-லேடீஸ் ஸ்பெஷல்- பத்திரிகையிலேயே படிக்க இங்கு கிளிக் செய்யவும்!
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி காம்கேர் நிறுவனர் காம்கேர் கே. புவனேஸ்வரி (கொண்டாடி மகிழ்ந்த ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழ்)
ஜுலை 21 முதல் 23 வரை மலேசியாவில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்தியக் கிளையின் செயலாளர் திரு. நந்தன் மாசிலாமணி அவர்கள் மிக சிறப்பாக இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தார்.
11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியா நாட்டுப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்தார்.
மலேசியா, இந்தியா, தென் கொரியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, துபாய், இலங்கை உட்பட 50 நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான வல்லுநர்கள் வருகை தந்திருந்தனர்.
தொழில்நுட்பம், கலை, இலக்கியம், திரைத்துறை என பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் உரை நிகழ்த்தினார்கள். இந்த வரிசையில் நான் ‘மிரட்டும் MetaVerse, அசத்தும் AI. இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினேன்.
என் உரையின் சாராம்சம்
நம் நாட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகம் ஆவதற்கு முன்பே இந்தத் துறையில் இரட்டைப் பட்டம் பெற்று அதாவது M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, காம்கேர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தை சென்னையில் தொடங்கினேன். அந்த வகையில் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்ததில் எங்கள் நிறுவனத்துக்கு நிறைய பங்கு உள்ளது.
எங்கள் நிறுவனத்தில் 2 பிரிவுகள் உள்ளன. ஒன்று லாஜிக்கல், இரண்டாவது கிரியேட்டிவ். லாஜிக்கல் பிரிவில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, வெப் டெவலெப்மெண்ட், ஆப் தயாரித்தல் என்று இயங்குகிறோம். கிரியேட்டிவ் பிரிவில் அனிமேஷன் தயாரித்தல், ஆவணப்படங்கள் இயக்குதல் தயாரிக்கிறோம்.
எல்லாவற்றையும்விட முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதாவது, தொழில்நுட்ப நூல்களை வெளியிட்டு வருகிறோம். இதுவரை 200-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ளேன். அவற்றில் பல தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக இருப்பதுடன் நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன.
1992 ஆம் ஆண்டு எங்கள் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆக கடந்த 32 ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் தயாரிப்புகள் மூலம் நான் பெறும் அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்திலேயே தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்களாக எழுதியும், ஆடியோ, வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டே வருகிறேன். எளிமையாகச் சொன்னால் டைரி எழுதுவதைப் போல என் தொழில்நுட்ப அனுபவங்களின் டைரியாகவே நான் எழுதிய புத்தகங்களை நான் கருதுகிறேன். நம் நாட்டு மக்களுடன் என்னையும் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும் நெருக்கமாவதற்கு தாய் மொழி தமிழ்தான் காரணம்.
இந்த மாநாட்டில் நான் பேச எடுத்துக் கொண்ட டாப்பிக்: ‘மிரட்டும் MetaVerse, அசத்தும் AI. இனி நடக்கப் போவது என்ன?’
இனிவரும் காலகட்டத்தில் இந்த உலகை ஆள இருப்பது செயற்கை தொழில்நுட்பமே. எந்த ஒரு படைப்பும் மூன்று தலைமுறை மக்களால் கொண்டாடப்பட்டால் அதன் தரத்தைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமே இல்லை. அந்த வகையில் தொழில்நுட்பத்தின் மூன்றாவது தலைமுறை நடந்து கொண்டுள்ளது. Web 1.0, Web 2.0, Web 3.0 என தொழில்நுட்பத்தின் மூன்று தலைமுறையோடும் நான் பயணித்திருப்பதால் அந்தத் துறையின் நீள அகலத்தை மிக இயல்பாகவும், எங்கள் காம்கேரில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் தயாரிப்புகளின் அனுபவங்களோடும் பின்னிப் பிணைத்து அழகாக வெளிப்படுத்தினேன்.
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என தொழில்நுட்பத் துறையில் நான் பெறுகின்ற அனுபவங்களை அவ்வப்பொழுது இந்த சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் பகிர்ந்து வந்திருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் கூடி இருக்கும் இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உலகத் தமிழர்கள் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாநாட்டு நிறைவு விழாவில் மலேசியா துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலாயாப் பல்கலைக்கழகம் துணைவேந்தர், மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராஜேந்திரன் போன்றோர் வீற்றிருக்கும் மேடையில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக நானும் கெளரவிக்கப்பட்டேன். அனைவருக்கும் நன்றி.