இவ்வளவுதான் வலியும், வலி நிவாரணமும்!
காலையில் வழக்கத்துக்கு மாறாய் தலைவலி மண்டையைப் பிளக்க கண் விழித்தேன்.
ஸ்வாமி அறையில் பிள்ளையாருக்கு அட்டெண்டஸ் போட்டுவிட்டு, பால்கனி கதவைத் திறந்தேன். கும்மிருட்டு. மழை மெல்லியதாய் பூமியை நனைத்துக்கொண்டிருந்தது.
சுடச்சுட டிகாஷன் போட்டு அது இறங்கும் வரை நெற்றியின் இருபக்கத்தையும் அழுந்தப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். டிகாஷன் சொட்டு சொட்டாய் மெல்லிய சப்தத்துடன் இறங்கிக்கொண்டிருந்தது. அந்த சப்தமும் டிகாஷன் வாசனையும் தலைவலிக்கு இதமாக இருந்தது.
டிகாஷன் தயாரானதும் காபி குடித்தேன். தலைவலி விடாப்பிடியாய் இருந்தது. ஆனால் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உணர்ந்தேன்.
மாத்திரை சாப்பிட்டுவிட்டு அப்படியே போய் திரும்பவும் தூங்கலாம்தான். ஆனால் என் தலைவலியைப் பற்றி எனக்குத் தெரியும். சும்மா உட்கார்ந்திருந்தால் இன்னும் கஷ்டப்படுத்தும்.
மாத்திரை எடுக்கவில்லை. ஆனால் அதைவிட ஒரு பிரம்மாயுதத்தை எடுத்தேன். அப்பா அம்மா உறங்கிக்கொண்டிருக்கும் அறையைத் தவிர எல்லா இடங்களையும் சுத்தமாகப் பெருக்கினேன். கமகமவென கம்ஃபர்ட் கலந்த தண்ணீரால் துடைத்தேன். வாஷிங் மெஷினில் போடாமல் கையால் தோய்க்க வேண்டி இருந்த துணிகளை தோய்த்து உணர்த்தினேன்.
அதிகாலை நேரத்து மழை, குளிர் காற்று தண்ணீர் ஐஸ் போல சில்லிட்டது. எதையும் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாயினராக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
பொதுவாக காலை நேரத்தில் இதுபோன்ற வேலைகளை செய்ய மாட்டேன். அலுவலக வேலைகளுக்கான முன்னேற்பாடுகளை மட்டுமே செய்வேன். கொஞ்சம் எழுதுவேன். நிறைய சிந்தனைகளுடன் யோசிப்பேன்.
ஆனால் இன்று அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு வேலைகளை செய்தேன்.
கெய்சரை ஆன் செய்துவிட்டு வெந்நீர் சுடும் இடைவெளியில் ஆவி பிடித்தேன். கொஞ்சம் தேவலை போல் இருந்தது.
வெந்நீர் சுட்டதும் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துவிட்டு வந்தேன். சுவாமிக்கு நல்லெண்ணை விளக்கு ஏற்றிவிட்டு ஊதுவத்தியையும் ஏற்றி வைத்தேன். வீடே கமகமவென்றிருந்தது.
மீண்டும் ஒரு டம்ளர் சூடாக காபி கலந்து எடுத்து வந்து ஹாலில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து பால்கனி வழியாக மழையை ரசித்தபடி காபி குடித்தேன்.
இதற்குள் காலை 5.15 ஆகி இருந்ததால் டிவியை ஆன் செய்து சுப்ரபாதம் போட்டேன். சப்தத்தை மெலிதாக வைத்தேன்.
வீட்டில் இருந்தால் அலுவலக வேலை செய்வதற்கென ஒரு லேப்டாப், ஒரு டெஸ்க்டாப், மைக், கேமிரா என அலுவலக செட் அப் செய்து வைத்திருக்கிறேன். அதுதான் வீட்டில் இருக்கும் நேரத்தில் என் யதாஸ்தானம்.
அங்கு சென்று அமர்ந்து பதில் அனுப்ப வேண்டிய இமெயில்களுக்கு மெயில் அனுப்பினேன். அலுவலக வாட்ஸ் அப்பில் கிளையிண்டுகள் சிலரது தேவைகளுக்கு பதில் அனுப்பினேன்.
பிறகு புரோகிராமிங் செய்ய வேண்டி இருந்தது. அதையும் செய்து முடித்தேன்.
இதற்குள் வெளியே கடும் இருட்டு விலகி கொஞ்சம் வெளுப்பாகி இருந்தது.
அப்போதுதான் நினைவுக்கு வந்தது என் தலைவலி குறித்து. தலையை ஆட்டிப் பார்த்தேன்.
‘போயே போச்சு’. வந்த சுவடு காணாமல் தலைவலி சுத்தமாக மறைந்திருந்தது.
இதுதான் எனக்கு நினைவு தெரிந்த நாளாய் சாதாரண சின்னச் சின்ன உடல் நலக் கோளாறுகளுக்கு நான் எடுக்கும் வைத்தியம்.
நான் கண்டும் காணாமல் விட்டால், மாத்திரைகள் இல்லாமலே உடல் வலி, தலைவலி இவை சீக்கிரமே ஓடிவிடும். ரொம்ப அதற்கு மதிப்புக் கொடுத்து படுத்துக்கொண்டு அந்த வலிகளை கவனித்துக் கொண்டிருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கீழே விழுந்த குழந்தையை நாம் கண்டு கொண்டால் அழுது தீர்க்கும், கண்டும் காணாமல் விட்டால் அதுபாட்டுக்குத் தானாகவே எழுந்து தன் வேலையைப் பார்க்கும்.
அதுபோல்தான் வலிகளை மறக்க நாம் அதனைப் பொருட்படுத்தாமல் வேறு வேலைகளில் கவனம் செலுத்தினால் வலியின் தாக்கம் நிச்சயம் குறையும்.
‘அம்மாடி செல்லம்’ என அதற்கு மதிப்புக் கொடுத்து உருகினால் அது நம்மை பாடாய் படுத்திவிடும்.
இவ்வளவுதான் வலியும், வலி நிவாரணமும்!
குறிப்பு: நான் இங்கு எழுதி இருப்பது சாதாரண உடல் வலி, தலைவலி போன்ற பொறுக்கத்தக்க பிரச்சனைகள் குறித்தே. தீவிரமான நோய்க்கு ஆளானவர்கள் தேவையான ஓய்வை எடுக்க வேண்டும். மருந்து மாத்திரை, உணவுக்கட்டுப்பாடு என அத்தனையிலும் கவனம் எடுக்க வேண்டும்.
நன்றி
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 11, 2022 | ஞாயிறு