அனுமானங்கள்!
மலேசியா மாநாட்டின் போது நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து தினமும் ஐந்தாறு பேருந்துகள் (இன்னமும் கூட அதிக பேருந்துகள் இருக்கலாம், சரியாக கணக்குத் தெரியவில்லை) பல்கலைக் கழகத்துக்குச் செல்லும். தினமும் அவரவர்கள் செல்லும் பஸ்களில் ஒரே இருக்கையில் அமர்ந்தால் தொலைந்து போனால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் என வலியுறுத்தி இருந்தார்கள்.
வழக்கம்போல் நான் அமைதியாக என்னைச் சுற்றி இருப்பவர்களை கவனித்தபடி, ஜன்னல் வழியாக வெளி உலகை வீடியோவும் புகைப்படங்களும் எடுத்து வந்தேன். தேவையான குறிப்புகளை மெசஞ்சரில் எனக்கே டைப் செய்து அனுப்பிக் கொள்வேன்.
பேருந்தில் வந்திருந்தவர்கள் பெரும்பாலும் பேராசிரியர்கள். நான் பயணித்த பேருந்தில் வெகு சிலரே மற்ற துறை சார்ந்தவர்கள்.
கடைசி நாள் அன்று நான் வழக்கமாக அமரும் இடத்தில் வேறொருவர் அமர்ந்ததால் நான் வேறொரு இடத்தில் அமர்ந்து கொண்டேன்.
அந்த சீட்டுக்கு பக்கத்து இருக்கையில் ஒரு அக்காவும் தங்கையும் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று ஷாப்பிங் செல்வது குறித்து பேசி வந்தார்கள்.
அதில் ஒரு பெண் மிகப் பொறுப்பாக ‘லிட்டில் இந்தியா சென்றால் நாம் திரும்ப வருவதற்கு தாமதமானால், பிறகு விமான நிலையம் செல்ல தாமதமாகிவிடும். விமானத்தை கோட்டை விட்டுவிடுவோம். எனவே ஷாப்பிங் எல்லாம் வேண்டாம்’ என்றார். மற்றொரு பெண் ‘அதெல்லாம் தாமதமாகாது…’ என கெஞ்சலாக மறுத்துப் பார்த்தார். ஆனாலும் முன்னால் பேசிய பெண் நிதர்சனத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தார்.
என்னால் அவர்கள் இருவரில் யார் அக்கா, யார் தங்கை என கணிக்கவே முடியவில்லை. ஆனாலும், பொறுப்பாக ஷாப்பிங் வேண்டாம் என்று சொன்னவர்தான் தங்கை என மனதுக்குள் நினைத்தேன். காரணம் என்னையும் என் தங்கையையும் நான் மனதுக்குள் ஒப்பிட்டதால். நான் கொஞ்சம் நிதர்சனத்தைத் தாண்டிய கற்பனைவாதி. என் தங்கை முழுக்க முழுக்க நிதர்சனத்தை ஒட்டி முடிவெடுப்பவள்.
சகோதரிகள் இருவரும் மிக அழகாக தோழமையுடன் பேசுவதை மிக சுவாரஸ்யமாக ரசித்து வந்த நான் ஒரு கட்டத்தில் ‘உங்களில் யார் அக்கா, யார் தங்கை?’ என கேட்டேன்.
நான் பேசியதை ஆச்சர்யமாகப் பார்த்த இருவரும், ஷாப்பிங் செல்ல ஆசைப்பட்டவர் அக்கா என்றும், காரண காரியங்களை பொறுப்பாக எடுத்துச் சொல்லி ஷாப்பிங் வேண்டாம் என்று மறுத்தவர் தங்கை என்றும் இருவருக்கும் ஆறு வயது வித்தியாசம் என்றும், இருவருமே கல்லூரியில் பேரசிரியர்கள், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்கள்.
கூடுதலாக, ‘அப்பாடா, இன்னிக்காவது வாயைத் திறந்து பேசினீர்களே?’ என்றார்கள் மகிழ்ச்சியாக.
‘நான் உங்கள் இருவரையும் பார்த்ததே இல்லையே இந்த பஸ்ஸில்…’ என்றேன்.
‘ஆனால் நாங்கள் தினமும் உங்களை கவனித்துக்கொண்டு வருகிறோமே, நீங்கள் பேசியே இப்போதுதான் பார்க்கிறோம். இவ்வளவு அமைதியா எப்படி இருக்க முடிகிறது…’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.
நான் என்ன செய்கிறேன் என்பதை கேட்டறிந்து ‘கிரேட்… இத்தனை சிறப்புகள் இருந்தும் இவ்வளவு அமைதியாக இருக்கீங்க…’ என்று பாராட்டி மகிழ்ந்தார்கள்.
‘நானும் என் தங்கையும் சேர்ந்து எங்காவது சென்றால் என் தங்கையிடம் என்னைப் பற்றி எப்படி விசாரிப்பார்கள் தெரியுமா?’ என்று கேள்வி கேட்டு அவர்கள் முகத்தைப் பார்த்தேன்.
‘எப்படி?’ என்று சைகையாலேயே கேட்டார்கள்.
’இவர் உங்கள் அண்ணியா?’
’அட… அப்படியா?’ முகபாவனையில் ஆச்சர்யத்தைக் காட்டினார்கள்.
‘அக்கா தங்கைகள் சென்றால் அக்காவை தங்கை என்றும், தங்கையை அக்கா என்றும் மாற்றி புரிந்துகொள்ளலாம். ஆனால் புதுவிதமாக என்னை எப்படி அண்ணி என்று புரிந்துகொள்கிறார்கள்?’ என்று அவர்களிடம் சொல்லி என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
’பொதுவாக அண்ணி என்பவரை கொஞ்சம் கரடுமுரடான, கடுமையான ஆட்களாக திரைப்படங்களிலும், சீரியல்களிலும் சித்தரிப்பதால் அப்படி இருக்குமோ. என்னைப் பார்த்தால் கரடுமுரடாகத் தோன்றுகிறது போல…’ என இயல்பாக பேச்சுக் கொடுத்தேன்.
‘அட, உங்களைப் பார்த்தால் கரடுமுரடான ஆள் மாதிரியா இருக்கீங்க, எவ்வளவு அம்சமாக இலட்சணமாக இருக்கீங்க…’ என்று அவர்கள் இருவரும் ஒரு சேர சொன்னபோது என்னையும் அறியாமல் ‘அடடா, இந்த ஐந்து நாட்கள் உங்களுடன் பழக முடியாமல் போய் விட்டதே…’ என்று சொன்னேன்.
‘யார் அக்கா, யார் தங்கை?’ என்ற அனுமானம் கொடுத்த கிடுக்கிப்பிடி சிந்தனைகளால் உண்டான கருத்துப் பரிமாற்றத்தில் எனக்கான வெகுமதியைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் விடைபெற்றோம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 2023