நாற்காலி மேஜையும், தன்னம்பிக்கையும்!

நாற்காலி மேஜையும், தன்னம்பிக்கையும்!

நாங்கள் படித்து முடித்து சென்னைக்கு இடம் பெயர முடிவெடுத்து, வீடு மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம்.

நாங்கள் படிக்கப் பயன்படுத்தும் டேபிள் (அப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் ரீடிங் டேபிள் இருக்கும்) கொஞ்சம் உடைந்து போயிருந்ததால் அதை கடையில் போட்டுவிடலாம் என நினைத்து ஓரமாய் போட்டுவிட்டு மற்ற சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தோம்.

அப்போது எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் என் அப்பாவிடம், ‘அந்த டேபிளை நான் எடுத்துக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். எங்களுக்கோ ஆச்சர்யம். காரணம், அவருக்கு அந்தத் தெருவில் இரண்டு வீடுகள் இருந்தன. மேலும், நல்ல வசதியானவர்.

இதை கவனித்த என் அம்மா ஆச்சர்யமாக, ‘அது கொஞ்சம் பழசாகி கால்கள் எல்லாம் ஆட்டம் கண்டுவிட்டனவே… மேலும் நீங்கள் நினைத்தால் புதிதாகவே வாங்கிக் கொள்ளலாமே’ என்று சொன்னார்.

‘இல்லைங்கம்மா, உங்க பசங்கல்லாம் நல்ல படிப்பாளிங்க… அவங்க படித்துப் படித்து அந்த டேபிளுக்கும் அறிவு ஏறி இருக்கும். அதை எங்க பசங்களுக்குப் படிக்கக் கொடுத்தால் அவங்களும் படிப்பாளிங்க ஆவாங்க இல்ல… அதனால்தான் கேட்கிறேன்’ என்றார்.

அப்போது எங்களுக்குள் ஒரு பெருமிதம் உண்டானது பாருங்கள். இதுபோல சின்னச் சின்ன பெருமிதங்கள்தான் எங்கள் இளமைக்காலத்து சொத்து. அவைதான் ஆரம்ப நாட்களில், எங்கள் தொழில்துறையில் முன்னேறிச் செல்ல உந்துகோலாக இருந்தன.

நாம் விழிப்புடன் இருந்தால், நாற்காலி மேஜை எல்லாம் கூட தன்னம்பிக்கை ஊட்டும்.

இந்த வியாக்கியானம் இப்போது ஏன்?

இப்போது நான் பயன்படுத்தும் டேபிளை மாற்ற யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதனைத் தொடர்ந்த சிந்தனைதான் இந்தப் பதிவு!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 4, 2023 | திங்கள்

(Visited 795 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon