நேரம் ரொம்ப முக்கியம்!
பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, விருது வழங்கி, வாழ்த்துரை நிகழ்த்த சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருக்கிறார்கள்.
என்ன நிகழ்ச்சி? யார் நடத்துவது? என்று? – விவரம் விரைவில் பதிவிடுகிறேன்.
அவர்கள் அனுப்பி இருந்த செய்தியில் எனக்குப் பிடித்த விஷயம் நிகழ்ச்சி நடைபெறும் நேரம்.
மாலை 4 to 6.30.
நிகழ்ச்சி நடத்துபவரிம் உடனடியாக என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். பயனுள்ள ‘மகிழ்ச்சி’ (எழுத்துப்பிழை அல்ல, மகிழ்ச்சியே தான்) என்பதால் அதை பொதுவெளியில் இங்கும் பகிர்கிறேன்.
சென்னை போன்ற பெருநகரங்களில் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மிகப் பொருத்தமான நேரம், மாலை நேரமானால் 7 மணிக்குள் முடித்துக்கொள்ளலாம்.
இரவு நேர புத்தகக் காட்சி எல்லாம் பலரும் நடத்துகிறார்கள். அந்த விவாதத்துக்குள் எல்லாம் நான் வரவில்லை. அதை நான் சரி தவறு என்றெல்லாம் சொல்லவில்லை. அது வேறு டாப்பிக்.
நான் சொல்ல வருவது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் இரவு 7 மணிக்குள் முடித்துக்கொள்வது பல பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
காரணம்.
உதாரணத்துக்கு, ஒரு நிகழ்ச்சி 6 மணி, 6.30 க்கு ஆரம்பமானால் முடிய 8 மணி, 8.30 மணியாவது ஆகும்.
அதன் பிறகு அவரவர்கள் வீடு சென்று சேர இரவு 10 மணி 11 மணி கூட ஆகலாம். அவரவர்கள் இருக்கும் இடம் பொருத்து, டிராஃபிக் பொருத்து.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக ஆண், பெண் பேதமில்லாமல் வயது வித்தியாசமில்லாமல் அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்வார்கள். அப்போதுதானே நிகழ்ச்சியும் சிறப்புறும்.
என்னவோ இதை பெண்கள் பாதுகாப்புக்கு மட்டும் சொல்வதாக நினைக்க வேண்டாம். ஆண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அல்லது குழந்தைகளுக்காவது பாதுகாப்பிருக்கிறதா?
வயதானவர்கள் என்றால் அவர்களுக்கு நேரத்துக்கு உணவு, மாத்திரை மருந்து இதுபோன்ற சங்கடங்கள்.
இளம் மற்றும் மத்திம வயதினர் என்றால் அவர்கள் வீட்டுக்குச் சென்று சேரும் வரை வீட்டில் உள்ளவர்கள் காத்திருக்க வேண்டும் அல்லவா?
நிகழ்ச்சியில் பார்வையாளராகவோ அல்லது நிகழ்ச்சியின் நாயக, நாயகிகளாகவோ கலந்துகொண்டு பத்திரமாக வீடு திரும்பும் வரை வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக இருக்க நிகழ்ச்சி நடத்தும் நேரத்தை மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது தொலைக்காட்சியில் ஒரு செய்தி. இன்று குடியரசு தினம். விடுமுறை. வீட்டில் இருந்ததால் சுடச்சுட அந்த செய்தி என் கண்களில் பட்டது.
கும்பகோணத்தில் ஸ்பீட் பிரேக்கர் செயின் திருடர்கள் பெருகி வருகிறார்களாம். கணவன் மனைவியாக பைக்கில் வரும்போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கும் இடங்களில் வண்டி மெதுவாகும் அல்லவா? அந்த நேரத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்கள் கழுத்தில் உள்ள தங்க செயின்களை பிடித்து இழுத்து திருடிச் செல்கிறார்களாம். அவர்களுக்கு ‘ஸ்பீட் பிரேக்கர் திருடர்கள்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
ஆக. ஆண்கள், பெண்கள், வயதில் பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என யாருக்குமே இங்கு பாதுகாப்பு கேள்விக்குறி.
அதனால்தான் சொல்கிறேன், நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் மற்ற விஷயங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நேரத்துக்கும் கொடுக்க வேண்டும் என.
நாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளை அப்படித்தான் செய்கிறோம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜனவரி 26, 2023 | வியாழன்