தலைமுறை கடந்தும் பேசும் படைப்புகள்!

தலைமுறை கடந்தும் பேசும் படைப்புகள்!

பெற்றோருடன் பணிபுரிந்தவருக்கு சதாபிஷேகம். சற்றேறக்குறைய என் பெற்றோரின் சமவயது. நான் பிறப்பதற்கு முன்பில் இருந்தே குடும்ப நண்பர்கள்.

தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள்.

சமீபத்தில் இஸ்ரோவில் பணியாற்றும் ஒட்டுமொத்தப் பெண்களின் உற்சாகமான புகைப்படத்தைப் பார்த்தபோது எப்படிப்பட்ட மனமகிழ்ச்சி உண்டானதோ அதைப்போல் அங்கு வந்திருந்த வயதில் மூத்த பெண்கள் அனைவரும் சிரித்துப் பேசி மகிழ்ந்திருந்ததைக் கண்டபோதும் உற்சாகம் பீறிட்டது.

என் சிறு வயதில் பல நாட்கள் என் அப்பா அம்மாவுடன் அவர்கள் அலுவலகம் சென்றிருக்கிறேன். இந்தக் காலத்தில்தானே இரவு ஷிஃப்ட் என்றெல்லாம் ஐடியில் பெண்கள் உழைக்கிறார்கள்.

ஆனால் அந்த காலத்திலேயே (40 வருடங்களுக்கு முன்பே) பெண்கள் இரவு ஷிஃப்ட், மழை, புயல், வெள்ளம் என நேரம் காலம் இல்லாமல் பணிக்குச் சென்ற பெண்களை நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.

சென்னையில் என் அம்மா பணிபுரிந்த அலுவலகத்தில் ஒரே நேரத்தில் ஐநூறு அறுநூறு பெண்களுக்கும் மேல் பணியாற்றுவதை எல்லாம் என் சிறுவயதிலேயே பார்த்திருக்கிறேன். பெண்கள் புத்துணர்வுடன் இரவு ஷிஃப்ட் பார்த்ததே தெரியாமல் பணி முடிந்து கிளம்பிக் கொண்டிருப்பார்கள், அதே நேரம் பகல் ஷிஃப்ட்டுக்கு பணிக்கு பெண்கள் வந்து கொண்டிருப்பார்கள். அத்தனை அழகாக இருக்கும். அந்த வயதிலேயே நான் ரசித்திருக்கிறேன். எதிர்கால குறிக்கோள் எல்லாம் உருவாகாத வயதிலேயே என் அம்மா போல ஆஃபீஸ் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோரின் நண்பர்கள் அனைவருக்கும் உழைத்து ஓய்ந்து வயதின் மூப்பின் காரணமாக ஓய்ந்து தளர்ந்த உடல்வாகு. ஆனாலும் தளர்வில்லா தன்னம்பிக்கை. மெய்மறந்த புன்னகை.

அனைவரையும் நான் விதவிதமாகப் போட்டோ எடுத்து அவர்களின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பினேன். அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.

பெண்கள் ஒருபக்கம் என்றால் ஆண்கள் மற்றொரு பக்கம் என ஒரு ஒழுங்குடன் அமர்ந்திருந்தார்கள்.

என் அப்பாவையும் அம்மாவையும் பார்த்ததும் அவர்கள் இருசாராருமே உற்சாகத்துடன் பேச எழுந்து வந்தார்கள்.

அப்பாவின் நண்பர் ஒருவர் அம்மாவின் நண்பரிடம் என்னைக் காண்பித்து ‘இவங்க யார் தெரியுமா? இவங்க தான் காம்கேர் புவனேஸ்வரி’ என்றபோது அவர் ‘அட போங்க… என்ன புதுசா அறிமுகப்படுத்தறீங்க… இவங்க எழுதிய புத்தகமே எங்கிட்ட இருக்கு…’ என்று சிறு வயது பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் ‘உங்கிட்ட பென்சில்தானே இருக்கு, எனக்கு எங்கப்பா பேனாவே வாங்கிக் கொடுத்திருக்கார்’ சொல்லி குழந்தைத்தனமாய் பெருமிதப்படுவதைப் போல பெருமிதப்பட்டார்கள்.

இவர்கள் அனைவருமே 75+ வயதினர் என்பதுதான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம்.

தலைமுறைகளைக் கடந்து என் படைப்புகள் பேசுவதை நினைத்து பெருமை என்பதைவிட நான் என் பாதையில் சரியாகப் பயணித்து வருகிறேன் என்ற நிம்மதி! மன நிறைவு.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 27, 2023 | ஞாயிற்றுக்கிழமை

(Visited 2,322 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon