மலேசியாவும், அரசியலும்!
மலேசிய பயணத்தில் ஒரு இஸ்லாமிய பெண் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததை, தன்னம்பிக்கையாக வளர்ந்ததை, சுயதொழில் முனைவராக உயர்ந்ததை எல்லாம் உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லிக் கொண்டே வந்தார்.
அவர் பெற்றோர், உற்றார், உறவினர், கணவர் வீட்டில் இப்படி எல்லோருக்கும் புரிய வைக்க பிரம்மப் பிரயத்தனப்பட்டு, அப்படியே புரிந்துகொள்ளாவிட்டாலும் அதை பெரிதுபடுத்தாமல் தன் வழியில் தானும் உயர்ந்து தன் மகளையும் வாழ்க்கையில் உயர்த்தி பேரக் குழந்தையையும் பெற்று மிக மகிழ்ச்சியாக வாழ்வதை பெருமையுடன் சொல்லிக்கொண்டே வந்தார், நான் எதையும் அவரிடம் விசாரிக்காமலேயே.
நான் வியந்து பார்ப்பதை மட்டும் அவ்வப்பொழுது கவனத்தில் எடுத்துக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் அரசியல் பற்றி பேச்சு வந்தபோது, எந்த அரசையும் அவர் விமர்சிக்கவில்லை. அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பொதுவாக ‘சென்ட்ரல்ல கொஞ்சம் மதம் பாகுபாடு பார்க்கிறாங்கல்ல…’ என்று கேட்டார்.
அரசியல் என்றல்ல, பொதுவாகவே எந்த விவாதத்துக்குமே பொதுவெளியில் செல்வதில்லை. என்னை நேரடியாக பேசினால் மட்டும் பதில் சொல்வேன். பயம், தயக்கம் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். யாரும் இங்கே குழந்தை அல்ல. எதுவும் தெரியாதவர்களும் அல்ல. யாருக்கும் பேசி எதையும் புரிய வைப்பது என்பது முடியாத காரியம். ஏனெனில் எல்லோருமே ஏற்கெனவே ஒரு டெம்ப்ளேட்டில் மனதை வார்த்து வைத்திருக்கிறார்கள் எனும்போது நாம் பேசி டென்ஷன் ஏற்றிக்கொண்டு தலைவலி நமக்குத்தான் என்பதுதான் உண்மையான காரணம்.
எனவே அவர் சொன்னதுக்கு ‘அப்படியல்ல…’ என்று மட்டும் சொல்லி நிறுத்தினேன்.
பிறகு அவரே தொடர்ந்தார், ‘சும்மா வெளிநாடு வெளிநாடுன்னு போயிட்டு இருக்காரே… நம் நாட்டை எப்போ கவனிப்பார்…’ என்றார்.
என்னவோ இவரிடம் சொன்னால் கொஞ்சம் புரிந்துகொள்வார் என்று தோன்றியதால் பேசினேன்.
‘வெளி நாடு செல்வது மற்ற நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள… நம் நாட்டைப் பற்றிய உயர்ந்த் கவனிப்பை அவர்களிடம் தோற்றுவிக்க… நம் வளத்தை, அறிவாற்றலை பரப்ப…’ என்று சொல்ல ஆரம்பித்து அவர் முகத்தை உற்று நோக்கினேன்.
அவர் என் பேச்சை உன்னிப்பாக கவனிப்பதுபோல் தோன்றியதால் தொடர்ந்தேன்.
‘நீங்கள் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தன்னம்பிக்கையாக உருவாக உங்கள் குடும்பத்தை சம்மதிக்க வைக்க எவ்வளவு போராடினீர்கள். உங்கள் விருப்பம் போல் நீங்களும் வளர்ந்து உங்களைச் சார்ந்துள்ள பெண்களையும் உயர்த்தும் அளவுக்கு வளர்ந்ததுக்கு எத்தனைப் போராடி இருப்பீர்கள், ஏன் இன்றும் அப்படித்தானே. உங்களை உங்கள் வீட்டார் புரிந்துகொள்ள எத்தனை முயற்சி எடுத்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்து இன்னமும்கூட உங்களை முழுமையாக புரிந்துகொண்டார்களா என எனக்குத் தெரியாது. எந்த வெற்றியும் போராடித்தான் கிடைக்கும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு…’
அதற்கு அந்தப் பெண் ‘ஆமாங்க… இன்னும் முழுமையா புரிஞ்சுக்கலை…’ என்றார்.
‘ஆனால் இந்த ஐந்துநாள் பயணத்தில் அதுவும் தினமும் சில மணி நேரங்களே பேசும் வாய்ப்பு கிடைத்த என்னால் மட்டும் எப்படி புரிந்துகொள்ள முடிந்தது…’ என்றேன்.
‘உங்கள் மெச்சூரிட்டி…’ என்றார்.
‘அதே தாங்க… விஷயம்… எல்லாவற்றுக்கும் இது ஒண்ணுதாங்க அடிப்படை…’
‘ஆமால்ல…’ என்று அவர் சொன்ன பதிலில் அவர் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலை புரிந்து கொண்டது வெளிப்பட்டதால் இதற்கும் மேல் நான் அரசியல் பேச விரும்பாமல் அன்றைய தினம் எந்தெந்த உரைகள் எந்தெந்த அறைகளில் நடக்கிறது என்று பேச ஆரம்பித்தோம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 26, 2023 | சனிக்கிழமை