சனாதனம்? (porulputhithu.com, September 7, 2023)

பொருள் புதிது இணைய இதழில்
வெளியான கட்டுரையை இங்கு கிளிக் செய்து வாசிக்கவும்!

சனாதனம்?

சனாதனம் என்றால் நித்தியம். எல்லா காலங்களிலும் நிரந்தரம் என்று பொருள்.

நெருப்புக்கு சுடும் தன்மை, ஐஸ் கட்டிக்கு குளிர்ச்சித் தன்மை இதெல்லாம் எப்பவும் இருக்கக் கூடிய தன்மைகள். நேற்று நெருப்பைத் தொட்டேன் சுட்டது, இன்று சுடவில்லை. நாளை எப்படியோ தெரியாது என்ற கதையெல்லாம் கிடையாது. நெருப்பை தொட்டாலோ அல்லது அது நம் மீது பட்டாலோ நேற்று இன்று நாளை என்ற காலக்கெடுவெல்லாம் இல்லாமல் என்றும், எல்லா காலங்களிலும் நெருப்பின் இயல்பு சுடுவது. போலவே சனாதனம் என்றால் நித்தியம், நிரந்தரம் என்று பொருள் கொள்ளலாம்.

தர்மம் என்றால் அறம். அறம் என்றால் அன்பு, கருணை, பிற உயிருக்கு தீங்கு நினைக்காமை, செடி கொடி தாவரங்கள் வாடாமல் தண்ணீர் விட்டு வளர்த்தல், மற்றவர் மனதை காயப்படுத்தாமை, பெற்றோரை மதித்தல், உற்றார் உறவினருடன் ஒற்றுமையாக இருப்பது, திருமணமானவர் என்றால் கணவன் / மனைவியுடன் கருத்து ஒருமித்து ஒருவரை ஒருவர் மதித்து நடந்துகொள்ளுதல், இறை நம்பிக்கை, இயற்கையை மதித்தல், பிறர் நம்பிக்கையை கேலி செய்யாமல் இருப்பது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆக, சனாதனம் என்பது நித்திய தர்மம். வாழ்வியல் நெறிமுறை.

ஒருவர் தர்ம சிந்தனை குறித்து மேடையில் முழங்கினால், அதே சிந்தனையுடன் வாழ வேண்டும். அதுவே சனாதன தர்மம்.

ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்தது இந்த தர்மம். இந்து மதத்தில் நித்திய தர்மத்துக்கு சனாதன தர்மம் என்று பெயர். மற்ற மதங்களிலும் இந்த தர்மம் இருக்கிறது. ஆனால் அதற்கு வேறு பெயர் இருக்கலாம். ஆனால் எல்லா மதங்களும் போதிக்கும் தர்ம சிந்தனையின் அடிப்படையில் மாற்றம் கிடையாது. அன்பும், அறனும், அறமும் தான் தர்ம சிந்தனையின் அடிப்படை.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். சனாதனம் என்றால் என்ன என்று புரிந்துவிடும்.

எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரிப் பேராசிரியர்.  இரு கண் பார்வைத் திறன் இழந்தவர். கல்லூரி முதல்வராகி, மிக சமீபத்தில் ஓய்வு பெற்றவர்.

இவர் ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் கொள்கைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

அடிபப்டையில் அசைவம் உண்பவர். ஆனால் வள்ளாலாரின் கொள்கையில் முனைவர் பட்டம் பெற்றபோதே ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள நாம், உயிரைக் கொன்று உண்ணும் பழக்கத்தை விடாமல் இருக்கிறோமே’ என்ற குற்ற உணர்வுக்கு ஆளானார்.

சில காலங்களுக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் ‘வள்ளலார் விருது’ ஒன்றை இவருக்கு வழங்கிய போது குற்ற உணர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். கைகளில் இருந்த விருது அவர் மனசாட்சியை குத்திக் குதற அன்றைக்கு ‘இனி அசைவம் உண்ணக் கூடாது’ என முடிவு செய்தார். இதெல்லாம் நடந்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இன்று வரை அவர் அசைவம் சாப்பிடுவதில்லை.

இவர் சனாதன தர்மத்தை பின்பற்றுகிறார் என்று சொல்லலாம்.

சைவம் சாப்பிடுவதுதான் சனாதன தர்மம் என யாரும் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டாம். வள்ளலார் விருது பெற்ற ஒருவர், வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என முடிவெடுத்து அசைவம் துறந்தார். இதுதான் இங்கு பேசுபொருள்.

இதுபோல் நாம் ஒரு தர்மத்தைப் பேசுகிறோம், வலியுறுத்துகிறோம் என்றால் அதை நாம் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும், அதை நம் வாழ்க்கை முறையாக்கி கொள்ள வேண்டும் என்பதுதான் சனாதன தர்மம்.

இப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன், இதுவே என் வாழ்வியல் நெறிமுறை என்பதால் நான் பின்பற்றுவது சனாதன தர்மம் என்று உணர்கிறேன். பெருமிதம் கொள்கின்றேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 7, 2023

(Visited 245 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon