#மலேசியா: எளிமைக்கு ஒரு வசதி!

Mr. T. Baskaran

எளிமைக்கு ஒரு வசதி!

மலேசிய மாநாட்டில் நடைபெற்ற ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்’ எங்களுடன் ‘சிறப்பு விருந்தினராக’ கலந்துகொள்ள மாமல்லபுரத்தில் ‘Creative Sculptors’ என்ற கலைக்கூடத்தை நடத்தி வருபவரும், ஆகச் சிறந்த சிலை வடிவமைப்பாளருமான உயர்திரு. பாஸ்கரன் என்பவரும் வந்திருந்தார். முறையாக கட்டிடம் மற்றும் சிற்பக்கலையில் மாமல்லபுரம் கல்லூரியில் பட்டம் பெற்று அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து அனுபவம் பெற்று வெளியே வந்து கலைக்கூடம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். அவர் நிறைய நாடுகளுக்கு சிற்பக் கலை சார்ந்த ப்ராஜெக்ட்டுகளுக்காக சென்று வந்துள்ளார்.

எளிமையும், பணிவும் ஒருசேர்ந்தவராக விளங்கினார். எளிமை என்றால் அப்படி ஒரு எளிமை. பணிவும் சேர்ந்துகொண்டதால் மரியாதை கூடிப் போனது.

பிரமாண்டமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடம் செல்வதற்கே குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நடக்க வேண்டி இருக்கும். அப்படியான சூழலில் நாங்கள் உரை நிகழ்த்த வேண்டிய இடத்துக்கு கடுமையான வெயிலில் நடந்து சென்றோம். அப்போது பேச்சு ஒன்றுதான் வெயிலின் தாக்கத்தையும், நடக்கும் சுமையையும் குறைக்க வல்லதாக இருந்தது.

அன்றுதான் அவரது கலைப்பணி சார்ந்த விவரங்களை கேட்டறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ‘பல நாடுகளுக்குச் சென்றிருந்தாலும், நிகழ்ச்சி மேடையில் பேசுவது இதுவே முதல் முறை’ என பகிர்ந்து கொண்டார்.

நான் வியப்புடன் ‘அப்படியா… அதனால் ஏதேனும் டென்ஷனாக இருக்கிறதா?’ என கேட்டேன்.

அப்போது அவர் ஒரு பதில் சொன்னார் பாருங்கள்.

‘நாம் என்ன பொய்யையா பேசப் போகிறோம்? நாம் செய்வதை சொல்லப் போகிறோம்… நம் உழைப்பை சொல்லப் போகிறோம், நாம் ஏன் மேடம் டென்ஷன் ஆகணும்?’ என அமைதியாக சொல்லிவிட்டு இயல்பாக நடந்து வந்தார்.

தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை அவரது இந்த பதிலில் தெரிந்துகொள்ளலாம்.

யாருக்கேனும் மேடையில் பேசும்போது ‘Stage Fear’ இருக்குமேயானால் இவரது இந்த பதிலை உத்வேக வார்த்தைகளாக மனதுக்குள் சொல்லிக் கொள்ளலாம்.

எளிமைக்கு ஒரு வசதி. எதையும் இயல்பாகக் கடந்து சென்றுகொண்டே இருக்கலாம். எளிமையாய் இருப்பவர்களுக்கு அதன் சுகம் தெரியும்.

மிகைப்படுத்தலுக்குத்தான் ஆயிரம் விஷயங்களை யோசிக்க வேண்டும். மனதுக்குள் பாரத்தை சுமந்துகொண்டே செல்ல வேண்டும்.

இதுவரை கவனிக்கவில்லை எனில் இனி கவனித்துப் பாருங்கள் எளிமையானவர்களை!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

(Visited 1,835 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon