பொம்மைக்கார வீதி தொழிலதிபர்கள்!

பொம்மைக்கார வீதி தொழிலதிபர்கள்!

சமீபத்தில் காஞ்சிபுரத்தில் காஞ்சி மடத்துக்குச் சென்று தரிசனம் செய்த பிறகு, காஞ்சிப் பெரியவரின் மகா மண்டபம் அமைந்துள்ள ஓரிக்கைக்கும் சென்று வந்தோம்.

பின்னர், கொலு பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்யும் கடைகளுக்கும் சென்று வந்தோம். கடைகள் என்று அவற்றை சொல்ல முடியாது. வீடுகளே தொழிற்சாலைகள் போல செயல்பட்டு வரும் ‘பொம்மைக்காரத் தெரு’ என்றே பிரத்யோகமாக அழைக்கப்படும் புகழ் பெற்ற தெருவில் நுழைந்தால் வரிசையாக ஒவ்வொரு வீடும் கீழே கொலு பொம்மை தயாரிப்பு, மேலே வீடு என ஏராளமான தொழிலதிபர்கள் வசிக்கும் பிரமாண்டமான நீண்ட தெரு அது.

இப்போதுதான் தொழில் ஆரம்பித்திருந்தால் அவர்களை தொழில்முனைவோர் என சொல்லலாம். கிட்டத்தட்ட 75 80 வருடங்களாக பாரம்பர்யத் தொழிலாக செய்து வருபவர்களை ‘தொழில் முனைவோர்’ என்ற சிறு வட்டத்துக்குள் அடக்க என மனம் வராததால் அவர்களை ‘தொழிலதிபர்கள்’ என்ற பெரிய வட்டத்துக்கு உயர்த்தினேன்.

அன்று நல்ல மழை என்பதால் வீடுகளின் வாசலில் கொலு பொம்மைகள் அடுக்கி வியாபாரத்துக்காக வைக்கப்படவில்லை. வெயில் நாட்களில் அந்தத் தெருவே கொலு பொம்மைகளாகக் காட்சி அளிக்குமாம்.

எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருந்தன. பெரும்பாலும் திறந்தே இருந்தன. நாங்கள் நுழைந்த அந்த வீட்டின் வாசலில் திண்ணை. திண்ணையைத் தாண்டி உள்ளே சென்றால் எழுபது எழுபத்தைந்து வயதுமிக்க ஒரு பெரியவர் கொலு பொம்மைக்கான அச்சு தயார் செய்து கொண்டிருந்தார். ‘உள்ளே போங்க…’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் மாடியில் இருந்து ஓர் இளம் பெண் கீழிறங்கி வந்து வரவேற்றார்.

வீடு நீண்டுகொண்டே உள்ளே சென்றது. ஒற்றையடி பாதையைப் போன்ற அந்த நீண்ட தாழ்வாரத்தின் ஒரு பக்கம் பொம்மைகள் செய்தபோது சேதாரமாகும் பொம்மைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

ஒரு பெரிய அறையில்தான் கொலுபொம்மைகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஷோகேஸ் போல் அல்ல. அந்த இடம் பொம்மைகள் தயார் செய்யும் இடம் என்பதால் பொம்மைகள் சேதமாகாதவாறு பரவலாக வைத்திருந்தார்கள். மண் பொம்மைகள், பேப்பர் மெஷ் பொம்மைகள் என வகை வகையாகப் பிரித்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். பேச்சிலும், செயலிலும் அத்தனை சூட்சுமம். அந்த சூட்சுமத்தின் அழகும் நேர்த்தியும் முகத்திலும் தெரிந்தது. வயது இருபதைந்துக்குள் இருக்கும்.

சில பொம்மைகளை உள்ளே இருந்து எடுத்து வந்து பேப்பர் போட்டு சுற்றி வைத்திருந்ததை பிரித்துக் காண்பித்தார்.

அங்கிருந்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா என பல உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகக் கூறியது ஆச்சர்யமாக இருந்தது. வெளி நாடுகளில் வசிப்பவர்கள் ஒரு முறை பொம்மைகளை வாங்கிவிட்டால் மறுமுறை போனில் வீடியோகாலில் பேசி அவர்களுக்குத் தேவையானதை சொல்லுவார்களாம். அந்த பொம்மைகள் அவர்களிடம் இல்லை என்றால் அந்த கான்செப்ட்டில் தயார் செய்தும் கொடுப்பார்களாம்.

மேலும், கொலுபொம்மைக் கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள், இவர்களிடம் இருந்து பொம்மைகளை வாங்கி, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கிறார்கள் என்கிறார்கள். இதைக்கூட அவர் குறையாகச் சொல்லவில்லை.

நாங்கள் வாங்கிய பொம்மைகளுக்கு விலையை குறைத்துக் கொள்ள முடியுமா என கேட்டதற்கு இதே காஞ்சிபுரத்தின் மெயின் கடைத்தெருவுக்குச் சென்றால் அங்குள்ள கடைகளில் எங்கள் பொம்மைகளைத்தான் வாங்கி விற்கிறார்கள். நீங்கள் எங்களிடம் வாங்கிய இதே பொம்மைகளை அங்கு வாங்கினால் விலை இரண்டு மடங்காக இருக்கும் என்று சொல்லும்போது இயல்பாகச் சொன்னார்.

பொம்மைகள் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்பதால் அவற்றை நன்றாக பேக்கிங் செய்து தரச் சொன்னோம்.

இடையில் மூன்று வயது மகன் குட்டி சைக்கிளை அந்த அறைக்குள் எடுத்து வந்து ஓட்ட முற்பட்டார். அம்மா அம்மா என சிணுங்கினார். நான் அந்தக் குழந்தையிடம் செல்லமாகப் பேசி சமாதானப்படுத்த முயன்றேன்.

‘நானும் என் கணவரும் கொஞ்சம் சப்தமாகப் பேசினாலே சண்டை போடுவதாக நினைத்து சிணுங்க ஆரம்பித்து விடுவான். நான் வாடிக்கையாளர்களிடம் சப்தமாகப் பேசுவதால் சண்டை என நினைத்து சிணுங்குகிறான்…’ என்றார்.

அதற்குள் வாசலில் அமர்ந்திருந்த பெரியவர் வந்து குழந்தையை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.

பேக்கிங் செய்து கொண்டிருந்த போது அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

நர்சிங்கில் டிப்ளமோ படித்தவருக்கு பத்தொன்பது வயதில் திருமணம் ஆகிவிட்டதாம். இப்போது இருபத்தைந்து வயது. அவர் கணவருக்கு கொலு பொம்மைகள் தயாரிப்பிலும் வியாபாரத்திலும் அத்தனை நாட்டம் இல்லாததால் வெளியில் ஒரு கடையில் பணி செய்கிறார்.

கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கு மேலான தன் மாமனாரின் குடும்ப பாரம்பர்யத் தொழிலை எடுத்துச் செய்ய யாரும் இல்லாததால் தானே முன்வந்து எடுத்துச் செய்வதாகச் சொன்னபோது அவர் முகத்தின் பொலிவு இன்னும் கூடியதுபோல் தோன்றியது.

நான் வியந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் மட்டுமா பொம்மைகளை தயார் செய்கிறீர்கள்? என கேட்டதற்கு ‘பொம்மைகளுக்கான அச்சுக்களை மாமனார் செய்து கொடுப்பார். என்னுடன் சேர்ந்து பொம்மைகளை வடிவமைத்து பெயிண்டிங் செய்யவும் இதர பணிகளை செய்யவும் பத்து பதினைந்து பெண்கள் வேலை செய்கிறார்கள்’ என்றார்.

‘அப்போ உங்களுக்குக் கீழ் பத்துப் பதினைந்து பெண்கள் வேலை செய்கிறார்கள். நீங்கள் ஓர் இளம் தொழிலதிபர்தான்’ என்று மட்டற்ற மகிழ்ச்சியில் மனமார வாழ்த்திப் பேசினேன்.

அதற்கு அந்தப் பெண் சொன்னார் பாருங்கள் ஒரு விஷயத்தை. அதில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது.

அப்படி என்ன சொன்னார்?

‘எனக்குக் கீழே அவர்கள், அவர்களுக்கு நான் பாஸ் என்றெல்லாம் கிடையாது மேடம். நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் வேலை செய்வோம், நானும் முழுக்க முழுக்க அவர்களுடன் தான் பொம்மைகள் தயாரிப்பில் இருப்பேன். இப்போது மழைநாள் என்பதால் அவர்கள் பணிக்கு வரவில்லை. அத்துடன் இப்போதுதான் நவராத்திரியும் முடிந்துள்ளது என்பதால் விடுமுறை கொடுத்துள்ளோம்…’

இதுதான் அவர்களின் வெற்றியின் சூட்சுமம், இரகசியம் எல்லாமே.

75 வருட பாரம்பர்யத் தொழிலை நசித்துவிடாமல் அதை தான் கையில் எடுத்து செய்யும் அந்த 25 வயது இளம் பெண்ணின் நடை, உடை, பாவனை எதிலுமே கிஞ்சித்தும் கர்வம் இல்லை. மாறாக பேரழகு இருந்தது.

இதுபோல் அந்தத் தெருவின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கலைஞர்கள் அனைவரும் வெறும் கலைஞர்கள் மட்டும் அல்ல. தங்கள் உழைப்பில் உருவான பொம்மைகளை நம் நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்யும் வியாபாரிகள். உழைப்பால் உயர்ந்து நிற்கும் தொழிலதிபர்கள்.

கார்ப்பரேட் தொழிலதிபர்களின் ஸ்டேட்டஸ் அவர்கள் ஏசி அறையிலும், பிரமாண்டமான கட்டிடத்திலும், உயர்தரக் காரிலும் தெரியும்.

இவர்களைப் போன்ற தொழில்கலைஞர்களின் ஸ்டேட்டஸ் உழைப்பின் வியர்வையிலும், மண் வாசனையிலும், பெயிண்ட்டின் நறுமணத்திலும் தெரியும்.

பொம்மைகளை உருவாக்கி நம் நாட்டில் மட்டுமல்லாது உலக அளவிலும் விற்பனை செய்துவரும் இவர்கள் சப்தமில்லாமல் நம் பாரத நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள் என்பது நிதர்சனம்.

இவர்கள் பொம்மைகளை மட்டும் உருவாக்குவதில்லை, வளமான வலிமையான பாரதத்தை படைப்பதிலும் பங்கேற்கிறார்கள் என்பதே உண்மை.

அந்த இளம் தொழிலதிபருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு பொம்மைகளை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.

மழை விட்டபாடில்லை. மழைநாளில் சூடாக பஜ்ஜி, வடை சாப்பிட்டுக்கொண்டே டீ குடிப்பது சுகமாக இருக்கும் என பலரும் இங்கே பதிவிடுவதைப் பார்க்கிறேன்.

எனக்கோ, மழைநாளில் இதுபோன்ற இளைஞர்களின் கலை ஆர்வமும், உழைப்பும், நேர்த்தியும், வியாபாரமும், நேர்மையும் பற்றி பேசியது அத்தனை சுகமாக இருந்தது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
நவம்பர் 16, 2023 | வியாழன்

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon