மென்மையானவர்களுக்கான நண்பர்கள்!
மலேசியா மாநாட்டில் என்னை சந்தித்த ஒவ்வொருவரும் சொல்லி வைத்தாற்போல் பொதுவாக ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.
‘இவ்வளவு மென்மையாக எப்படி பேசுகிறீர்கள்? உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் அல்லவா?’
அதற்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா?
‘எத்தனைக்கு எத்தனை இதே மென்மைத்தன்மைக்காக என்னை பார்த்து வியக்கிறார்களோ, அதே அளவுக்கு சீக்கிரம் வெறுக்கவும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்…’
‘அப்படியா, உங்களை வெறுக்கவும் முடியுமா?’
‘ஏன் முடியாது… என் மென்மைத்தன்மையைக் கண்டு வியப்பவர்கள் என்னைப் பற்றிய பிம்பத்தை அப்படியே மனதுக்குள் பதிய வைத்துக்கொள்வார்கள். எப்போதுமே இப்படித்தான் என நினைத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடமே ஏதேனும் ஒரு சூழலில், அறச்சீற்றம் கொள்ளும்போது என் மென்மைத் தன்மைக்கு நேர் எதிராக என் குரலும், கருத்துக்களின் உறுதியும் அமைந்திருப்பதைக் காணும்போது அவர்கள் மனதுக்குள் இருக்கும் என் பிம்பம் அடிவாங்கும். அப்போது என்னைவிட்டு வெகு தூரம் சென்று விடுவார்கள்…’
’அப்படியா…. ஆச்சர்யமாக உள்ளது!’
‘ஆமாம். அமைதியானவர் என்ற பெயர் எடுக்காதவர்கள் எத்தனை கடுமையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நட்புப் பாராட்டுபவர்களுக்கு அமைதியானவர் என பெயர் எடுத்தவர்களின் அறச்சீற்றத்தைத் தாங்கவே முடியாது… அதுதான் உண்மை’
நான் பேசுவதை உன்னிப்பாக கவனித்தவர்களிடம், ‘எப்போதும் பிச்சைப் போடாத மகராசி சாப்பாடு போடலை, ஆனால் எப்போதும் நாள்தவறாம சாப்பாடு போடற நீ ஏன் போடலை… என்ற ஒரு வழக்குமொழி உண்டல்லவா. அது இந்த விஷயத்துக்கும் பொருந்தும்’ என்று உதாரணம் சொல்லி முடித்தேன்.
‘ஆனால், எங்களுக்கு உங்களை பிடிக்காமல் போகாது மேடம்…’ என்று சொல்லி புகைப்படம் எடுத்துச் சென்றார்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 2023