மலேசியா: யார் அந்தப் பெண்?

யார் அந்தப் பெண்?

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 500 பேர்கள் கலந்து கொண்டார்கள். மாநாடு ஜூலை 21 முதல் 23 வரை. ஆனால் மாநாட்டுக்கு 2 நாட்கள் முன்னதாகவே மலேசியாவில் இருக்கும்படி உள்ளூர் சுற்றுலாவுக்காக அனைவரையும் ஒருங்கிணைத்திருந்தார்கள்.

சென்னையில் இருந்து குழு குழுவாக சிறப்பு விருந்தினர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் விமான டிக்கெட் மொத்தமாக எடுத்திருந்தார்கள்.

என் குழுவில் என்னையும் சேர்த்து இரண்டு பெண்கள், மற்றவர்கள் ஆண்கள். அனைவருக்கும் எண்ண அலைகள் ஒத்து வந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஒரு வேளை ஒத்து வராவிட்டால் என்ற கேள்விக்குறி மனதின் ஓரத்தில் இருந்துகொண்டுதான் இருந்தது. அதை அப்படியே ஓரங்கட்டி விட்டு பயண ஏற்பாடுகள் செய்து வந்தேன்.

பயண தினத்தன்று இரவு 11.30 க்கு விமானம். 8.30 மணிக்கே விமான நிலையம் வந்து விட்டேன்.

சென்னை விமான நிலையத்தில் எங்கள் குழுவினருடன் அறிமுகம் செய்து கொண்டு விமானப் பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டாயிற்று. எங்களைப் போல பலநூறு பேர், பல குழுக்களாக காத்திருந்தார்கள்.

எங்கள் குழுவில் என்னுடன் சேர்த்து இரண்டு பெண்கள் என, நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன் அல்லவா? அந்தப் பெண்ணுடன் இன்னும் கொஞ்சம் கூடுதல் அறிமுகம் செய்துகொண்டு விமான நிலையத்தில் எங்கள் கேட்டிற்குச் சென்று காத்திருந்தோம். சற்றேறக்குறைய என் வயதுதான் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு.

அந்த கேட் முழுவதும் மாநாட்டுக்குச் செல்லும் நபர்களால் கலகலப்பாக நிரம்பி வழிந்தது. எங்கும் திருவிழாக் கோல மகிழ்ச்சி.

பெரிதாக எந்த தொந்திரவும் யாராலும் இல்லை. காரணம், விமானம் மூன்று மணி நேரம் தாமதம். இரவு நேரம் என்பதால் சிலர் தூக்க மயக்கத்தில். சிலர் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டு புது நட்புகள் அமைந்ததில் கலகலப்பாக.

விமானத்திலும் நானும் அந்தப் பெண்ணும் அருகருகே அமர்ந்து கொண்டோம். ஏறியவுடனேயே எல்லோருக்கும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். இரவு மூன்றைக் கடந்துவிட்டதல்லவா? அந்த நேரம் வழக்கமாக நான் விழித்துக்கொள்ளும் நேரம் என்பதால் உறக்கம் வரவில்லை. கண்களை மூடிக்கொண்டிருந்தேன். அவ்வளவுதான்.

சின்னச் சின்ன யோசனைகளுக்கு நடுவே புரண்டு படுக்க இடம் இல்லாததால், உட்கார்ந்த இடத்திலேயே இடமும், வலமுமாக தலையை சாய்த்து நிமிர்வதற்குள் மலேசியா மண்ணில் விமானம் இறங்கி விட்டது.

விமான நிலையத்தில் அனைவருக்கும் பேருந்துகள் காத்திருந்தது. அவரவர் பெட்டிகளை அவரவர் ஏறும் பேருந்தின் கீழ்ப்குதியில் இருக்கும் லாக்கர் பகுதியில் வைத்துக்கொள்ள அங்கிருந்த உதவியாளர்கள் உதவினார்கள்.

எந்த பஸ்ஸில் வேண்டுமானாலும் அமர்ந்துகொள்ளலாம். ஆனால் எந்த பஸ்ஸில், யார் பக்கத்தில் அமர்கிறோமோ அதையே கடைசி வரை பின்பற்றச் சொல்லி இருந்தார்கள். காரணம், பாஷை தெரியாத ஊரில் தொலைந்து விடக் கூடாது என்பதால்.

நான் ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டேன். என் அருகில் என்னுடன் எங்கள் குழுவில் வந்திருந்த அந்த பெண். அவருக்கும் அதுவே செளகர்யமாக இருப்பதாக அவரே முகம் மலரச் சொன்னார்.

எங்கள் விமானம் சென்னையில் இருந்து கிளம்பும்போதே மூன்று மணி நேர தாமதம் என்பதால் மலேசியா சென்றடைந்ததும் தாமதம். ஆகவே, ஓட்டலுக்குச் செல்ல நேரம் இல்லை. நேராக ஒரு சுற்றுலா தளத்துக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்கு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

முதல் நாள் சாப்பிடும் இடத்துக்கு எங்கள் பஸ்ஸில் வந்திருந்தவர்களுடன் சென்றேன். சைவம், அசைவம் என இரண்டு பிரிவுகளாக வைத்திருந்தார்கள். ஒரே சமையல் அறையில் இரண்டும் தயாராவதால் என்னால் மனம் உவந்து சாப்பிடப் பிடிக்கவில்லை. யாருக்கும் எந்த தொந்திரவும் கொடுக்காத வகையில் நாசூக்காக வரவேற்பறைக்குச் சென்று அமர்ந்துகொண்டு மொபைலில் நான் எடுத்தப் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு முடித்ததும் என்னுடன் பயணித்த அந்தப் பெண் ‘என்ன சாப்பிடலையா?’ என்றார். நான் காரணம் சொன்னதும் ‘இரண்டும் தனித்தனியாகத்தானே இருக்கிறது?’ என்றார் அக்கறையாக. ‘இரண்டும் ஒரே சமையல் அறை எனும்போது எனக்கு சாப்பிட சங்கடமாக இருக்கிறது’ என்ற காரணத்தைச் சொல்லி சென்னையில் இருந்து கிளம்பும்போதே பாதாம் கேக், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவில் தயார் செய்த முறுக்கு போன்றவற்றை ஐந்து நாட்களுக்கும் சேர்த்து எடுத்து வந்துவிட்டேன். உபயம் என் அப்பாம்மா என்றபோது அவர் புரிந்துகொண்டார்.

அநாவசியமாக அறிவுரை என்ற பெயரிலோ அல்லது அக்கறை என்ற பொருளிலோ அல்லது அசைவம் குறித்து எந்த வீண் விதண்டாவாதமோ செய்யவில்லை.

அவரது ஆழமான சிறிய புன்னகையில், என் குணத்தை அப்படியே புரிந்துகொண்டார் என்பது எனக்குப் புரிந்தது.

சாப்பாடு முடிந்ததும் சைனீஸ் கோயில், சுல்தான் பேலஸ், சாக்லெட் ஃபேக்டரி, கே.எல் டவர் என சில இடங்களுக்குச் சென்றுவிட்டு அன்றிரவு மீண்டும் அதே ஓட்டலில் இரவு சாப்பாட்டுக்காக அழைத்துச் சென்றார்கள். இந்த முறை நான் ஏற்கெனவே முடிவு எடுத்ததைப் போல், சாப்பிடும் இடத்துக்குச் செல்லாமல் வரவேற்பறையிலேயே உட்கார்ந்து கொண்டேன்.

அந்தப் பெண் ‘பார்த்து பத்திரமா இருங்க, நான் சாப்பிட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். இரண்டு பாதாம் கேக் மற்றும் சூடான பால் இவற்றுடன் இரவு உணவை முடித்துக்கொண்டேன்.

பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் ‘உங்களுக்காகத்தான் சீக்கிரம் வந்தேன்’ என சொல்லிக் கொண்டு முதல் ஆளாக சாப்பிட்டு முடித்துத் திரும்பினார்.

பிறகு நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த 5 நட்சத்திர ஓட்டலுக்கு கொண்டு இறக்கினார்கள்.

ஓட்டல் அறை ஏற்பாடு செய்யும்போதே, இரண்டு நபர்களுக்கு ஒரு அறை என ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆரம்பத்திலேயே, நான் தனி அறை கேட்டிருந்ததால் எனக்கு தனி அறை ஒதுக்கி இருந்தார்கள். எதுவும் குறையில்லாமல் பயணத்தின் முதல்நாள் கலகலப்பாக நிறைவடைந்தது.

என்னுடன் வந்திருந்த அந்தப் பெண் ‘குட்நைட்’ சொல்லி விடைபெற்றார்.

புது இடம் என்பதால் இரவு நீண்ட நேரம் உறக்கம் வரவில்லை. ஒரு விஷயம் மட்டும் ஆச்சர்யமாக இருந்தது.

முதல்நாள் இரவு 7.30 க்கு வீட்டில் இருந்து புறப்பட்ட நாங்கள் காபி டீ எதுவுமின்றி மறுநாள் மதியம் 1.30 மணிக்கு சாப்பாட்டுக்கு நேரடியாகச் சென்றது எனக்கு புதிதல்ல என்றாலும் பலருக்கும் கஷ்டமாகவே இருந்தது.

