பேட்டி கொடுப்பதைப் போலவே!
இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி (TTN) நேர்காணல். அயல்நாட்டு தமிழர்களுக்கான நிகழ்ச்சி. (புகைப்படம்: TTN ஸ்டுடியோவில் என்னை நேர்காணல் செய்தவர்கள் உயர்திரு. மாலா பாலு மற்றும் கார்மெல், வருடம் 2000.)
நேர்காணலின் இறுதியில் மாலா பாலு அவர்கள் மென்மையான குரலில் ஒரு கேள்வி கேட்டார்.
‘நீங்கள் நடத்துவதோ சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனம். ஆனாலும் தமிழில் தொழில்நுட்பத்தை எழுத வேண்டும் என எப்படி ஆர்வம் வந்தது?’
நான் எத்தனை வெள்ளந்தியாக பதில் சொல்லி இருந்தேன் தெரியுமா?
‘வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள், பப்ளிஷர்கள் கேட்கிறார்கள். அதனால் எழுதிக்கொடுக்கிறேன்…’
ஆனால் நான் என்ன சொல்லி இருக்க வேண்டும்? ‘எனக்கு சிறுவயதிலேயே தமிழில் ஆர்வம். தமிழ் தான் என் உயிர் மூச்சு. தமிழுக்காக உழைப்பதே என் நோக்கம். தமிழ் என் உயிர் நாடி. தமிழை வளர்ப்பதே குறிக்கோள்’ அப்படி இப்படி என்றல்லவா பேசி இருக்க வேண்டும்.
ஏன் இப்படி தோன்றியது என்றால் இப்போதெல்லாம் சிறியதும் பெரியதுமாக நிறைய பேட்டிகள் பார்க்கிறேன். சிறிய அளவில் ஏதேனும் சிறுதொழில் தொடங்குபவர்கள் கூட எப்படி பதில் சொல்கிறார்கள் தெரியுமா? அவர்கள் பேச்சிலும் உடல்மொழியிலும் செயற்கைத்தனம் நிறைய.
‘எங்கள் வாழ்க்கை இலட்சியமே இதுதான்…
சின்ன வயசில் இருந்தே….
எதிர்காலத்துக்காக…
இந்த சமுதாயத்துக்காக…
இளைய தலைமுறையினருக்காக….
சமூகம் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக…’ என்று வார்த்தைகளை எத்தனை லாவகமாக பயன்படுத்துகிறார்கள்?
தாங்கள் செய்யும் தொழிலை முழுமையாக கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ பேட்டிக் கொடுத்தால் எப்படி பேச வேண்டும் என்று நன்றாக பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள் போல. அத்தனை சாதுர்யமான நாவன்மை.
தவறு என்று சொல்லவில்லை. தங்கள் திறமையை மார்க்கெட்டிங் செய்வதும் இன்றைய சூழலில் மிக முக்கியமான விஷயமாக உள்ளதே!
இளைஞர்கள் மட்டுமல்ல 40+, 50+, 60+ ல் இருப்பவர்களும் கூட சாதாரணமாக பேசினாலே பேட்டி கொடுப்பதைப் போலவும்,விவாதங்களில் கலந்துகொண்டு பேசுவதைப் போலவுமே பேசுகிறார்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software