விபூதி!
பிரக்ஞானந்தா நெற்றியில் திருநீறு பூசியிருப்பது இங்கு சிலருக்கு பிரச்னையாகத் தெரிகிறது. அவரது திறமை, விடாமுயற்சி, பயிற்சி எல்லாவற்றுக்கும் நிகராக விமர்சிக்கப்படுவது அவரது நெற்று விபூதியும்.
அவரது ஒட்டுமொத்த தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள்!
பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்காக எங்கள் நிறுவனத்துக்கே வீடியோ கேமிரா சகிதம் வந்திருந்தார்கள். உடன் மேக்அப் மேனும்.
‘எனக்கு மேக்அப் வேண்டாம். எளிமையாக இருந்தால்தான் என் இயல்புக்கு பொருந்தும்!’ என சொல்லி மறுத்துவிட்டேன்.
என்னை நேர்காணல் செய்ய இருந்த நெறியாளர் (பெண்) என்னிடம் வந்து ‘மேடம், நீங்கள் போட்டிருக்கும் ஸ்படிக மாலையையும், நெற்றி விபூதியையும் எடுத்துவிடலாமே… உங்கள் காஸ்ட்யூமிற்குப் பொருந்தவில்லை…’ என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெகு எளிமையாக சுடிதார் அதற்கு மேல் அதைவிட எளிமையான கோட் போட்டிருந்தேன்.
‘மேடம், நான் என்ன சீரியல் அல்லது சினிமாவிலா நடிக்க இருக்கிறேன். சூழலுக்கு ஏற்ப காஸ்ட்யூம் போட. என் திறமை மற்றும் எங்கள் நிறுவன தயாரிப்பு குறித்த நேர்காணல். இதற்கு எதற்கு என் அடையாளத்தைத் துறக்க வேண்டும்?’ என்றேன் சற்றே சீரியஸாக.
அதற்கு அவர், ‘ மேடம் இதுதான் உங்கள் முதல் நேர்காணலா?’ என்றாரே பார்க்கலாம்.
பேசப் பேச இன்னும் டென்ஷனைத்தான் கூட்டிக்கொண்டே போனார். ‘இது என் 60-வது தொலைக்காட்சி நேர்காணல்மா…. ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? I think this is your first show… That is why you are talking like this…’ என்று சொல்லிவிட்டு சற்று நிறுத்தினேன்.
முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல நினைத்தேன்.
‘ஒரு நேர்காணலுக்கு வரும்போது யாரை நேர்காணல் செய்கிறீர்களோ அவர் குறித்து கொஞ்சம் எக்ஸ்புளோர் செய்து கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்…’
ஆனால் நிகழ்ச்சி நடத்தும்போது அவர் மனம் புண்படக் கூடாதே என நிகழ்ச்சி முடிந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் வெகு நாசூக்காய் சொன்னேன்.
பதில் ஏதும் சொல்லாமல் புறப்பட்டார்.
புகைப்படக் குறிப்பு: நெட்டில் இருந்து எடுத்து ஏஐ மூலம் டிஸைன் செய்துள்ளேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 25, 2023 | வெள்ளி