The Best!

The Best!

இஸ்ரோ (ISRO) சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு பரவலாக காதில் கேட்கும் / கண்களில் படும் வாக்கியம் ‘அரசுப் பள்ளியில் படித்தே விஞ்ஞானி ஆன…’ என்பதே.

‘அரசுப் பள்ளியில் படித்தே…’ என்ற வாக்கியத்தில் உள்ள இழுவை, ஏதோ ஒரு வகையில் அது ஒரு படி கீழ் என்ற நோக்கில் இழுக்கப்படுகிறது. அங்கு படித்தே விஞ்ஞானி, அங்கு படித்தே மருத்துவர், அங்கு படித்தே இன்ஜினியர் என்று சொல்வதன் பின்னணியில் அங்கு படித்தே பெரிய ஆளாய் வந்தவர் என்று சொல்லி அவர்களை உயர்த்துவதே.

எங்கு படித்தாலும் கருத்துள்ளவர்கள் முன்னுக்கு வருவார்கள் என்பது அனுபவஸ்தர்கள் அறிவார்கள்.

நான் படிக்கும் காலத்தில் எல்லாம் எங்கும் அரசுப் பள்ளிகள்தான். தனியார் பள்ளிகள் எல்லாம் ஆங்கொன்றும் இங்கொன்றும் தான்.

எங்கள் பெற்றோர் இருவருக்கும் அடிக்கடி பணியிட மாற்றல் இருக்கும். அதன் காரணமாய் ஏராளமான ஊர்களில் வசித்திருக்கிறோம். ஒவ்வொரு ஊரிலும் நாங்கள் வாடகைக்கு வீடு எடுக்கும் இடத்துக்கும் என் பெற்றோரின் அலுவலகத்துக்கும் அருகில் இருக்கும் பள்ளியில்தான் சேர்த்துவிடுவார்கள். அரசுப் பள்ளியா, தனியார் பள்ளியா என்றெல்லாம் பார்க்காமல் அருகில் இருக்கும் பள்ளி என்ற நோக்கில்தான் சேர்த்தார்கள்.

காரணம். இருவருக்குமே எல்லா நாட்களும் 9-6 வேலை கிடையாது. 24 * 7 வேலை நேரம் இருக்கும் என்பதால் எங்களை சரியான நேரத்துக்கு பள்ளிக்குக் கொண்டுவிட்டு, பள்ளிவிடும் நேரத்துக்கு வெளியே காத்திருக்க வைக்காமல் அழைத்து வருவதற்கு வசதியாக இருக்கும் என்பதால், எங்கள் பாதுகாப்பை மனதில் நிறுத்தியே அந்த ஏற்பாடு. எங்களை பொத்திப் பொத்தி பாதுகாப்புடன் வளர்த்தார்கள்.

என்னையும் என் தங்கையையும் சைக்கிளின் பின்சீட்டில் அமர வைத்து என் தம்பியை முன்னே அமர வைத்து என் அப்பா பள்ளிக்குக் கொண்டு விடுவதும் அழைத்து வருவதும் அன்றாட நிகழ்வு.

என் அம்மா 6 மணி ஷிஃப்ட்டுக்குக் கிளம்பும்போது காலையில் எங்கள் 5 மணிக்கு தூக்கத்திலேயே எங்களுக்கு தலை பின்னி விட்டுக் கிளம்புவார். தவறிய நாட்களில் அப்பாவும் தலைப் பின்னி விடுவார்.

இவை எல்லாம் இன்றும் எங்கள் மனதில் அழியா நினைவுகள்.

படித்து முடித்து வேலைக்கும், தொழில்துறையிலும் நுழைந்த பிறகும் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற பேதங்களோ அல்லது அது குறித்த சிந்தனைகளோ அல்லது விவாதங்களோ எங்கள் மனதிலும் எங்கள் வீட்டிலும் வந்ததே இல்லை.

காரணம், என்ன கொடுக்க முடியுமோ அதையும் மீறி ’The Best’ ஆக என் பெற்றோர் கொடுத்தனர், என்ன கிடைத்ததோ அதையும் மீறி ‘The Best’ ஆக நாங்களும் அவற்றை உள்ளுக்குள் வாங்கி வளர்ந்தோம்.

ஆகவே நாங்கள் மூவரும் பெயர் சொல்லும் நிலையில் இன்று.

ஆசிரியர் தினத்தில் பள்ளி நினைவு வந்ததால் இந்தப் பதிவு. நல் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 5, 2023 | செவ்வாய்

(Visited 219 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon