இரு கண்பார்வைத் திறன் அற்றவரும், ஏஐ சாஃப்ட்வேர் ஆர்வமும்!

 

இரு கண்பார்வைத் திறன் அற்றவரும், ஏஐ சாஃப்ட்வேர் ஆர்வமும்!

இன்று கல்லூரிமுதல்வராய் ஓய்வுபெற்ற டாக்டர் ஆர். ஜெயசந்திரன் அவர்களுக்காக ஒரு ஏஐ ப்ராஜெக்ட் தயாரிப்பு குறித்த கலந்துரையாடல்.

இரு கண் பார்வைத் திறன் அற்ற டாக்டர் ஆர்.ஜெயசந்திரன் அவர்களை 1998-ஆம் ஆண்டு முதல் பரிச்சயம். 25 ஆண்டுகளுக்கும் முன்பே பார்வைத் திறன் அற்றவர்களுக்காக கம்ப்யூட்டர் கருத்தரங்களை எல்லாம் இவர் மூலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இவர் சர்வீஸில் இருக்கும் வரை பல நிகழ்ச்சிகளுக்கு என்னை சிறப்பு விருந்தினராக தொழில்நுட்பம் குறித்து பேச அழைத்திருக்கிறார்.

இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆனால் அறிவும் ஆர்வமும் தொழில்நுட்பத்தின் மீதுதான். கால மாற்றத்துக்கு ஏற்ப சாஃப்ட்வேர்களை கற்றுக்கொண்டுவிடுவார்.

அப்போதே இவர் கம்ப்யூட்டரில் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் என கலக்குவார். ஜாஸ், என்விடிஏ போன்ற கம்ப்யூட்டர் மானிட்டரைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள் மூலம் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை எல்லாம் பயன்படுத்துவார். இவரே பல கருத்தரங்குகளை பார்வையற்றவர்களுக்காக ஏற்பாடு செய்து என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்.

பார்வைத் திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுத உதவும் விசியோ எக்ஸாம் என்ற சாஃப்ட்வேரை எங்கள் காம்கேர் மூலம் 10 வருடங்களுக்கு முன்பே தயாரித்து பிரசிடென்சி கல்லூரியில் பார்வைத்திறன் அற்ற மாணவர்களுக்கு பரீட்சாத்த முறையில் வெளியிட்டோம். அப்போது இவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமித்துறை தலைவராக இருந்தார்.

இப்போது ஓய்வு பெற்றுள்ள இவர் செயற்கை தொழில்நுட்ப (ஏஐ) ப்ராஜெக்ட் தயாரிக்க நினைத்து அதற்காக என்னை (எங்கள் காம்கேர் நிறுவனத்தை) அணுகி உள்ளார். நன்றாக புரிந்துகொள்ளுங்கள். ஏஐ கற்றுக்கொள்ள அல்ல. செயற்கை தொழில்நுட்பம் குறித்து ப்ராஜெக்ட் (ஒரு சாஃப்ட்வேர் தயாரிப்பு) செய்வதற்காக!

25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவருடன் எந்த பிரச்சனையும் இன்றி நல்லதொரு தொடர்பில் இருப்பதற்கு மூன்றே மூன்று விஷயங்கள்தான் காரணமாக இருக்க முடியும்.

1. அலுவலக ரீதியாக மட்டுமே பேசுவது. தேவையில்லாமல் பர்சனல் விஷயங்களில் ஒருவருக்கொருவர் தலையிடாமல் இருப்பது.

2. தேவையில்லாத அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளாமல் அவரவர் பாதையில் சென்று கொண்டிருப்பது.

3. ஒருபோதும் ’நான் போன் செய்தேன். ஏன் எடுக்கவே இல்லை…’ என்பது போன்ற அபத்தமான கேள்விகளை கேட்காமல் நேரடியாக விஷயத்துக்கு வருவது. ‘பிசியாக இருப்போம்’, ‘வேலையில் இருப்போம்’ என்று புரிந்துகொள்ளும் மனப்பக்குவம். ஒரு வருடம் பேசாமல் இருந்து திரும்பவும் ப்ராஜெக்ட் குறித்து பேச நேர்ந்தாலும் எந்தவித அதீத குசல விசாரிப்பும் இன்றி, அடிக்கடி பேசுவதைப் போன்ற பாவனையுடன் பேசும் நாகரிகம்.

என் அலுவலகத்தில் என் உதவியாளருக்கு இவர் குறித்து அதிகம் தெரியாது. அதனால் இவர் போனில் ஏதோ ஒரு எண்ணைத் தேடிக் கொண்டிருந்தபோது என் உதவியாளர் ‘நான் உதவட்டுமா’ என கேட்டு போனை அவர் கையில் இருந்து பிடுங்காத குறையாக உதவி செய்யப் போக அவரோ ‘சார், யாருக்கு என்ன உதவி வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்க… தினமும் நானே தானே போனை பயன்படுத்துகிறேன். நானே தேடி எடுத்துக்கொள்கிறேன்…’ என்று சொன்னவுடன் என் உதவியாளர் கொஞ்சம் வருந்தினார்.

அவரை காரில் ஏற்றி வழி அனுப்பியவுடன் என் உதவியாளரிடம் அவர் குறித்து சொன்னேன். தேவையில்லாமல் உதவி கிடைக்கிறதே என எதையும் பயன்படுத்தமாட்டார். எனவே, அவர் சொன்னதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நெடுந்தூரப் பயணம் ஒன்றில் ஒரு முறை ஓட்டல் வாசலில் காரை நிறுத்திய போது செக்யூரிட்டி என்னிடம் ‘அம்மாவை பார்த்து கையைப் பிடித்து அழைத்துச் செல்லுங்கள்’ என்றார்.

என் அம்மா நன்றாக நடக்கக் கூடியவர். அத்துடன் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதை விரும்பவும் மாட்டார். அவசியம் இல்லாதபோது எதற்கு என்பார். அதுவும் சரிதானே?

இதை என் உதவியாளருக்கு எடுத்துச் சொல்லி இதுபோல்தான் அந்தப் பேராசிரியரும் சொல்லி உள்ளார். எனவே வருந்த வேண்டாம் என்றேன்.

(புகைப்படம் அனுமதி பெற்று பகிர்ந்துள்ளேன்)

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 24, 2023 | வியாழன்

(Visited 3,139 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon