வாழ்நாள் கெளரவம்!
ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி சம்மந்தமான சாஃப்ட்வேர் தயாரிப்புக்காக பேசுவதற்கு என்னை சந்திக்க வந்திருந்தார் தொழில்நுட்பப் பிரிவில் உயர் பதவியில் இருக்கும் பொறியாளர் ஒருவர். ஏற்கெனவே அந்த பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக நான் எழுதிய சில தொழில்நுட்பப் புத்தகங்கள் இருக்கின்றன.
அவர் என்னை சந்திக்க வந்திருந்த அன்று எங்கள் அலுவலகத்தில் காம்கேரின் 30 வருட உழைப்பை ஆவணப்படுத்தும் ப்ராஜெக்ட்டும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இடையிடையே என் உதவியாளரிடம் நான் சில விஷயங்களை பேச வேண்டி இருந்தது. அதை கவனித்தவர் என்ன ஏது என விசாரித்தார்.
இதுவரை வெளியான நேர்காணல்கள் 150-ஐத் தாண்டுகிறது. அவற்றையும் ஆவணப்படுத்துகிறோம் என சொன்னபோது அவர் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டார்.
முழு விவரத்தையும் கேட்டறிந்தவர் நாங்கள் அறிந்தவரை ஒரு நிறுவனத்தைச் சார்ந்த நேர்காணல்கள் நூற்றுக்கணக்கில் என்பதை கேள்விப்பட்டதே இல்லை. உங்கள் ஆவணத் தொகுப்பில் உள்ள உங்கள் நேர்காணல்களை மட்டும் எங்கள் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வைக்கலாம் என நினைக்கிறோம். அதற்கு ‘Business Women – A Role Model iCON’ என பெயரிடலாம். இப்போதைக்கு இந்தத் தலைப்பு இருக்கட்டும். எல்லாம் முடிவான பிறகு தலைப்பில் மாற்றம் தேவையானால் செய்துகொள்ளலாம். நானும் எங்கள் மற்ற ஸ்டாஃப்களிடமும் பேசுகிறேன் என்றார்.
அவை முழுவதுமாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலது மட்டுமோ அல்லது மொத்தத்தையும் கேள்வி பதிலாக்கி தொழில்நுட்பம், வளர்ப்புமுறை, வேலைவாய்ப்பு, தொழில்முன்னேற்றம் என தலைப்பு வாரியாக பிரித்து 500 கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக இளைய தலைமுறையினருக்குப் பயன் கொடுக்கும் விதத்தில் வர உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி பல்கலைக்கழகங்களில் நான் எழுதிய பல நூல்கள் பாடத்திட்டமாக வைக்கப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
ஆனால் இப்போது நான் சொன்ன விஷயம் எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. புதிதான ஓர் உணர்வையும் கொடுக்கிறது.
ஒருவர் எழுதும் நூல்கள் பாடத்திட்டமாகலாம். ஆனால் ஒருவரின் நேர்காணல்கள் ‘மாதிரி நூலாவது’ நான் இதுவரை அறியாத ஒன்று. இருந்திருக்கலாம், இருக்கலாம் ஆனால் நான் அறியவில்லை என்றுதான் சொல்லி இருக்கிறேன்.
இதை என் 30 வருட உழைப்புக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமாக கருதுகிறேன்.
எங்கள் காம்கேரின் எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னணியில் உறுதுணையாக இருந்த இறைவனுக்கும், இயற்கைக்கும், பெற்றோருக்கும், உடன்பிறந்தோருக்கும், எங்கள் காம்கேரில் பணியாற்றியவர்களும், இன்று எங்களிடம் பணியாற்றி வரும் பொறியாளர்களுக்கும், என் திறமையையும் எங்கள் காம்கேரின் படைப்புகளையும் உலகறியச் செய்த அனைத்து மீடியாக்களுக்கும் என் அன்பும் நன்றியும்!
எந்தப் பல்கலைக்கழகம் என்பதை அதிகாரப்பூர்வமான கடிதம் வந்ததும் அறிவிக்கிறேன்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
டிசம்பர் 9, 2022 | வெள்ளிக்கிழமை