சில வருடங்களுக்கு முன்னர், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. ஐந்தாறு சாதனைப் பெண்கள் கலந்துகொண்டு தங்கள் சாதனைகளை பேசுவார்கள். நான் அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி அவர்களின் சாதனைகள் குறித்து என் பார்வையை பேச வேண்டும்.
நிகழ்ச்சிக்கு 1 மணி நேரம் முன்பே, அதாவது காலை 8 மணிக்கு சென்றுவிட்டதால் நான்தான் முதல் ஆளாக அங்கிருந்தேன். அந்தக் கட்டிடம் அத்தனை அமைதியாக இருந்தது. நேரம் இருந்ததால் வரவேற்பறையில் அமர்ந்திருக்கப் பிடிக்காமல், மரங்கள் அடர்ந்த அந்தக் கட்டிடத்தை சுற்றி நடந்தேன்.
9 மணிக்கு வரவேற்பறைக்குச் சென்றேன். அப்போதும் யாருமே வரவில்லை. 9.30 மணிக்குத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் சாதனைப் பெண்கள் ஒவ்வொருவராக வர, அமைதியாக இருந்த அந்த இடமே நிமிடத்தில் கலகலப்பானது. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு வாழ்த்திக்கொண்டு மேக் அப் போட்டுக்கொண்டு என அத்தனை அழகாக மாறியது. அவர்கள் அனைவருமே 25,35,45,55,65 வயதினர்.
அவர்கள் சாதனைகள் குறித்துப் பேச மனதுக்குள் தயார் செய்துகொள்ள, அவர்கள் எல்லோரிடமும் அவர்கள் சாதனைகள் குறித்து நானே கேட்டு தெரிந்துகொண்டேன். அவர்கள் நினைத்துக் கொண்டார்கள் நானும் அவர்களைப் போல என் சாதனையைப் பற்றிப் பேச வந்துள்ளேன் என.
அந்த சாதனைப் பெண்களில் ஒருவர் மட்டும் பிரபலத்தின் மகள். என்னிடம் அவர் சாதனையை சொல்லும் போதும் பட்டும் படாமல் ஏனோ தானோவென்று பேசினார். நானோ அதை கண்டு கொள்ளாமல் எனக்குத் தேவையானதை நான் கேட்டு கேட்டு வாங்கினேன். நான் அவரை ‘மேடம்’ என மரியாதையுடன் அழைத்துப் பேசினாலும், அவர் வாயில் இருந்தும், கண்களிலும் உடல் மொழியிலும் சிறு துளி மரியாதை வெளிப்படவில்லை. ஒரு கர்வம். அந்த கர்வத்தை அவர் நினைத்திருந்தால் ‘கம்பீரமாக’ மாற்றி வெளிப்படுத்தி இருக்க முடியும். திறமைசாலிகளிடம் ஒரு கம்பீரம் ஒருக்கும். அதை அவரவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில்தான் அது கம்பீரமாகவோ அல்லது கர்வமாகவோ வெளிப்படும்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து என்னை அவர்களிடம் ‘மேடம் தான் சிறப்பு அழைப்பாளர்’ என சொல்லி அறிமுகம் செய்து வைத்ததும் மற்றவர்கள் ஆச்சர்யத்தில் ‘ஹலோ அப்படியா சொல்லவே இல்லை…’ மகிழ அந்த பெண் மட்டும் வழக்கமான தன் உடல்மொழில் அமர்ந்திருந்தார்.
நிகழ்ச்சியில் அந்த பெண் உட்பட எல்லோரையுமே அவரவர்கள் தங்கள் சாதனையை சொல்லி முடித்ததும் மன நிறைவுடன் பூரண மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசினேன். அவர்கள் சாதனைகள் குறித்த என் பார்வையை சந்தோஷமாக வெளிப்படுத்தினேன்.
நிகழ்ச்சி முடிந்து, புறப்படும் வேளையில் கூட மற்றவர்களிடம் பேசிய அளவுக்குக் கூட என்னிடம் அந்த பெண் பேசி விடைபெறவில்லை. மரியாதை நிமித்தம் கூட, அட மரியாதை கூட வேண்டாம், அன்பின் நிமித்தம் கூட நிகழ்ச்சியில் அவர் குறித்து என் பார்வையை பேசியதற்கு நன்றி சொல்லாமல் விடைபெற்றார்.
நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்று அவரிடம் இருந்து ஒரு போன் அழைப்பு.
‘மேடம்… ஏர்ஃபோர்ஸில் பணிபுரியும் என் மாமா உங்களைப் பற்றி மிக உயர்வாக சொன்னார்…. நீங்கள் ஒரு லெஜண்ட் என்றார்…’
‘அப்படியா… எதற்கு அப்படிச் சொன்னார்?’ என்றேன்.
‘20, 25 வருடங்களுக்கு முன்பே உங்கள் கம்ப்யூட்டர் புத்தகங்களைப் படித்துத்தான் அவர் தன் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி எடுத்துக்கொண்டதாவும், மற்றவர்களும் பயிற்சி அளித்ததாகவும் சொன்னார்…’ என்று சொன்னதுடன் அவர் மாமாவுக்கு போன் செய்து ‘கான்ஃபரன்ஸ் காலில்’ என்னிடம் பேச வைத்தார். அவருக்கு வயது 65. துபாயில் இருக்கிறார். அவர் தன் 40 வயதில் கம்ப்யூட்டர் கற்றிருக்கிறார் என் நூல்கள் வாயிலாக. தனக்குக் கீழ் பணியாற்றிய டீமிற்கும் பயிற்சி அளித்திருக்கிறார். சி, சி++, போட்டோஷாப் போன்றவை தங்கள் துறையில் எப்படி பயனுள்ளதாக இருந்தது என்றும் விரிவாக சொன்னார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பரவசம் ஒரு பக்கம் என்றால், என் நூல்கள் வாயிலாக அறிமுகமான ஒருவர் நூல்கள் குறித்துப் பேசிய மகிழ்ச்சி ஒரு பக்கம், நிகழ்ச்சியில் உடல்மொழியால் கூட தன் மரியாதையை (Courtesy) வெளிப்படுத்தாதவர் தானே போனில் அழைத்து அன்புடன் பேசியது மற்றொரு பக்கம் என முப்பரிமாண சந்தோஷத்தில் திக்கு முக்காடித்தான் போனேன்.
போனில் பேசியதுடன் வாட்ஸ் அப்பில்,
‘எத்தனை பெரிய ஆளுமை நீங்கள்… அந்த நிகழ்ச்சியில் நீங்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு என்னைப் பாராட்டிப் பேசியது கொடுப்பினை… நன்றி மேடம்’ என்று தகவலும் அனுப்பினார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நேரில் நிஜத்தில், வெகு அருகாமையில் பார்த்தும், பேசியும் புரியாத பல விஷயங்கள் ஒரு படைப்பின் வாயிலாக புரிந்து விடுகிறது நம் மக்களுக்கு என்பது மட்டும் புரிந்தது.
குறிப்பு: இந்த இளம் தலைமுறையினரே இப்படித்தான் மரியாதை கொடுக்கவே தெரிவதில்லை என யாரும் பின்னூட்டமிட வேண்டாம். ஏனெனில், நான் குறிப்பிட்ட நபருக்கு வயது 50+.
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஏப்ரல் 5, 2023 | புதன்