ஆனால் என்னால் எப்படி அத்தனை புத்துணர்வுடன் இருக்க முடிந்தது என்பதை அன்றைய தினத்தின் புகைப்படங்களை வைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தேன்.

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போதே நமக்கு விருப்பமான / தோதான உணவு கிடைக்காதபோது எப்படி சமாளிப்பது என்பதற்கு ஏற்ப முன் ஏற்பாட்டுடன் வந்துவிடுவதால் மற்றபடி காபி டீ, டிபன், சாப்பாடு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

அடுத்த நாள் காலையில் நாங்கள் தங்கி இருந்த ஓட்டலிலேயே காலை உணவு. பிரட், பால், டிகாஷன், பழங்கள், பலவகை ஜூஸ், சப்பாத்தி, குருமா இத்துடன் சில அசைவ வகை உணவும் இருந்தது.

நான் எடுத்து வந்திருந்த பிஸ்கட் மற்றும் ஓட்டல் அறையிலேயே இருந்த கெட்டிலில் சூடான வெந்நீர் போட்டு, நான் கொண்டு வந்திருந்த ப்ரூ + சர்க்கரை + பால்பவுடன் மிக்ஸ் கலந்து காபி சாப்பிட்டுக் கொண்டேன்.

அந்த ஓட்டலின் முதல் தளத்தில் இந்தியன் மளிகைக் கடை ஒன்று இருந்ததால், அங்கு வாழைப்பழம் இரண்டு வாங்கி மதிய உணவுக்காக வைத்துக்கொண்டேன்.

நேராக பத்துமலை முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். திவ்ய தரிசனம். என்னுடன் வந்திருந்த பெண்ணுக்கு காலில் கொஞ்சம் மூட்டுப் பிரச்சனை என்பதால் மலையின் கீழே உள்ள முருகபெருமானை வணங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டு என்னை வழி அனுப்பி வைத்தார்.

நான் 272 படிக்கட்டுகளில் எப்படி ஏறி இறங்கினேன் என தெரியவில்லை. சோர்வடையவும் இல்லை. இறங்கியவுடன் இளநீர் ஒன்றை குடித்துக் கொண்டேன்.

பிறகு, ஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ் என்ற இடத்துக்குச் சென்று வந்தோம். தரையில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேசம் அது. வின்ச்சில் சென்றோம்.

அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் மதிய உணவு. வரவேற்பறை என்றெல்லாம் எதுவுமில்லை என்பதால் ஓட்டலினுள்ளேயே நானும் ஓரிடத்தில் நான் அமர்ந்து கொண்டேன்.  நான் வழக்கம்போல் என் உணவை முடித்துக் கொண்டேன். என்னுடன் வந்த பெண் அசைவம் எடுத்துக்கொண்டு வந்தார். என் முன் அமர முற்பட்டார். பிறகு என்ன நினைத்துகொண்டாரோ, ‘நான் அங்கே சென்று சாப்பிட்டுவிட்டு வருகிறேன்’ என சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்தவர் மனதை புண்படுத்தாத அவருடைய அந்த நாகரிகமான அணுகுமுறை பிடித்திருந்தது.

சாப்பாடு முடிந்தவுடன் அங்கிருந்த ஒரு மாலில் ஷாப்பிங். பிறகு இரவு சாப்பாடு முடிந்ததும் நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் கொண்டுவிட்டார்கள்.

அங்கு அமெரிக்க ஸ்பெஷல் ‘ஸ்டார்பக்ஸ்’ காபி ஷாப் இருந்தது. ஒரு காபியை முழுமையாக குடிக்கவே முடியாது. காரணம், நார்மல் சைஸ் காபி கப்பே மெகா சைஸில் இருக்கும். எனக்காக அந்தப் பெண்ணும் காபி குடிக்க வந்தார். காபியுடன் ஒரு கப்பும், வெறும் கப் ஒன்றும் வாங்கிக்கொண்டு ஒரு கப் காபியை இரண்டாக்கிக் குடித்தோம்.

பின்னர், ‘குட்நைட்’ சொல்லி விடைபெற்றார் அந்தப் பெண்.

நாள் முழுவதும் நடந்த விஷயங்களை அப்பா அம்மாவுடன் வாட்ஸ் அப்பில் பேசி முடிக்க அரை மணி ஆனது. குறிப்பாக என்னுடன் பயணிக்கும் அந்தப் பெண் பற்றியும் நிறைய பேசினேன். அப்பாவும் அம்மாவும், ‘நாளை மாநாடு துவக்க நாள், எனவே நன்றாக தூங்கி ஓய்வெடு’ என என்னதால் போனை வைக்க வேண்டியதாயிற்று.

முதல் இரண்டு நாட்களும் அந்தப் பெண் பஸ் பயணத்தின் போது என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் மிக ஆச்சர்யமாக இருந்தது. ஒரே மகள். அவளும் டாக்டர், மாப்பிள்ளையும் டாக்டர். பேரன் பிறந்து ஒரு வருடம் இன்னும் முழுமையாக முடியவில்லை. பேரன் குறித்து பேசும்போது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. மகளின் தன்னம்பிக்கைக் குறித்துப் பேசும்போது அத்தனை மலர்ச்சி. மருமகனின் குணத்தைப் பற்றிப் பேசும்போது அத்தனை மனநிறைவு. தன் கணவரைப் பற்றி பேசும்போது அத்தனை பெருமை. தன் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர்  குறித்து பேசும்போது அத்தனை பெருமிதம்.

இவர், இருபது வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வைத்து நடத்துகிறார். தன்னிடம் பயிற்சி எடுக்கும் மாணவிகளை அவர் கையாளும் விதம் பற்றிக் கூறும்போது அவரது அணுகுமுறை கிளாசிக்.

அவர் பேச்சு, நடவடிக்கை, அணுகுமுறை இப்படி எல்லாமே கடவுள் எனக்காக Ai தொழில்நுட்பம் மூலம் என்னைப் போலவே ஒரு உருவத்தை படைத்து சக பயணியாக அனுப்பி வைத்ததைப் போல் இருந்தது.

இத்தனைக்கும் சென்னையில் இருந்து கிளம்பியதில் இருந்து இரண்டு நாட்கள் சுற்றுலா சென்ற நாள்வரை நான் ஒரு வார்த்தை என்னைப் பற்றி கூறவில்லை. அவரும் கேட்கவில்லை. என் பெயர் ‘புவனேஸ்வரி’ என்று மட்டும் தெரியும். ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்ற பெயர் தெரியாது.

பயணத்தில் ஆங்காங்கே என் படைப்புகள் மூலம் என்னை புகைப்படம் மற்றும் செய்திகள் வாயிலாக அறிந்தவர்கள் ‘நீங்கள் தானே காம்கேர் புவனேஸ்வரி’ என கேட்டு தங்களை அறிமுகம் செய்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட போதுதான் அவருக்கு என்னைப் பற்றிக் கேட்கத் தோன்றியது. அதையும் உடனே எல்லாம் கேட்கவில்லை. மாநாட்டின் தொடக்க நாள் அன்று ‘எல்லோரும் உங்களை ஏதோ சொல்லிக் கேட்கிறார்களே… அது என்ன?’ என கேட்டார். அதுவா, ‘நீங்கள் தானே காம்கேர் புவனேஸ்வரி?’ என கேட்கிறார்கள்.

மாநாட்டில் அவர் கட்டுரை வாசிக்க வந்திருக்கிறார். நானும் கட்டுரை வாசிக்க வந்திருப்பதாகவே நினைத்திருந்திருக்கிறார். ஆனால், நான் சிறப்பு விருந்தினராக தொழில்நுட்பம் குறித்து பேச வந்திருக்கிறேன் என்று அன்றுதான் தெரிந்துகொண்டார். அப்போதுதான் என் பற்றியும் எங்கள் காம்கேர் குறித்தும் கொஞ்சம் சொன்னேன்.

மாநாட்டின் மூன்று நாட்களும் இரண்டு பேரும் வெவ்வேறு திசைகளில் பயணித்தோம். பிரமாண்டமான அந்த பல்கலைக்கழகத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கே பொறுமை வேண்டும். திடீர் திடீரென மழை வேறு பெய்தது. கால் வலி கண்டுவிடும். ஆனால் எனக்கு நடக்கப் பிடிக்கும் என்பதாலும், அமெரிக்காவில் மிசெளரி பல்கலைக்கழகம், வாஷிங்டன் பல்கலைக்கழகம், இந்தியாவில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கெனவே சென்ற அனுபவம் இருப்பதாலும் கால் வலி எல்லாம் தெரியவில்லை.

அவர் கட்டுரை வாசிக்க வந்திருந்ததால் அவருக்கான குழு வேறு. நான் சிறப்பு அழைப்பாளர் என்பதால் எனக்கான குழு வேறு. எனவே நாங்கள் மாநாடு நடந்த மூன்று நாட்களும் மதிய உணவின் போதும், மாலை டீ நேரத்திலும், இரவு பஸ் பயணத்திலும் மட்டுமே சந்தித்துக்கொண்டோம்.

நட்பு என்ற பெயரில் ஒரு துளியும் அவரது எல்லையை அவர் மீறவே இல்லை. மாநாட்டில் கூட நம் நாட்டு மக்களில் (மலேசியர்கள் அல்ல) ஒருசிலர் இங்கிதமில்லாமல் நான் என்ன ஜாதி என்றெல்லாம் கேட்டார்கள். இவர் அது குறித்தெலாம் எதுவுமே கேட்கவில்லை. என் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவுமே பேசவில்லை.

அவர் தன் வீட்டு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தன் பள்ளி ஆசிரியர்கள் மூலம் வடபழனி முருகன் கோயில் அர்ச்சகர் மூலம் நல்ல நாள் பார்த்து வரச் சொல்வார் என்றும், தன் மகளுக்கு சீமந்தம் செய்ததாகவும் அந்த நிகழ்ச்சிக்கு ஏழைகளுக்கு உணவளித்து மகிழ்ந்ததாகவும் சொன்னார்.

முத்தாய்ப்பாக, அவர் பேரனின் ராசி நட்சத்திரம் எல்லாம் சொன்னார். மருத்துவமனையிலேயே பிறந்த நேரம் சொல்லும்போதே ராசி நட்சத்திரம் எல்லாம் சேர்த்தே பிரிண்ட் செய்து கொடுத்ததாகவும் சொல்லச் சொல்ல நான் வியப்பின் எல்லைக்கே சென்றேன்.

தினமும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள தவறவில்லை. நட்பாக பழகினார். ஒருதுளி எல்லை மீறல் கிடையாது. பெண்களுக்குள் பெண்கள் என்ன எல்லை மீறல் என நினைக்கலாம்.  ‘நீங்கள் ஏன் புடவை கட்டுவதில்லை?’, ‘உலகத் தமிழ் மாநாடு, புடவைதான் சிறப்பாக இருக்கும்’, ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்’, ‘உங்கள் கணவர் என்ன செய்கிறார்’, ‘நீங்கள் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது’, ‘எதிர்காலம் கஷ்டமா இருக்கும்’ அப்படி இப்படி என கேள்விகள் கேட்டு எல்லை மீற வாய்ப்புகள் இருந்தாலும் செய்யவே இல்லை.

நானும் அவர் குறித்து சொன்ன விஷயங்களை கேட்டு மனதுக்குள் பாராட்டி வந்தேனே தவிர ‘ஆஹா, ஓஹோ’ என புகழவில்லை.

இப்படியே கடைசி நாளும் வந்தது. அந்தப் பெண் கண்களை மூடி, ‘நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். இந்த ஐந்து நாட்களும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல், சுமூகமாக கடக்க இப்படியான ஒரு நல்ல பெண்மணியை எனக்கு சகபயணியாக அனுப்பி வைத்த கடவுளுக்கு நன்றி’ என்று பிரார்த்தனை செய்வதைப் போல் சொன்னார். (அவர் சொன்ன நல்ல பெண்மணி நான்தான்.)

அட, இதைத்தானே நானும் மனதுக்குள் இந்த ஐந்து நாட்களுமே நினைத்து வந்தேன் என்பதையும், என் அப்பா அம்மாகூட நல்ல சக பயணி கிடைத்துக்கு மகிழ்ந்தார்கள் என்பதையும் சொன்னபோது ‘அப்படியா?’ என்றார்.

‘பார்த்தீர்களா… கடைசியில் மனிதம்தான் வென்றிருக்கிறது…’ என்றார் அந்தப் பெண்.

அந்தப் பெண்ணின் பெயர்: ‘ரோக்‌ஷனா குலாம் மொகிதீன்’

‘ஆம். ஆனால் ஒரு விஷயம். நீங்கள் சரியாக நடந்துகொண்டீர்கள், நானும் சரியாக நடந்துகொண்டேன். இருவரும் அவரவர் பாதையில் வார்த்தைகளால்கூட ஒருவரை ஒருவர் எல்லை மீறாமல் நடந்துகொண்டதால்தான் அது சாத்தியமானது.’ என்றேன்.

அந்தப் பெண், சாரி இனி எதற்கு அந்தப் பெண் என்ற அடைமொழி? ரோக்‌ஷனா குலாம் மொகிதீன் புன்னகைத்தார். மறுபேச்சுப் பேசவில்லை.

எழுத்தும், ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்

(Visited 506 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon