சாதனையும், குடும்பப் பொருளாதாரமும்!
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் அம்மாவிடம் பேட்டி எடுக்கிறார்கள் ஒரு மீடியாவில். அவர் அம்மா தன்னம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டுதான் பேசுகிறார்.
நடுத்தரக் குடும்பத்தில் இரண்டு குழந்தைகளை படிக்க வைத்து இரண்டு பேரையும் செஸ் போட்டிகளுக்கு தயார்படுத்தியதை கொஞ்சமும் சுயபச்சாதாபம் இல்லாமல் கம்பீரமாக பேசுகிறார்.
ஆனால் பேட்டி எடுப்பவர், ‘எப்படி கஷ்டப்பட்டீங்கன்னு சொல்லுங்க…’ என்று பலமுறை கேட்டுக்கொண்டே இருந்தார்.
அவரும், ‘நடுத்தர குடும்பம், ரெண்டு குழந்தைகளையும் முன்னுக்குக் கொண்டுவர கஷ்டப்பட்டோம். ஆனால் எதையும் நானும் அவரும் குழந்தைகள்கிட்ட காண்பிக்க மாட்டோம்…’ என்று வெவ்வேறு விதமாக சொல்லிக் கொண்டே இருந்தார்.
பேட்டி எடுப்பவருக்கு அது போதவில்லை போலும். ‘அதில்லம்மா, எப்படி எல்லாம் கஷ்டப்பட்டீங்க…’ என கேட்டுக்கொண்டே இருந்தார். அந்த அம்மா அழுது குமுறி பதில் சொல்லும் வரை விட மாட்டார்போல அந்த நெறியாளர்.
வெற்றி பெற்றவர்கள் / சாதனை புரிந்தவர்கள் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடியிருக்க வேண்டுமா என்ன?
சாதனையையும் ஏழ்மையையும் ஏன் இணைக்கிறார்கள் என்றே புரியவில்லை. சாதனையையும், திறமையையும், பயிற்சியையும், முயற்சியையும் தானே இணைக்க வேண்டும்.
வசதியானவர்கள் சாதனைபுரிந்தால் பணம் இருக்கிறது, வசதி இருக்கிறது, சாதனை செய்வதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது என்பார்கள்.
ஆனால் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் அம்மாவை பாராட்டியே ஆக வேண்டும். நான் பார்த்த வரை எந்த நேர்காணலிலும் வறுமை, கொடுமை என அவர் குரல் தழுதழுக்கவில்லை. மாறாக நாங்கள் (அவரது கணவரையும் சேர்த்து) எங்கள் பிள்ளைகள் முன்னுக்கு வர உதவுகிறோம். அவர்கள் தங்கள் திறமையினால் முன்னேறுகிறார்கள் என்றுதான் கம்பீரமாக கூறி வருகிறார். இதுதான் நிஜமான நடுத்தரக் குடும்பப் பின்னணியில் உள்ளவர்களது மனோபாவம். இப்படித்தான் பேசுவார்கள் நடுத்தரக் குடும்பத்தில் வாழ்பவர்கள்.
மாறாக பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் சுற்றி உள்ள Social Pressure / Media pressure மட்டுமே.
Hats off to you madam.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 27, 2023 | ஞாயிற்றுக்கிழமை