அவைதான் பெரும் பணம் சம்பாதிக்கக் கூடிய துறைகளாக இருந்து வந்தன.

அதுபோல இப்போது கம்ப்யூட்டர் துறை; குறிப்பாக ஐ.டி துறை. இன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் சம்பாதிக்கக் கூடிய துறையாக இத்துறை இருப்பதே, பெரும்பாலானவர்கள் ஐ.டி துறையை தேர்ந்தெடுக்கக் காரணமாகிறது.

எத்துறையில் அள்ள அள்ள குறையாத அளவு சம்பளம் வருகிறதோ அத்துறை பிரபலமாகிறது; பெரும்பாலானோரால் விரும்பப்படும் துறையாகிறது. நேற்று டாக்டர், இன்ஜினியர்; இன்று ஐ.டி; நாளை வேறொன்றாகலாம். விருப்பு, ஆர்வம், வளர்ச்சி இவையெல்லாம் பணத்தின் அடிப்படையிலானவையே ஆகும்.

 இந்த அளவுக்கு கணிப்பொறித் துறை வளர்ச்சியடைய என்ன காரணம்?

நம் நாட்டில் 1990-களிலும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. 2000-த்தின் தொடக்கம் வரை இந்நிலை தான் நீடித்து வந்தது.

அமெரிக்கா போன்ற மேலைநாட்டு ஆதிக்கத்தினால் தான், நம் நாட்டில் ஐடி துறை ஆங்கிங்கெனாதபடி பெருகிப் பரவி, அனைவரையும் அது நோக்கி நகர வைத்துள்ளது.

அந்நிலை பெருமளவு குறைந்து நம் மக்கள் இன்று கைநிறைய சம்பாதிப்பதற்குக் காரணம் கால்செண்டர், பி.பீ.ஓ, ஐ.டி துறை என்று வெவ்வேறு பெயர்களில் உருவான வேலைவாய்ப்புகள் தான்.

அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது, நம்மை அடிமையாக்குகிறது என்று ஆதங்கப்படுகின்றவர்களில் யாரேனும் நம் நாட்டிலேயே  ‘சாப்ஃட்வேர் தயாரிப்புகளை’ உருவாக்கி, அதன் மூலம் நாட்டிற்கு நிரந்த வருமானத்தையும், நம் மக்களுக்கு தொடர்ச்சியான வேலை வாய்ப்பையும் உருவாக்க முயற்சியாவது எடுத்திருகிறார்களா? அதுபோல சாஃப்ட்வேர் தயாரிப்புகளில் பெருமளவு பங்கெடுக்கும் RND (Research and Development) துறையில் பணிபுரிய இளைஞர்களும் விரும்புவதில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் இதற்கு, ஆழ்ந்த புலமையும், கடுமையான உழைப்பும் தேவைப்படுகிறது.

இதன் காரணமாய் தான் மேலைநாடுகளில்(பெரும்பாலும்) இருந்து ப்ராஜெக்ட் ஆர்டர் எடுத்து அதை செய்து கொடுத்து, அதன் மூலம் மட்டுமே வருமானத்தை ஈட்டும் நிறுவனங்கள் வளர்ந்துள்ளது. இதுவே சுலபமாக இருப்பதால், நம் நாட்டு நிறுவனங்களும், சாஃப்ட்வேர் தயாரிப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ப்ராஜெக்ட் செய்து கொடுக்கும் சுலபமான பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.

ஒரு மென் பொறியாளர் எப்படி இருக்க வேண்டும்? அவரது தகுதி, வேலை, திறமைகள் பற்றி?  

ஐ.டி துறையில் பணி புரிய அதிபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்பதில்லை. இதுறைப் பணி, வெறும் உடல் உழைப்பு மட்டும் சம்பந்தப்பட்டது கிடையாது. மூளை சம்பந்தப்பட்ட வேலையாகும். கூர்மையாக சிந்திக்கத் தெரிந்தவர்களும், மாற்றி யோசிப்பவர்களும், இத்துறைக்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.

ஒரு ப்ராப்ளத்துக்கான தீர்வை கண்டுபிடிக்கும் போது, எத்தனை விரைவாக அத்தீர்வு கண்டுபிடிக்கப்படுகிறதோ, அதை வைத்து தான், சிந்திக்கின்ற திறனின் அளவு மதிப்பிடப்படுகிறது.

எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, சற்று மாற்றி யோசித்து வித்தியாசமாக சிந்திக்கும் திறன் உள்ளவர்களை மாற்றி யோசிக்கும் திறன் பெற்றவர்கள் என்று சொல்வார்கள். இதனை ஆங்கிலத்தில் Lateral Thinking, Out of Box Thinking என்றெல்லாம் சொல்வார்கள்.

தனியாக வேலை செய்வதில் திறமையாக இருக்கும் பலர், குழுக்களாகப் பணி செய்யும் போது பின்தங்கி விடுவார்கள். இத்துறைக்கு குழுவாக பணிபுரியும் திறமை இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் குறைசொல்லிக் கொண்டு இத்துறையில் முன்னேற முடியாது. வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் அது குழு மொத்தத்துக்கும் தான்.

கலந்து ஆலோசித்து பணிபுரியும் ஆற்றல், விட்டுக் கொடுக்கும் தன்மை, அனைவரையும் அணுசரித்துச் செல்லுகின்ற பண்பு, சகிப்புத் தன்மை, மற்றவர்கள் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் திறன், ஆராய்ந்தறியும் திறன் போன்றவை இத்துறைக்கு மிக அவசியமான குணங்களாகும்.

புரோகிராமர், டீம் லீடர், ப்ராஜெக்ட் மானேஜர் என்று படிப்படியாக பல்வேறு நிலைகளில் முன்னேறிச் செல்ல மேலே சொன்ன தகுதிகள் மிக அவசியமாகின்றன.

 எதனை அடிப்படையாகக் கொண்டு ஒருவரை வேலைக்கு எடுக்கிறார்கள்?

பெரும்பாலும் சாஃப்ட்வேர்  துறைப் பணி என்பது மேலைநாட்டவர்களுடன் சம்பந்தப்பட்டது என்பதால், அவர்களுடன் ப்ராஜெக்ட் சம்பந்தமாக பேச வேண்டி இருக்கும் என்பதால், இத்துறைக்குத் தேவையான தகுதிகளில் ஆங்கிலம் முதலிடம் பெறுகிறது. சரளமாக நுனிநாக்கு ஆங்கிலம் தேவையில்லை; சொல்ல வேண்டிய விஷயத்தைத் தெளிவாகச் சொல்லுகின்ற, புரியும்படி பேசுகின்ற அளவுக்கான ஆங்கிலப் புலமை

இத்துறைப் பணியின் அடிப்படையே திறனாய்வு செய்கின்ற திறன்தான். ஆராய்ந்து அறிகின்ற தன்மை என்று பொருள்படுகின்ற இத்திறன் கணிதத்தின் அடிப்படையில் அமையப்பெறும். கணித மேதை இராமானுஜம் அளவுக்கு புலமை இல்லாவிட்டாலும், லாஜிக்குகளை விரைவாக போடக் கூடிய அளவுக்கு கணிதத்தில் ஆர்வம் தேவை.

கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற காம்பஸ் இண்டர்வியூக்களில், மதிப்பெண் அடிப்படையிலான தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது. மதிப்பெண்களை வைத்து அவர்களின் அறிவை நிர்ணயம் செய்வதில்லை. அதை வைத்து அவர்களின் மனோநிலையை ஆராய்கிறார்கள். ஒவ்வொரு செமஸ்டரிலும் ஏற்ற இறக்கமாக மதிப்பெண்களைப் பெற்று, ஒட்டு மொத்தமாக  80,90,95 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருப்பவர்களை விட,   ஏற்ற இறக்கமில்லாமல் எல்லா செமஸ்டரிலும் ஆவரேஜாக மதிப்பெண் பெற்றிருப்பவர்கள் 60-70 சதவிகித மதிப்பெண்ணே பெற்றிருந்தாலும், அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் அவர்களால் தான் ப்ராஜெக்ட்டின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரே மாதிரி மனநிலையில் பணி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

ப்ராஜெக்ட், இண்டன்ஷிப், பேப்பர் பிரசண்டேஷன் என்று விடுமுறை நாட்களை பயனுள்ளதாக்கி வைத்துக் கொள்பவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமைக் கொடுக்கப்படுகிறது.

சதா புத்தகமும், கையுமாக இருந்து படித்து 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருப்பவர்களை விட, மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாலும், தயக்கமில்லாமல் பேசுபவர்களும், தலைமைத் தாங்கும் திறன் பெற்றவர்களும், ஆங்கிலத்தில் சரளமாக பேசுபவர்களும், விரைவாக முடிவெடுக்கும் திறன் உள்ளவர்களும் தான் இத்துறைக்கு தேவைப்படுகிறார்கள்.

சகிப்புத் தன்மை, பொறுமை, விட்டுக் கொடுக்கும் ஆற்றல், குழுவாக இயங்குவதில் சிரமம் இல்லாமை இவற்றை வைத்து தான் ஐ.டி துறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 கணிப்பொறி துறை பெண்களுக்கு ஏற்ற துறைதானா? அதில் அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் என்னென்ன? 

நிச்சயமாக ஐ.டி துறை பெண்களுக்கு மிகப் பொருத்தமான துறை தான். ஏனெனில் நான் ஏற்கனவே சொன்ன சகிப்புத் தன்மை, பொறுமை, விட்டுக் கொடுக்கும் ஆற்றல், குழுவாக இயங்குவதில் சிரமம் இல்லாமை, தலைமை தாங்கும் ஆற்றல், விரைவாக முடிவெடுக்கும் திறன், அனைவரையும் அணுசரித்துச் செல்லும் குணம், சொல்வதை புரியும்படி சொல்லுகின்ற ஆற்றல், மல்டி டாஸ்க்கிங் போன்றவை இயல்பாகவே குடும்பச் சூழலிலேயே பெண்களுக்கு இருப்பதால் இத்துறையில் பெண்களால் சுலபமாக வெற்றி பெற முடியும்; முடிகிறது.

எல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போலவே, ஆண்களோடு இணைந்து பணிபுரிந்து வெற்றி பெற வேண்டி இருப்பதால், ஆண்களோடு பழகுவதில் கண்ணியமாக கவனமாக இருக்க வேண்டும். நட்பாகப் பழகுவதிலும் வரைமுறை வைத்துக் கொண்டு ‘நான் இப்படித் தான்’ என்ற ஆளுமையை ஒவ்வொரு பெண்ணும் ஆரம்பத்தில் இருந்தே எதிராளியின் மனதில் விதைத்து விட்டால், உளவியல் சிக்கல் இல்லாமல் நல்லதொரு நட்பை உருவாக்கிக் கொள்ள முடியும். அப்புறம் என்ன வேலையில் கவனம் செலுத்தி, ஜமாய்க்க வேண்டியது தான் பெண்களின் வேலை.

ஆண், பெண் என அனைவரும் இணைந்து பரிந்தால் மட்டுமே ஐ.டி துறை என்றல்ல எல்லா துறைகளிலும் வெற்றி பெற முடியும்.

பெட்டி செய்தி!

1970 களிலேயே என் அம்மா, அப்பா இருவரும்(தொலைபேசித் துறையில் 40 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்). இருவருமே  பகல் நேரப் பணி, இரவு நேரப் பணி என்று 24 மணி நேர சுழற்சிப் பணியில் இருந்தவர்கள். தீபாவளி, பொங்கல் அன்று கூட வேலைக்குச் செல்ல வேண்டி இருக்கும்.

ஒருசில நாட்கள் என் அம்மாவின் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறேன். ஜே…ஜே என்று எங்கும் பெண்கள் பம்பரமாய்ச் சுழன்று, சிரித்த முகத்துடன் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஒரு நாளும் வேலை செய்கின்ற இடத்தைப் பற்றியும், செய்கின்ற வேலையைப் பற்றியும் முகம் சுழித்தோ, சலிப்பான வார்த்தைகளைக் கொட்டியோ, திட்டியோ பார்த்ததே இல்லை.

அன்று, பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த முதல் தலைமுறை. அந்த காலகட்டத்தில் சமுதாயத்தின் ஆதரவு பெண்களுக்கு குறைவாகவே கிடைத்தன. அன்றே ஆயிரக்கணக்கான பெண்கள் தொலைபேசித் துறை, தபால்-தந்தித் துறை, நர்ஸிங் என்று பொதுத்துறைகளில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று குடும்பம், சமுதாயம் என்று அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைப்பதால் ஐ.டி துறையில் பணி புரிவது அத்தனை கடினமான செயல் அல்ல.

 இந்த துறையின் நன்மை, தீமைகள் பற்றி? 

எல்லாத் துறைகளையும் போலவே தான் இத்துறையிலும்… நன்மைகள், தீமைகள் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அதையும் மீறி இரண்டையும் பிரித்துச் சொல்ல வேண்டும் என்றால்…

  1. ஒயிட் காலர் ஜாப்,
  2. கை நிறைய சம்பளம்,
  3. ஒன்றுக்கு இரண்டாய் கார்கள்,
  4. குடியிருக்க ஒரு வீடு, ஹை-வையான ஏரியாவில் ஒரு பங்களா,
  5. நினைத்ததை வாங்கக் கூடிய பொருளாதார வசதி

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தீமை என்பது இந்தப் பணியினால், பணியாளர்கள் தாங்களாக ஏற்படுத்திக் கொள்வதே ஆகும்.

  1. வேலைக்காக அதிகம் அலைந்து திரிந்து அலுக்காமல், அதிகம் கஷ்டப்படாமல், காம்பஸ் இண்டர்வியூ மூலம் கிடைத்து விடும் வேலை வாய்ப்பு; கல்லூரி படிப்பு முடிவதற்குள்ளாகவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்; ஐந்து இலக்க சம்பளம்; இவற்றின் காரணமாய் சற்றே அலட்சியம் மனோபாவம்;
  2. நினைத்ததை நினைத்த நேரத்தில் சாப்பிடுவது; இதன் காரணமாய் உடல் நலக் கோளாறுகள்;
  3. இரவு நீண்ட நேரம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்குதல்; இதன் காரணமாய் மந்தமாகிப் போகும் மனநிலை;
  4. சாப்பாடு, தூக்கம், வேலை இவை அனைத்தையுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் வரைமுறையற்ற வாழ்க்கை முறை.
  5. மனிதர்களை விட சமூகவலைதளங்களில் முகமூடி மனிதர்களின் உறவுகள் மீது பிடிப்பு;
  6. தங்கள் பொருளாதார வளர்ச்சி, தங்கள் வேலைவாய்ப்புகள், இவற்றைச் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய தலைமுறையினர் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் முன்பளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், குடும்பம் மற்றும் சமூக பிணைப்பைத் தொலைத்து விட்டு பொருளாதாரத்தில் உயர்ந்து விட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
  7. செய்கின்ற வேலையில் பிடிப்பு; அதன் காரணமாய் ஏற்படுகின்ற சந்தோஷம்; மன நிறைவு எதுவுமே இவர்கள் மனதை உற்சாகப்படுத்துவதில்லை என்பதே உண்மை. இதன் காரணமாய் ஏற்படுவதே ஸ்ட்ரெஸ்….இதை விரட்டும் ஆயுதம் இவர்கள் கைகளில் தான் உள்ளது.
  8. செய்கின்ற வேலையை நேசித்து செய்தல்; 100 சதவிகிதம் ஈடுபாட்டுடன் பணியாற்றுதல்; கிடைக்கின்ற சம்பளம் போதும் என்கின்ற மனநிறைவு; நேரத்துக்கு சரியான சாப்பாடு, தூக்கம், வீட்டு மனிதர்களிடம், குறிப்பாக பெரியோர்களிடம் அக்கறைக் காட்டுதல், மனம் விட்டுப் பேசுதல் போன்ற குணநலன்களை வளர்த்துக் கொண்டால் போதும் ஸ்ட்ரெஸ் காணாமல் போய்விடும்…

படித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள் நாளுக்குநாள் அதிகரிக்கிறார்களே. அது பற்றி?

இன்ஜினியரிங்கில் அனைத்துப் பிரிவினருமே ஐ.டி துறையை நோக்கி குறி வைப்பதால் தான் சிறு நகர்புறங்களில் படித்து விட்டு வரும் இளைஞர்கள் வேலைக்காகக் கஷ்டப்படுகிறார்கள். தவிர M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், அறிவியல், MCA, MBA என்று பல்வேறு துறை சார்ந்தவர்களும் இத்துறையில் நுழையவே ஆசைப்படுகிறார்கள்.

ஆங்கிலத்தில் பேசுதல், லாஜிக்கல் திங்கிங், குழு விவாதம், பர்சனாலிடி போன்றவற்றில் கவனம் எடுத்துக் கொண்டு சற்றே பயிற்சி எடுத்துக் கொண்டால் அவர்களுக்கும் இத்துறையில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக தன்னம்பிக்கையுடன் தைரியமாக சூழலை எதிர்கொள்ளல் அவசியமாகிறது.

சில நிறுவனங்கள் திடீரென வேலையை விட்டு அனுப்புகிறார்களே? இதற்கான காரணம் என்ன?  

ஐ.டி துறையைப் பொறுத்தவரை வேலைக்குச் சேர்ந்த நாளில் இருந்து பணியாளர்களின் திறன்(Performance) கண்காணிக்கப்பட ஆரம்பிக்கிறது. அவர்களின் பணி செய்யும் திறன், ஆளுமைத் திறன், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கு, தன்னம்பிக்கை, நேர்மை, நேரம் தவறாமை போன்றவை கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

எந்த நாட்டில் இருந்து ப்ராஜெக்ட் கிடைக்கிறதோ, அந்த நாட்டில் இருந்து ப்ராஜெக்ட் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டால் அல்லது குறைக்கப்பட்டால் முதலில் வேலையில் இருந்து நீக்கப்படுபவர்கள் யாராக இருப்பார்கள் தெரியுமா? கண்காணிக்கப்பட்ட பணியாளர்களில் திறன் குறைந்தவர்கள் தான்.

எனவே ‘யார் நம்மை கவனிக்கப் போகிறார்கள்?’ என்ற மனப்பாங்குடன் செயல்படுகின்றவர்கள் எந்நேரத்திலும் வேலையில் இருந்து எந்த காரணத்துக்காகவும் நீக்கப்படலாம்.

8 மணி நேரத்திற்கும் மேலாக சில நிறுவனங்கள் அடிமைகளைப் போல் இரவு, பகல் என்று கூட பார்க்காமல் வேலை வாங்குகிறார்களே? அது பற்றி?

நான் ஏற்கனவே சொன்னதைப் போல,  கல்லூரிப் படிப்பு முடிவதற்குள்ளாகவே வேலைக்கு வந்து விடும் இளைஞர்களுக்கு பணி குறித்த அனுபவம் கிடைப்பதற்கே 1 வருடம் 2 வருடம் ஆகும். ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட பணியில் பூரண அறிவு கிடைப்பதற்குள்ளாகவே, அவர்கள் வேறு நிறுவனம் மாறி விடுகிறார்கள்.

இதன் காரணமாய்(பூரண அனுபவமின்மையால்) குறைந்த நேரத்தில் முடிக்கக் கூடிய வேலையாக இருந்தாலும் அவர்களால் அந்த நேரத்துக்குள் முடிக்க முடிவதில்லை. நீண்ட நேரம் வேலை செய்தால் தான் முடிக்க முடிகிறது. அது தான் உண்மை. அதனால் தான் 8 மணி நேரத்துக்குப் பிறகும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

எந்த நிறுவனமும் யாரையும் அவர்கள் பணி நேரத்துக்கு மேல் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்துவதில்லை. குறித்த நேரத்துக்குள் வேலையை முடிக்க முடியாததால் தான் வேலை நேரத்துக்குப் பிறகும் வேலை செய்ய வேண்டியுள்ளது.

ஒருவருக்கு  இந்த துறையில் ஆயுள்காலம் என்ன?

ஒருவர் எத்தனை வருடங்கள் வேலை செய்ய விருப்பமோ அத்தனை வருடங்கள் வேலை செய்ய முடியும். ஆனால் பணியாளர்களுக்குத் தான் ஒரே நிறுவனத்தில் நீண்ட வருடங்கள் பணி செய்ய விருப்பம் இருப்பதில்லை. பணிசெய்யும் நிறுவனத்தை மாற்றிக் கொண்டே இருப்பது ஒருவித போதையாகவே மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

துறையின் வருங்காலம் எப்படி இருக்கும்? 

இனி எங்கும், எதிலும், எப்போதும் கம்ப்யூட்டரும், சாஃப்ட்வேரும் தான் என்கின்ற நிலை உருவாகி பலவருடங்களாகி விட்டன. கலை, இலக்கியம், மருத்துவம், வங்கி, கட்டிடத் துறை, கட்டுமானத் துறை, கல்வித்துறை, விளம்பரத் துறை, விளையாட்டுத் துறை, பொழுதுபோக்குத் துறை என்று ஆங்கிங்கெனாதபடி எல்லா துறைகளும் சாஃப்ட்வேர் மயமாகி வருவதால், இத்துறைக்கு என்றுமே மார்கண்டேயன் வாழ்வு தான்.

வளர்ச்சி, வீழ்ச்சி என்பது அயல்நாடுகளில் இருந்து கிடைக்கின்ற ப்ராஜெக்ட்டுகளின் வரவு கூடுவதையும், குறைவதையும் பொருத்தே அமைகிறது.

இத்துறையில் நம் நாட்டிலேயே செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.

எவ்வளவு சம்பாதிக்கலாம்? 

தொடக்க நிலை சம்பளமாக மாதம் 15,000-த்தில் இருந்துத் தொடங்கி, உயர்மட்ட சம்பளமாக 1,00,000 வரை கிடைக்கிறது. ஒருசில நிறுவனங்கள் தொடர்ச்சியாக 5 வருடத்துக்கு மேல் பணி செய்கின்றவர்களை ஷேர் ஹோல்டராக்கி அவர்களை தங்கள் நிறுவனத்தின் பங்குதாரராகவே மாற்றி விடுகிறார்கள்.

பணிநிலை உயர உயர சம்பளமும், பொறுப்புகளும் அதிகரிக்கவே செய்கிறது.

ஒருவர் மென்மேலும் வளர்ச்சியடைய என்ன செய்யவேண்டும்? 

  1. கொடுக்கப்படுகின்ற வேலையில் முழுமையான மனதுடன் ஈடுபடுதல்,
  2. மானேஜ்மெண்ட் கூடுதல் பணியைக் கொடுத்தாலும் அதையும் செய்து காட்டி தங்கள் திறமையை நிரூபித்தல்,
  3. எந்த சூழலையும் பதட்டப்படாமல், கோபப்படாமல், சலிப்படையாமல் எதிர்நோக்குகின்ற மனப்பாங்கு,
  4. நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆதரவளித்து செயல்படுதல்,
  5. அவசரம் சமயத்துக்கு விடுமுறை தினங்களில் அலுவலகத்துக்கு அழைக்கும் போது, சாக்கு சொல்லி தட்டிக் கழிக்காமல் சென்று வருதல்,
  6. கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யாமல், அதைச் சார்ந்த அனைத்துப் பிரிவு வேலைகளிலும் ஈடுபாடு காண்பித்து திறமையை வளர்த்துக் கொள்ளல்,
  7. டீம் உறுப்பினர்களோடு இணைந்து பணி செய்தல்,
  8. கூடிமானவரை மற்றவர்களைப் பற்றி குற்றம் குறை சொல்லாத தன்மை,
  9. அனுசரித்துச் செல்லுகின்ற குணம், ஆளுமைத் திறன்

இப்படிப் பட்ட குணநலன்கள் இருந்து விட்டால் போதும் இத்துறையில் மேலே சென்று கொண்டே இருக்கலாம்.

ஐ.டி துறையில் பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய இயலுமா?

தொலைதூர கம்ப்யூட்டர்களையும் நம் இருப்பிடத்தில் இருந்தே இயக்கக் கூடிய நிலையில் தொழில்நுட்பம் உருவாகியுள்ளதால்(Remote Computer Accessing) சில ஐ.டி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணிகளை முடிக்கக் கூடிய Work From Home வசதியை கொடுத்துள்ளது. சாஃப்ட்வேர் டெவெலப்மெண்ட், புரோகிராமிங், குவாலிடி செக் போன்ற பணிகளை வீட்டில் இருந்தபடி செய்ய அனுமதிக்கின்றன. ஆனால் அவற்றை நிரந்தரமாக வீட்டில் இருந்தபடி செய்ய அனுமதிப்பதில்லை. சில நெருக்கடியான நேரங்களில் மட்டுமே வீட்டில் இருந்து பணி செய்யும் வசதிக்கு பர்மிஷன் அளிக்கின்றன.

டேட்டா செக்யூரிடி அதிகம் தேவைப்படாத ஐ.டிதுறை பணிகள் அனைத்துமே வீட்டில் இருந்து செய்ய இயலும். ஆனால், ஐ.டி நிறுவனங்கள் தங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப மாதத்தில் இத்தனை நாட்கள் வீட்டில் இருந்து வேலையை முடிக்கலாம் என்று சலுகைகள் கொடுக்கின்றன.

ஆனால் நிறுவனம் சாராதவர்களுக்கு, அதாவது தங்கள் நிறுவனத்தில் பணி செய்யாதவர்களுக்கு ஐ.டி நிறுவனங்கள் Work From Home வசதியைக் கொடுப்பதில்லை.

நேர்காணல் செய்தவர்: சா. வடிவரசு, விகடன்

(Visited 915 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon