தர்மங்கள் தழைத்தோங்க!

தர்மங்கள் தழைத்தோங்க!

ஓவியர்: ஸ்யாம்.
கதை எழுதியவர்: கே. புவனேஸ்வரி
கதை வெளியான பத்திரிகை: ராஜம்

இந்தக் கதைக்கு ஓவியம் வரைந்தபோது ஓவியருக்கு வயது 15. இந்தக் கதை எழுதியபோது நான் கல்லூரியில் (பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) அடி எடுத்து வைத்திருந்தேன். அப்போது ராஜம் பத்திரிகையின் ஆசிரியர் / எடிட்டர் சந்திரா ராஜசேகர் அவர்கள்.

இந்தக் கதையை நான் எழுதி அனுப்பிய ஒரு வார காலத்தில் எடிட்டர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று வந்தது.

‘அம்மா பொய் சொல்கிறாள்’ என்ற தலைப்பு நெகடிவாக உள்ளதே. அம்மா எப்படி பொய் சொல்வாள் என்று கேட்டதுடன், அந்தத் தலைப்பை மாற்றிவிடலாமா என என் அனுமதியும் கேட்டிருந்தார்.

அதற்கு நான், ‘அந்தக் கதையே குழந்தையின் கண்ணோட்டத்தில்தான் செல்கிறது. தன் அம்மாவின் கோபத்தை அந்தக் குழந்தை தவறாக புரிந்துகொள்வதுதான் கான்செப்ட் என்பதால் அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை அம்மா பொய் சொல்கிறாள். எனவே, தலைப்பை மாற்ற வேண்டாம்’ என நான் பதில் கடிதம் எழுதினேன்.

ஆக, நம் படைப்பின் தலைப்பை மாற்றுவதற்கே பத்திரிகைகள் நம்மிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதிய காலகட்டம் அது. பத்திரிகை தர்மம் எத்தனை அழகாக இருந்திருக்கிறது. நேர்மையான எல்லாமே அழகுதானே.

கதை எழுதி தபாலில் அனுப்பி அது சென்று சேர 2,3 நாட்கள். அவர்கள் நம்மிடம் ஏதேனும் மாற்றுவதற்கு அனுமதி கேட்டு தபாலில் கடிதம் அனுப்ப 2,3 நாட்கள். நாம் பதில் எழுதி தபாலில் கடிதம் அனுப்ப திரும்பவும் 2,3 நாட்கள். ஆக எத்தனை பொறுமையாக பத்திரிகை தர்மம் காக்கப்பட்டு வந்திருக்கிறது? ஆச்சர்யமான அழகுதானே இது!!!

இன்று நொடிப் பொழுதுக்கும் குறைவான நேரத்தில் தகவல் பரிமாற்றம் சாத்தியம் என்றாலும்…

இதற்கு மேல் நான் பூர்த்தி செய்ய விரும்பவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள்., ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள். ஆனாலும்…

இதனையும் நான் பூர்த்தி செய்ய விரும்பவில்லை.

வசதிகள் பெருகப் பெருக தர்மம் பெருக வேண்டும் என்பதோடு முடித்துக்கொள்கிறேன்.

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 2, 2023 | வியாழன்

(Visited 1,244 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon