#மலேசியா: மலர்வனம் மின்னிதழ் (September 2023)

‘மலர்வனம்’ மின்னிதழிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்!

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த காம்கேர் கே. புவனேஸ்வரி

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், இந்திய நாட்டின் சார்பாக தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் CEO காம்கேர் கே. புவனேஸ்வரியிடம் அந்த நிகழ்வைப் பற்றி கேட்டபோது உற்சாகமாக மலர்வனம் வாசகர்களுக்கு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 ஜூலை 21 முதல் 23 வரை மிக சிறப்பாக கோலாகலமாக மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் அமர்க்களமாக நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Association of Tamil Research) செயலாளர் நந்தன் மாசிலாமணி அவர்களின் பங்களிப்பு அளப்பறியது. இவர்தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் இந்தியக் கிளையின் செயலாளர். இவரது உழைப்பும், அர்ப்பணிப்பும், ஆர்வமும்தான் இந்த மாநாட்டை மிக நல்ல முறையில் கொண்டு சென்றது.

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (International Association of Tamil Research – IATR) குறித்த குழு அமைத்து விவாதங்கள் நடைபெற ஆரம்பித்த நாளில் இருந்தே (2021) அந்தக் குழுவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது.

அந்தக் குழுவுக்குத் தேவையான வீடியோக்கள் தயார் செய்து தருவதிலும், அவர்களின் பணிகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கித் தரும் ப்ராஜெக்ட்டிலும் இணைந்து செயலாற்றி வந்திருக்கிறேன்.

கலை, இலக்கியம், அறிவியல், வரலாறு, தொழில்நுட்பம் என பலதரப்பட்டப் பிரிவுகளில் சிறப்பு விருந்தினர்கள்  மலேசியா, இந்தியா, தென் கொரியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, துபாய், இலங்கை உட்பட 50 நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்கு அழைக்கப்பட்ட ஒரே சிறப்பு விருந்தினர் காம்கேர் புவனேஸ்வரி மட்டுமே.

தவிர பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து பேராசிரியர்கள் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தார்கள்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மலேசிய நாட்டுத் துணைப் பிரதமர், மலாயாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ஓம்ஸ் அறவாரியத் தலைவர் தியாகராஜன் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் சில அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

பல்துறை சார்ந்த வல்லுநர்கள் உரை நிகழ்த்துவதற்கு தனி ஹாலும், பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பதற்கு வகுப்பறைகளும், அரசியல் தலைவர்கள் பேசுவதற்கு தனி இடமும் என பார்வையாளர்களுக்குக் குழப்பம் ஏற்படா வண்ணம் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காலை முதல் இரவு வரை உணவு, காபி, தேநீர், சிற்றுண்டி என ஏதோ நம் குடும்பத்து திருமண வைபவத்தில் கலந்துகொண்டதைப் போன்ற மன நிறைவு. தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல், அங்கிருந்து மாநாடு நடைபெற்ற மலாயாப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவர சிறப்பு பேருந்துகள் என தடபுடல் ஏற்பாடுகள் மனதை உற்சாகப்படுத்தின.

இத்தனைக்குமான பொருட் செலவை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளை ஏற்றுக்கொண்டது.

மலேசிய நாட்டில் நம் இந்தியர்களுக்கு மிக சிறப்பான முறையில் வரவேற்பும், உபசரிப்பும், கெளரவமும் வழங்கப்பட்டது.

நான் இயங்கிவரும் தொழில்நுட்ப வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் எந்த ஒரு செயலுக்கும் Front End, Back End என இரண்டு பிரிவுகள் உண்டு. Front End என்பது இயங்குதளம். Back End என்பது இயங்குதளத்தை தாங்கிப் பிடிக்கும் உழைப்பும், அர்ப்பணிப்பும்.

உதாரணத்துக்கு, நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவை Front End என்றால், அவை முறையாக இயங்குவதற்கு பின்னால் இருந்து இயங்கும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப லாஜிக்குகளும் புரோகிராம்களும் வெப்சர்வர்களும்தான் Back End.

மற்றுமோர் எளிய உதாரணம். நம் வீட்டில் நடைபெறும் ஒரு திருமண வைபவம் Front End என்றால் அந்தத் திருமணம் நடைபெற உழைத்த பெற்றோரின் உழைப்பும், உற்றார் உறவினர்கள் நண்பர்களின் ஒத்துழைப்பும் Back End.

Back End சிறப்பாக செயல்படவில்லை என்றால் Front End- அலங்கோலம்தான்.

இங்கே, கோலாகலமாக நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு Front End என்றால், இந்த மாநாடு சிறப்பாக நடைபெற காரணகர்த்தாவான உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளைதான் Back End.

இந்தியர் ஒவ்வொருவருக்கும் பெருமை!

உலகத் தமிழ் மாநாட்டில் தொழில்நுட்பம், கலை, இலக்கியம், திரைத்துறை என பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் உரை நிகழ்த்தினார்கள். இந்த வரிசையில் காம்கேர் கே. புவனேஸ்வரி ‘மிரட்டும் MetaVerse, அசத்தும் AI. இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினார்.

11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியா நாட்டுப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்தார்.  மாநாட்டின் நிறைவு விழாவில் மலேசியா துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலாயாப் பல்கலைக்கழகம் துணைவேந்தர், மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராஜேந்திரன் போன்றோர் வீற்றிருக்கும் மேடையில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக காம்கேர் புவனேஸ்வரியும் கெளரவிக்கப்பட்டார்.

உலக அளவில் நடைபெற்ற மாநாட்டில், இந்திய நாட்டின் சார்பாக தொழில்நுட்பம் குறித்து உரை ஆற்றச் சென்ற சாஃப்ட்வேர் தொழில்நுட்ப வல்லுநரும், ஐடி நிறுவன சி.இ.ஓவும் ஆன காம்கேர் புவனேஸ்வரி கெளரவிக்கப்பட்டது, இந்திய மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்தது.

காம்கேர் புவனேஸ்வரி ஆற்றிய உரையின் சாராம்சம்:

உலகத் தமிழ் மாநாட்டில் காம்கேர் புவனேஸ்வரி ஆற்றிய உரையின் சாராம்சத்தை அவரே விவரிக்கிறார்:

நம் நாட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகம் ஆவதற்கு முன்பே இந்தத் துறையில் இரட்டைப் பட்டம் பெற்று அதாவது M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, காம்கேர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தை சென்னையில் தொடங்கினேன். அந்த வகையில் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்ததில் எங்கள் நிறுவனத்துக்கு நிறைய பங்கு உள்ளது.

எங்கள் நிறுவனத்தில் 2 பிரிவுகள் உள்ளன. ஒன்று லாஜிக்கல், இரண்டாவது கிரியேட்டிவ். லாஜிக்கல் பிரிவில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, வெப் டெவலெப்மெண்ட், ஆப் தயாரித்தல் என்று இயங்குகிறோம். கிரியேட்டிவ் பிரிவில் அனிமேஷன் தயாரித்தல், ஆவணப்படங்கள் இயக்குதல் தயாரிக்கிறோம்.

எல்லாவற்றையும்விட முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதாவது, தொழில்நுட்ப நூல்களை வெளியிட்டு வருகிறோம். இதுவரை 200-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ளேன். அவற்றில் பல தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக இருப்பதுடன் நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன.

1992 ஆம் ஆண்டு எங்கள் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆக கடந்த 32 ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் தயாரிப்புகள் மூலம் நான் பெறும் அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்திலேயே தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்களாக எழுதியும், ஆடியோ, வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டே வருகிறேன். எளிமையாகச் சொன்னால் டைரி எழுதுவதைப் போல என் தொழில்நுட்ப அனுபவங்களின் டைரியாகவே நான் எழுதிய புத்தகங்களை நான் கருதுகிறேன். நம் நாட்டு மக்களுடன் என்னையும் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும் நெருக்கமாவதற்கு தாய் மொழி தமிழ்தான் காரணம்.

இந்த மாநாட்டில் நான் பேச எடுத்துக் கொண்ட டாப்பிக்: ‘மிரட்டும் MetaVerse, அசத்தும் AI. இனி நடக்கப் போவது என்ன?’

இனிவரும் காலகட்டத்தில் இந்த உலகை ஆள இருப்பது செயற்கை தொழில்நுட்பமே. எந்த ஒரு படைப்பும் மூன்று தலைமுறை மக்களால் கொண்டாடப்பட்டால் அதன் தரத்தைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமே இல்லை. அந்த வகையில் தொழில்நுட்பத்தின் மூன்றாவது தலைமுறை நடந்து கொண்டுள்ளது. Web 1.0, Web 2.0, Web 3.0 என தொழில்நுட்பத்தின் மூன்று தலைமுறையோடும் நான் பயணித்திருப்பதால் அந்தத் துறையின் நீள அகலத்தை மிக இயல்பாகவும், எங்கள் காம்கேரில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் தயாரிப்புகளின் அனுபவங்களோடும் பின்னிப் பிணைத்து அழகாக வெளிப்படுத்தினேன்.

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என தொழில்நுட்பத் துறையில் நான் பெறுகின்ற அனுபவங்களை அவ்வப்பொழுது இந்த சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் பகிர்ந்து வந்திருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் கூடி இருக்கும் இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உலகத் தமிழர்கள் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

 

(Visited 695 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon