நல்லவைப் பெருக!
மலேசியாவில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டபோது அங்குள்ள சில பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் என்னிடம் சிறு நேர்காணல் செய்து ஒலி(ளி) பரப்பினார்கள்.
இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே சென்னையைச் சார்ந்த லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் உயர்திரு கிரிஜா ராகவன் என்னை வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்து புகைப்படங்கள் அனுப்பச் சொன்னார்.
சுடச்சுட மலேசியா மாநாட்டில் நான் கலந்துகொண்டு பேசியதை லேடீஸ் ஸ்பெஷல் ஆகஸ்ட் மாத இதழிலேயே ’மலேசியா மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய நாட்டு சாஃப்ட்வேர் நிறுவன முதலாளி’ என பிரமாதமாக தலைப்பிட்டு செய்தியாக வெளியிட்டு வாழ்த்தினார்.
ஆனால் நம் நாட்டில் மற்ற மீடியாக்கள் அந்த மாநாட்டில் நம் நாட்டைச் சார்ந்தவர்கள் ஒருசிலரின் சிறு அரசியல் உரையினால் ஏற்பட்ட சலசலப்பை மட்டுமே பரபரப்பாக பேசினார்கள். இன்னமும் அது குறித்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நம் நாட்டில், ஒரு பாரம்பர்யமான பத்திரிகையில் அந்த மாநாட்டில் என் உரை குறித்தும் அந்த மாநாடு குறித்தும் புகைப்படங்களுடன் அனுப்பச் சொன்னார்கள்.
நானும் அனுப்பினேன்.
ஆனால், அந்த மாநாட்டில் நம் நாட்டைச் சார்ந்தவர்கள் ஒருசிலரின் சிறு அரசியல் உரையினால் ஏற்பட்ட சலசலப்பை மீடியாக்களில் படித்த அவர்கள் மலேசியா மாநாடு குறித்து நாங்கள் செய்தி வெளியிடப் போவதில்லை எனவும் அதற்குக் காரணமாக அந்த அரசியல் சிற்றுரையால் ஏற்பட்ட சலசலப்பை காரணம் காட்டி வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.
அந்த நிகழ்வு எனக்குள் ஒரு காட்சியை வெளிப்படுத்தியது.
ஒரு வகுப்பு நடக்கிறது. அதில் 100 மாணவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு துடுக்குத்தனமான மாணவர்கள் சேட்டை செய்கிறார்கள் என்பதற்காக அந்த வகுப்பு ஆசிரியர் யாருக்குமே பாடம் எடுக்காமல் வகுப்பை விட்டு வெளியேறுவதைப் போல் தோன்றியது.
எனவே என் மனதுக்கு நேர்மையாகத் தோன்றிய பதிலை அவர்களுக்கு அனுப்பினேன்.
‘வணக்கம். உங்கள் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் மலேசியா மாநாடு குறித்து ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
உலகமெங்கிலும் உள்ள அறிஞர்களும், அறிவாளர்களும், கல்வியாளர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்ட பிரமாண்டமான ஒரு நிகழ்வில் ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராக நான் ஒருவர் மட்டும்தான் தொழில்நுட்பம் சார்ந்து பேசுவதற்காக சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன்.
இவ்வளவு சிறப்புமிக்கவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் அரசியல்வாதிகளும் அழைக்கப் பட்டிருந்தார்கள்.
இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அறிவாளர்கள் கூட்டத்தில் ஒரு அங்கமாக அவர்களுக்கும் அழைப்பு. அவ்வளவு தான். அரசியல்வாதிகள் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. அவர்கள்தான் எங்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
நான் ஒரு உழைப்பாளி, ஆராய்ச்சியாளர், அந்த நிகழ்வில் பங்கேற்பாளர். மேலும் அந்த நிகழ்ச்சிக் குழுவில் ஓர் உறுப்பினராகவும் சில பணிகளை அவர்களுக்காக Digitalization செய்து கொடுத்திருக்கிறேன்.
நல்ல விஷயங்கள் பெருகினால்தான் மற்றவை அந்த ஓட்டத்தில் அடித்துக்கொண்டு ஓடி மறையும். ஆனால் நல்லவை எல்லாம் இப்படி ஒதுங்கினால்….
என் உரை குறித்த பேட்டியை வெளியிடாததுக்கு வருத்தம் ஏதும் இல்லை. ஆனால், என் மனதில் பட்டதை எடுத்துரைக்கவே இந்த பதில். நன்றி’
இதுதான் நான் அவர்களுக்கு அனுப்பிய பதில்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 2023