மலேசிய வாழ் தமிழர்களின் அன்பு!
மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராத நேரத்தில் திடீரென என் முன் வந்து ’நீங்கதானே காம்கேர் புவனேஸ்வரி’ என என்னை இனம் கண்டு கொண்டதுடன், தன்னையும் அறிமுகம் செய்துகொண்ட மலேசியாவில் வசித்து வரும் , எழுத்தாளர் உயர்திரு மங்கள கெளரி (இடப்புறம்). இத்தனைக்கும் இவர் ஏற்கெனவே என்னை நேரில் சந்தித்ததில்லை என்பது கூடுதல் தகவல்.
எங்களை புகைப்படம் எடுத்துக்கொடுத்த முன்பின் அறிமுகம் இல்லாத மலேசியவாழ் பெண் (வலப்புறம்), சுயதொழில் முனைவர்.
இவருக்கு என்னைப் பற்றி மிக உயர்வாகப் பிரமாதமாக எடுத்துச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார் மங்கள கெளரி.
என்னைப் பற்றிய அறிமுகத்தில் வியந்து, ‘எப்படி இப்படி எளிமையாக இருக்கவும், பழகவும் முடிகிறது?’ என கேட்டு வியந்தார் அந்தத் தொழில்முனைவர்.
‘இப்படி எளிமையாக இல்லாவிட்டால் என் உடம்பு வலிக்க ஆரம்பித்துவிடும்…’ என்று பதில் சொன்னதை அவர் ரசித்துக்கொண்டிருக்கும் இடைவெளியில் ‘ஆமாம் மேடம், படோடாபமாகவும், ஆடம்பரமாகவும் தோற்றமளிக்கவும், பேசவும் செய்தால் என் இயல்பில் இருந்து நான் மறைந்து விடுவேன். செயற்கையான பாவனையுடன் வலம் வர வேண்டி இருக்கும். நம் இயல்பில் இல்லாது போனால் உடல் வலி, தலைவலி எல்லாம் உபரியாக நமக்குக் கிடைக்கும் பரிசுகள் தானே?’ என்று பதில் சொன்னேன்.
எதிர்பாராத நேரத்தில் என்னை உச்சி முகர்ந்து முத்தமிட்டு மனதார வாழ்த்தி தன் அன்பை வெளிப்படுத்தி விடைபெற்றார். பெயரைக் கேட்க தவறிவிட்டேன்.
அன்பின் மழையில் நனைந்தேன். எளிமைக்குக் கிடைத்த மாபெரும் பரிசல்லவா அது?
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை 2023