யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள்!

யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள்!

யாரையும் பழி வாங்க நினைக்க வேண்டாம்…
யாரையும் திருத்தவும் முயற்சிக்க வேண்டாம்…
யாரிடமும் சவாலும் விட வேண்டாம்…

இதையெல்லாம் நீங்கள் யாரிடம் செய்ய நினைக்கிறீர்களோ அவர்கள் ஏற்கெனவே நல்லவர்கள் என்ற நிலைக்குக் கீழே இருப்பதால் நீங்கள் எதைச் செய்தாலும் அது அவர்கள் கீழ்மையான குணத்தைக் கிளறி விடவே செய்யும்.

குறிப்பாக வாழ்ந்து காட்டுகிறேன் என வீர முழக்கமும் வேண்டாம். காரணம் உங்களை வீழ்த்த நினைத்து காயப்படுத்துபவர்கள் நீங்கள் வாழ்ந்து காட்டினாலும் அதற்கும் ஒரு கீழ்மையான காரணத்தை முன் வைத்து புறம் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்.

நீங்கள் வாழுங்கள்….
நிம்மதியாக
சந்தோஷமாக
மன நிறைவுடன்!

மற்றவர்களிடம் நிரூபிக்க நினைத்தால் மேலே சொன்ன மூன்றும் (நிம்மதி + சந்தோஷம் + மனநிறைவு) நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது.

ஏன் இந்த வியாக்கியானம், அதுவும் அழகான ஒரு ஞாயிறு காலையில் என நினைக்கிறீர்களா?

நேற்று ஒரு நேர்காணலில் ‘உங்கள் வாழ்நாளில் உங்களை யாரேனும் காயப்படுத்தி இருக்கிறார்களா?’ என்ற கேள்வி கேட்டார்கள்.

நானும் மண்டையை உருட்டிப் பிரட்டி யோசித்துப் பார்த்தேன்.

ம்ஹும். ஒன்றும் நினைவில் இல்லை. காயப்படுத்துதல் என்பதில் நிறைய நிலைகள் உள்ளதல்லவா? எனக்கெல்லாம் வம்படியாக என்னிடம் வீண் வாக்குவாதம் செய்தால் கூட அதையும் காயப்படுத்துதல் என்றுதான் சொல்வேன்.

எந்த ஒரு காயப்படுத்தலும் என் மனதில் இருந்து அந்தந்த காலகட்டத்திலேயே விலகிவிடுவது வரம் எனக்கு. எந்தப் பிரச்சனை ஆனாலும் சம்மந்தப்பட்ட வர்களிடம் பேசி (Note this Point: புரிய வைத்தல்ல… அது சாத்தியமே கிடையாது) என் நிலையைச் சொல்லிவிட்டு அதற்கு மேல் அந்தப் பிரச்சனைக்கு END CARD போட்டு விட்டு நகர்ந்து விடுவேன்.

குறிப்பாக வாழ்ந்து காட்டுவது, பழி வாங்குவது, திருத்துவது என்ற லாஜிக்கில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது.

இங்கு யாரும் சிறு குழந்தை அல்ல. எல்லோருக்கும் தங்கள் தவறுகளும், சரிகளும் தெரியும். தவறுகளை செய்பவர்கள் தெரிந்தேத்தான் செய்கிறார்கள். தெரியாமல் செய்கின்ற குழந்தையைத் திருத்தலாம். தெரிந்தே செய்பவர்களை என்ன செய்வது? அவர்கள் கர்மா அது.

என் வழி, என் வேலை, என் குறிக்கோள். இது மட்டுமே என் கண்களுக்குத் தெரியும். மனதுக்குள்ளும் இருக்கும். உறக்கத்திலும் கனவாகவும் அதுவே.

எனவே எனக்கு போட்டியாகவும் யாரையும் நினைப்பதில்லை. குறிப்பாக என் பாதையில் நான் ’மிக சிறப்பாக ஓட’ நான் எத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன். சுற்றி ஓடுபவர்களை நான் கருத்தில் கொள்வதில்லை.

இதே பதிலை 25 வருடங்களுக்கு முன்பும் ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறேன். அதுதான் என் மெச்சூரிட்டி. அதுவே என் பலம்.

இப்படி நிறைய சொல்லி இருக்கிறேன். விரைவில் நேர்காணல் வெளியானவுடன் பகிர்கிறேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 1, 2023 | ஞாயிறு

(Visited 1,991 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon