#Ai ஐ திருமணம் செய்தால் என்ன நடக்கும்?
விரைவில் வெளியாக இருக்கும் நான் எழுதிய Ai நூலில் இருந்து…
முன்பெல்லாம், திருமணம் செய்துகொள்ளத் தயாராகும் பையனோ அல்லது பெண்ணோ பார்க்கும் வரன்களை எல்லாம் தட்டிக் கொண்டே வந்தால் ‘இப்படியே நீ நினைக்கும்படி வரன் அமைய வேண்டும் என்று தட்டிக்கொண்டே வந்தால் நீயாக மண்ணிலோ அல்லது மரத்திலோ வடிவமைக்க வேண்டியதுதான், உயிருள்ள ஜீவன் கிடைக்க மாட்டார்கள்’ என்று சொல்வார்கள்.
அது இன்று Ai மூலம் நிஜமாகிவிட்டதே. தனக்கு எப்படிப்பட்ட குணம், நிறம், நடை, உடை, பாவனையில் கணவன் வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப ஒரு வடிவத்தை (இங்கு இதனை ரோபோ அல்லது அவதார் எனலாம்) Ai மூலம் வடிவமைத்து அந்த Ai – ஐ திருமணம் செய்துகொண்டுள்ளார் நியூயார்க் மணப்பெண் ஒருவர்.
ஆம். Ai தொழில்நுட்பத்தின் வாயிலாக நிஜ திருமணத்தைப் போல் அல்லாமல் செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட ரோபோ அல்லது அவதாருடனேயே திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் சூழலும் இன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கில் 36 வயதான ரோசான்னா ராமோஸ் என்ற பெண் AI மூலம் உருவாக்கப்பட்ட வெர்ச்சுவல் மனிதனான கார்டல் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். பத்திரிகை செய்திகளில் ‘கார்டல் அன்பானவர், உணர்ச்சிமயமானவர், தன்னை அதிகமாகக் காதலிக்கக் கூடியவர்…’ என்றெல்லாம் புகழாரம் சூட்டுகிறார்.
ஒரு வேளை இவர் விவாகரத்து செய்ய நினைத்தால் என்ன காரணத்தைச் சொல்ல முடியும் என யோசித்தால் சிரிப்புத்தான் வருகிறது. ‘நான் எப்படி நினைக்கிறேனே அப்படியே நடந்துகொள்கிறார். தானாக எதையும் செய்வதில்லை. கொஞ்சமும் சண்டை போடாமல் போரடிக்கிறது…’ என்ற காரணத்தைச் சொல்லலாம் அல்லது அந்த Ai அவதார் / ரோபோவுக்கு சண்டை போடும் குணத்தைக் கற்றுக்கொடுக்க முயற்சிக்கலாம் அல்லது அந்த Ai உருவத்தை உடைத்து நொறுக்கிவிட்டு வேறு உருவத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.
தொழில்நுட்பத்தின் உச்சம் கொஞ்சம் நம்மை மிரட்டத்தான் செய்கிறது.
இப்படி பல விஷயங்கள்… இதன் பின் உள்ள தொழில்நுட்ப உச்சங்களும், சிக்கல்களும்… படு சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொல்வதைவிட தொழில்நுட்ப ரீதியாகவும் நீங்கள் தெரிந்துகொள்ள 1000 விஷயங்கள் இருக்கும்.
அச்சானவுடன் தகவல் கொடுக்கிறேன். வாங்கிப் பயனடையுங்கள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 3, 2023 | செவ்வாய்