தினமலர் ஆன்லைனில் வெளியான நேர்காணல்!
நேர்காணல் செய்தவர்: எல். முருகராஜ், தினமலர்
வெப்சைட்டில் வாசிக்க: Dinamalar OCT 22, 2013
நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்!
திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்த பெண் பேச்சாளரும் மேடைக்கு வந்தார். பதினைந்து நிமிடம் பேச நினைத்து வந்தவர் மாணவர்களின் ஆர்வத்தையும்,அமைதியையும் பார்த்துவிட்டு 45 நிமிடங்கள் பேசினார்.
எதுகை, மோனையுடனோ, இலக்கிய இலக்கணத்துடனோ, சவால் விடும் சரித்திர சான்றுகளுடனோ அவர் பேசவில்லை. சாதாரணமாக , ஆணித்தரமாக, மென்மையாக ஆனால் அழுத்தமாக சகோதர, சகோதரிகளிடம் பேசுவது போல பரிவுடன், பாசத்துடன் பேசினார்.
அவர் பேசினார் என்பதை விட கொஞ்சம், கொஞ்சமாய் கேட்பவர் மனதில் தன்னம்பிக்கை எனும் விதையை ஆழமாக விதைத்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவர் பேசப்பேச யார் இவர்? என்றறியும் ஆர்வம் இப்போது அரங்கில் இருந்த ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது.
யார் இவர்?
காம்கேர் கே.புவனேஸ்வரி, எந்தவித பெரிய பின்னணியும் இல்லாமல் சுயம்புவாக முளைத்தவர், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உரமாக்கி வளர்ந்தவர், தான் சார்ந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எப்போதும் எண்ணுபவர், இந்த எண்ணத்தினால் தனித்துவம் பெற்றவர்.
சென்னையில் உள்ள காம்கேர் சாப்ட் வேர் நிறுவனத்தின் சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குனர்.கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்தியா தொடர்பான திட்டங்களை மட்டுமே தன் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்து வெளியிட்டு வருபவர்.
சாப்ட்வேர் துறை வல்லுநர், கல்வியாளர், தொழில் ஆலோசகர், கிரியேடிவ் டைரக்டர், டாக்குமெண்டரி பிலிம் தயாரிப்பாளர், பதிப்பாளர், எழுத்தாளர் என்று இவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இருபதிலேயே அறுபதின் சாதனையை தொட்டவர்.
தன் நிறுவனத்தின் மூலமாகவும், தனது வாடிக்கையாள நிறுவனங்களின் மூலமாகவும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியவர்.
நம் நாட்டில் கம்ப்யூட்டர் பிரபலமாவதற்கு முன்பே தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான புத்தகங்கள் எழுதியவர். தமிழ் ஆர்வாலரான இவர் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக கம்ப்யூட்டர் தொடர்பான பல புத்தகங்களை எழுதியவர், எழுதிக்கொண்டிருப்பவர்.
இவர் எழுதிய பல புத்தகங்கள் பல பல்கலைகழகங்களில் பாடபுத்தகங்களாக உள்ளன. கம்ப்யூட்டர் தொடர்பாக எழுபதற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர பக்தி, இலக்கியம், சமூகம், கல்வி, குழந்தை இலக்கியம் ஆகிய தலைப்புகளிலும் எழுதி வருபவர்.
இவரது நிறுவனத்தின் மல்டி மீடியா தயாரிப்புகள் மற்றும் ஆவணபடங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் இவரே. அனிமேஷனில் உருவாக்கிய கந்தர் சஷ்டியும், அனைத்து பதிகங்களையும் கொண்ட திருவாசக மல்டி மீடியா சி.டி.,யும் மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டவையாகும்.
தனது பெற்றோர் பெயரிலான பத்ம கிருஷ் அறக்கட்டளை மூலமாக தொண்டு செய்து வருபவர். , தனது கொண்டாட்டங்கள் அனைத்தையும் ஆதரவில்லாத குழந்தைகளுடனும், மாற்றுத் திறனாளிகளுடனும் பகிர்ந்து கொள்பவர். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் போதாது என்று இருக்கக் கூடியவர், வளரும் சமுதாயம் இனிதாக மாறவேண்டும் என்ற அக்கறையுடன் கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று பேசிவருபவர்.
இவரைப்பற்றிய அறிமுகம்தான் இதுதான். அன்று அவர் பேசியதில் இருந்து சுருக்கமாய் சில குறிப்புகள். இந்த குறிப்புகள் அவர் மீது இன்னும் நேசம் கொள்ளச் செய்யும்.
திறமை என்பது பாட்டுப் பாடுவதும், படம் வரைவதும் மட்டுமல்ல எப்பொழுதும் சிரித்த முகத்தைக் கொண்டிருப்பது, தைரியமாக வாழ்வது, கடமை தவறாமல் இருப்பது , நட்பாய் பழகுவது, எந்த வேலையையும் நேசித்து செய்வது… இவை எல்லாம் கூட திறமைகள்தான். திறமை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது, நம்மிடம் உள்ள திறமைகளை நம் அனுபவத்தில் வெளிக்கொண்டு வருவதில்தான் வெற்றி இருக்கிறது. படிப்பு என்பது வேலைக்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே என்கின்ற எண்ணத்தை மாற்றுங்கள், பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதை முதலீடாக நினைக்காதீர்கள், ஐடி பீல்டு மட்டுமே வாழ்க்கையில்லை.
உங்கள் திறமையால் இந்த உலகை ஆள ஆயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன, உங்கள் கோபம், சிடுசிடுப்பு,ஆவேசம், படபடப்பு போன்ற குணங்களை தூக்கிஎறிந்து பாருங்கள் பெரிய மாற்றம் ஏற்படும். டி.வி.,சீரியல்களில் பொழுதைக் கழிக்காமல் உண்மையான உலகத்தைக் காணவும், அனுபவம் பெறவும் வீட்டைத் தாண்டி வெளியே வாருங்கள். வெறும் படிப்பு மட்டும் போதாது உங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உலகம் வசப்படும். கனவு, கற்பனை, உழைப்போடு உங்கள் தொழிலை, வேலையை, படிப்பை நேசித்து செய்யுங்கள் வெற்றி நிச்சயம் இது என் ஆசிமட்டுமல்ல அனுபவ பூர்வமான உண்மையும் கூட. மேற்கண்டவாறு காம்கேர் கே.புவனேஸ்வரி பேசி முடித்த போது மீண்டும் அரங்கம் நிறைந்தது- இந்த முறை கைதட்டலால்.
– எல்.முருகராஜ், தினமலர்