முறுகல் தோசையும், பெற்றோர் அரசியலும்!

 

முறுகல் தோசையும், பெற்றோர் அரசியலும்!

சந்தியாவுக்கும், சாந்தனுவுக்கும் விடுமுறை தினம். நானும், அப்பாவும் அலுவலகத்தில் இருந்து வருவதற்கு தாமதமாகும் என்று போன் செய்து தகவல் சொல்லி விட்டேன்.

நினைத்ததற்கும் மேல் நேரம் ஆகி இருட்டவும் தொடங்கி விட்டது. இரவு என்ன டிபன் செய்யலாம் என்று நினைத்தபடி வேகவேகமாக  வீட்டினுள் நுழைந்தோம். கமகமவென்று தோசை வாசனை பசியைக் கிளறியபடி வரவேற்றது.

கைகால் அலம்பிக் கொண்டு சமையல் அறைக்கு விரைந்தேன். சந்தியா தோசை கல்லில் தோசை வார்த்துக்கொண்டிருந்தாள். ஆச்சர்யம். சாந்தனு அருகில் நின்றுகொண்டு அவள் தோசை வார்ப்பதை மொபைல் போனில் ரெகார்ட் செய்தபடி ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

சந்தியா சமையைல் அறையில் இருப்பது ஆச்சர்யம்தான். காரணம் சிறியவன் சாந்தனுவுக்குதான் சமையலில் ஆர்வம். நினைத்துக்கொண்டால் கேக் கிளறுவான். பூரி செய்வான். சமையலில் எனக்கும் உதவுவான். சந்தியாவுக்கு சமையலில் இஷ்டம் இல்லை. ஆனால் கிரியேட்டிவிட்டியாக வீட்டை அலங்கரிப்பாள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை, விருப்பம், திறமை. அவர்கள் போக்கில் விட்டுவிடுவோம். கட்டாயப்படுத்த மாட்டோம்.

சந்தியா வார்த்த தோசை நன்றாகவே வந்திருந்தது. அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துவிட்டு, வேகமாக மற்ற தோசைகளை வார்த்து மற்றொரு தட்டில் வைத்தேன். இடையில் தக்காளி சட்னி தயார் செய்தேன். சாப்பாட்டு மேசையில் தோசைகளை வைத்துவிட்டு அனைவரையும் சாப்பிட கூப்பிட்டேன்.

என் போனில் சந்தியாவின் தோசையை வெவ்வேறு கோணத்தில் புகைப்படம் எடுத்தேன். கூடவே, அருகில் மற்றொரு தட்டில் அடுக்கி வைத்திருந்த தோசைகளையும் புகைப்படம் எடுத்து என் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டு அதை சாந்தனு, சந்தியா மற்றும் அவர்களின் அப்பாவின் பெயரை ‘டேக்’ செய்தேன்.

சந்தியாவின் தோசையை புகழ்ந்தபடி நாங்கள் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டோம். அவளுக்கு வெட்கத்தில் சிரிப்பு சிரிப்பாய் வந்தது. முதல் தோசை அல்லவா? அதுவும் முறுகல் தோசை. நான் வார்ப்பதைப் போலவே முயற்சித்திருந்தாள்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. தாமதமாக எழுந்திருக்கலாம் என்று ரிலாக்ஸ்டாக டிவி பார்க்க உட்கார்ந்தோம். என் போனில் இருந்து விடாமல் ஃபேஸ்புக் மெசென்ஜர் சப்தம். என்ன என்று பார்த்தேன்.  முறுகல் தோசைக்குத்தான் அத்தனை கமெண்ட்டுகளும். எல்லாமே ஆங்கிலத்தில்தான் இருந்தன.

சந்தியாவின் தோழி காஞ்சனாவின் முதல் வாழ்த்து ‘அருமையான தோசை… ரொம்ப அழகா வந்திருக்கிறது… வாழ்த்துக்கள்…’.

நான் படித்து முடிப்பதற்குள், சந்தியா பதில் அனுப்பி இருந்தாள்.  ‘எனக்கு தோசை செய்வதற்கு இன்ஸ்பிரேஷனே நீயும், என் தம்பி சாந்தனுவும்தான்… உங்கள் இருவரையும்போல என்னால் தோசை செய்ய முடியாது…’

அதற்கு காஞ்சனாவின் பதில்… ‘அப்படி இல்லை சந்தியா, உனக்கு சில வருடங்களுக்கு முன்பே நான் தோசை வார்க்கக் கற்றுக்கொண்டிருந்தாலும் நீ வார்த்த தோசை மிகவும் அழகாக நல்ல ஷேப்பில் நல்ல ரோஸ்ட்டாக வந்துள்ளது… பார்ப்பதற்கே சாப்பிட வேண்டும்போல இருக்கே…’

இதற்குள் என் தோழி ரஞ்சனாவின் மெசேஜ்…  ‘உன் பெண் சந்தியாவா இவ்வளவு தோசைகளையும் வார்த்தது… நீ கொடுத்து வைத்தவள்… உனக்கு ஒத்தாசையா இருக்காளே…’

அடுத்த நொடி யோசிக்கக் கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் என் மகள் சந்தியாவின் பதில், ‘இல்லை ஆண்டி, ஒரே ஒரு தோசை இருக்கே… அதுமட்டும்தான் நான் செய்தது… மற்றவை எல்லாம் என் அம்மா செய்தவை…’

ஃபேஸ்புக் கமென்ட்டுகள் எனக்குள் ஆச்சர்யத்தை உண்டு செய்தன. எத்தனை பெரிய மனசு இந்த குழந்தைகளுக்கு!

எனக்கு இன்ஸ்பிரேஷனே நீயும், என் தம்பியும்தான் என ஈகோ இல்லாமல் சொல்லும் பெண்…

இல்லை இல்லை… நான் உனக்கு சில வருடங்கள் முன்பே தோசை வார்க்கக் கற்றிருந்தாலும் உன்னுடையதுதான் பெஸ்ட்டா இருக்கு என்று சொல்லும் தோழியும்…

உன் மகள்தானே எல்லா தோசையையும் வார்த்தாள்… உனக்கு உதவியா இருக்காளே என பாராட்டும் என் தோழியிடம் ‘இல்லை நான் செய்த தோசை ஒன்றே ஒன்றுதான்’ என மறுக்கும் பெண்ணின்  உண்மைத்தன்மை…

இவற்றை அப்படியே பார்த்து கடந்து சென்றுவிட வேண்டும்.

என்னடி காஞ்சனா? உன் ஃபெரெண்ட் தோசை நன்றாக வார்த்திருக்கிறாள் என்று சொல்கிறாய். நன்றாகவா வந்துள்ளது… நடுவிலே சற்று கருகி ஓரத்தில் பிய்ந்து… இப்படியா நீ செய்வாய்… இதையா நன்றாக உள்ளது என புகழ்ந்திருக்கிறாய்? என்று காஞ்சனாவின் அம்மாவோ,

என்ன சந்தியா? ஆமாம் எல்லா தோசையையும் நான்தான் வார்த்தேன் என்று சொல்ல வேண்டியதுதானே? அப்படியே உண்மையை ஒப்பிக்க வேண்டுமா? என்று நான் என் மகளிடமோ சொல்ல ஆரம்பிக்கும்போதுதான் குழந்தைகள் மனம் குழம்ப ஆரம்பிக்கும்.

முறுகல் தோசை கருகிவிடாமல் அப்படியே இருக்க வேண்டுமானால், அதில் பெற்றோர் அரசியல் கலக்கக் கூடாது.

அட! இப்படியும் செய்யலாமே!
கல்மிஷம் இல்லாத மனதை குழப்பிக் கலப்படம் செய்யாமல் இருக்க குழந்தைகள் உலகை வெளியே இருந்து பார்த்து மட்டும் ரசிப்போம். பிரச்சனை, தவறு என்று வரும்போது மட்டும் தலையிடுவோம். பெருந்தன்மையான குழந்தைகள் குணம், பார்த்து ரசிக்கும் பெற்றோர்களின் மனம் – பூத்துக்குலுங்கும் ஒரு பூங்காவனம்.

எழுத்தும் ஆக்கமும்
காம்கேர் கே. புவனேஸ்வரி
(குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட் என்ற நூலில் ஒரு கட்டுரை இது)

 

 

(Visited 42 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon