வரம் பெற்ற இளவரசியும், குட்டி இட்லியும், பின்னே ஒரு தங்கத் தகப்பனும்!
திடீர் பயணம். திட்டமிடாமல் கடைசி நிமிடத்தில் ஏற்பாடானதால் வழியில் A2B ஓட்டலில் டிபன் சாப்பிடச் சென்றோம். நாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு முன்னால் உள்ள டேபிளில் ஒரு அப்பாவும் குட்டி மகளும். ஆறு ஏழு வயதிருக்கும் அந்த சிறுமி உட்கார வசதியாக உயரமான சேர் ஒன்றை போட்டுவிட்டு, அவர்களுக்கான ஆர்டரையும் கேட்டு வாங்கிக்கொண்டார் சர்வர். அப்பா தனக்கு பரோட்டாவும், மகளுக்கு குட்டி இட்லியும் ஆர்டர் செய்தார்.
அப்பா மொபைலில் தலை கவிழ, குட்டிச் சிறுமி அப்பாவிடம் குனிந்து ஏதோ பேச முயல அவர் போனை சட்டைப் பையில் வைத்துவிட்டு மகளுடன் பேச ஆரம்பித்தார்.
இதற்குள் பரோட்டாவும் குட்டி இட்லியும் வந்தன. இட்லி சுடச் சுட இருந்திருக்கும் போல, சர்வரை அழைத்து இன்னொரு குழி தட்டு கேட்டு வாங்கி குட்டி இட்லியை இரண்டு தட்டுகளாக்கினார். இட்லி சாப்பிடும் சூடு வருவதற்காக அப்படி செய்திருப்பார்.
சூடு ஆறுவதற்குள் தான் பரோட்டாவில் இரண்டு வாய் சாப்பிட்டுக் கொண்டார். குட்டி இட்லியில் ஃபோர்க்கை குத்தி அதை எப்படி வாயில் வைத்து சாப்பிட வேண்டும் என செய்து காண்பித்தார். சாப்பாரில் மிதந்து கொண்டிருந்த ஒரு குட்டி இட்லியை ஃபோர்க்கால் எடுத்து மகள் வாயில் வைத்தார். அவள் தலையுடன் காலையும் சேர்ந்து ஆட்டியபடி சாப்பிட்டாள். பின்னர் தானாகவே ஃபோர்க்கால் இட்லியை எடுக்க முயன்றாள். எடுத்தும் விட்டாள். ஆனால் சாப்பிட வாய்க்கு அருகில் கொண்டு செல்வதற்குள் திரும்பவும் சாம்பாருக்குள் விழுந்துவிட, அப்பா அவளுக்கு உதவ பரோட்டாவை விட்டு குட்டி இட்லிக்கு தாவினார்.
ஆனால் மகள் அப்பாவிடம் ஃபோர்க்கை கொடுக்காமல் தானாகவே இட்லியை எடுக்க முயன்றாள். இட்லிக்கும் ஃபோர்க்குக்கும் சண்டை வராத குறைதான். ஒரு கட்டத்தில் ஃபோர்க்கைத் தூக்கி ஓரங்கட்டிவிட்டு, தன் குட்டி கையால் ஒரு குட்டி இட்லியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அப்பாவை பார்த்துப் பெருமிதச் சிரிப்பு. தன் குட்டி கையால் குட்டி குட்டி விரலால் நாசூக்காக ஒரு இட்லியை எடுத்து அப்பாவின் தட்டிலும் போட்டாள்.
‘நீ சாப்பிடுடா செல்லம்…’ என்று சொன்ன அப்பாவை சட்டை செய்யாமல் தன் வாய்க்கு ஒரு குட்டி இட்லி, அப்பா தட்டுக்கு ஒரு குட்டி இட்லி என அவளது குட்டி விரல்கள் நர்தனமாடத் தொடங்கியது, காண கண் கொள்ளாக் காட்சி. ஃபோர்க்கும், ஸ்பூனும் அம்போவென தட்டின் ஓரமாய் குட்டிச் சிறுமியின் கைவிரல் தங்கள் மீது படாதா என ஏக்கமாய் பார்க்கும் தோரணையில் கிடந்தன.
அவள் சாப்பிடும் அழகு, சாம்பாருக்குள் மிதக்கும் குட்டி இட்லியை அப்படி சாப்பிட நமக்கும் ஆசை வரும். ஓட்டல்களில் இல்லாவிட்டாலும் வீட்டிலாவது அப்படி சாப்பிட்டுப் பார்க்கத் தோன்றும்.
கைகளால் சாப்பிடக் கூடாது, ஸ்பூன் / ஃபோர்க் வைத்துத்தான் சாப்பிட வேண்டும். அதுதான் நாகரிகம். இல்லை என்றால் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள் என்று வயதான பெற்றோருக்கே பாடம் எடுக்கும் பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாதேடா செல்லம். உனக்கு எது சரியாக வருகிறதோ அதை செய் என தன் மகளுக்கு சுதந்திரம் கொடுத்த அப்பாவையும், தனக்கு எது பிடிக்கிறதோ, எது இயல்பாய் வருகிறதோ அதை குட்டி இளவரசி போல கம்பீரமாக அமர்ந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக இயங்கும் மகளும் ஒருவருக்கொருவர் பெற்று வந்த வரம்.
யாருக்கும் பாதிப்பில்லாத வகையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சர்வ சுதந்திரத்துடன் நமக்குப் பிடித்ததை செய்யும் சூழல்தான் எத்தனை பேரழகு!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
மே 25, 2023 | வியாழன்