தொழில்நுட்ப டைரி
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்துக்கு அருகில் இருக்கும் ஒரு கல்லூரியில் பேராசிரியராய் இருக்கும் முப்பதில் இருந்து முத்தத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டுரை வாசிக்க (Paper Presentation) வந்திருந்தார்.
என் புத்தகங்களை அவர் பள்ளி நாட்களில் இருந்து வாசித்திருப்பதாகவும் என்னை சந்தித்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
நானும் அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என கேட்டு வாழ்த்தினேன்.
அவர் விடாமல் ‘மேடம் உங்க வயசுக்கு நீங்க 250 புத்தகங்கள் எழுதி இருக்கீங்க… என் வயசுக்கு நான் இவ்வளவு எழுதி இருக்கேன்…’ என ஏதோ சொல்ல வந்தார்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்தேன்.
‘உங்கள் வயசுக்குள்ள நானும் இதுபோல் இவ்வளவு எண்ணிக்கையில் நூல்கள் எழுதிவிடுவேன்…. இன்னும் வயதிருக்கில்லையா?’ என்று அவரே சொல்லிக் கொண்டார்.
அதாவது நான் இப்படி அவரைப் பாராட்ட வேண்டும் என நினைத்து அவர் நினைப்பதை அவரே சொல்லிக் கொண்டார்.
‘நான் சொன்னேன். புத்தகம் வெளியிடுவதெல்லாம் இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரிய விஷயமே இல்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம், வெளியிடலாம், பதிப்பாளர் கூட தேவையில்லை, பதிப்பாளர், எழுத்தாளர், விற்பனையாளர், விளம்பர்தாரர் என எல்லாமாகவும் இருக்க இன்றைய சூழலில் வாய்ப்புகள் ஏராளம். புத்தகத்தை வாசிக்க வைக்க வேண்டும். நிறைய பேருக்குக் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவுதான்…’ என்று சொல்லி நிறுத்தினேன்.
அவரும் ‘ம்’ என கேட்டுக்கொண்டார்.
‘ஆனால் ஒரு விஷயம். நான் புத்தகங்கள் மட்டும் எழுதவில்லை. என் புத்தகங்களின் பின்னணியில் என் பரந்துபட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் இருக்கின்றன. என்னைப் போலவே எங்கள் காம்கேரில் என்னுடன் இணைந்து பணிபுரியும் ஏராளமான தொழில்நுட்ப விஞ்ஞானிகளின் அறிவும், உழைப்பும், ஆற்றலும் இருக்கின்றன. புத்தகங்கள் வெளிவருவதற்கு முன் ஐடி தயாரிப்புகள் வெளிவந்துவிடும். எங்கள் நிறுவன ஐடி தயாரிப்புகள் உருவாக்கப்பட்ட காலகட்டத்துக்கும் பரவலாக அவை உலக அளவில் விற்பனையில் ரீச் ஆவதற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில்தான் அந்தத் தயாரிப்புகளுக்கு நாங்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை புத்தகங்களாக்கி உலகுக்கு சமர்ப்பிக்கிறேன். நான் புத்தகங்கள் எழுதி வெளியிடுவதையே தொழில்நுட்ப டைரி எழுதுவதைப் போல்தான். நான் இயங்கும்வரை தொழில்நுட்ப டைரி எழுதுவதை நிறுத்த மாட்டேன்.’
அவர் எப்படி பாராட்ட நினைத்தாரோ அதே வார்த்தைத் தொனியில், ‘மேடம், உங்களுக்கு இன்னும் நிறைய வயதிருக்கிறது. நிறைய சாதனைகள் செய்யுங்கள். புத்தகங்கள் எழுதுவது என்பதுடன் உங்கள் ஆற்றலை நிறுத்திக்கொள்ளாதீர்கள்…. ‘ என்று கூறி உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்