கே.கே.நகர் ரோட்டரி கிளப் சென்னை சார்பாக செயற்கை நுண்ணறிவு குறித்து, பிப்ரவரி 4, 2024 அன்று அசோக் நகர் கோகுலம் பார்க் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசினேன். கலந்து கொண்ட அனைவரும் உன்னிப்பாக கவனித்து நிறைய கேள்விகளை எழுப்பினர். மனதுக்கு மிகவும் நிறைவான நிகழ்வாக அமைந்தது.
பொதுவாக ரோட்டரி கிளப் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தில் தான் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்திப் பேசுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் என்னை அறிமுகம் செய்த திருமிகு. வைஜெயந்தி அவர்கள் மிக அழகாக தமிழில் பேசினார். அது அவருக்கு தமிழில் பேசுவது ‘முதல்’ மேடை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் என்னைப் பற்றியக் குறிப்புகளைப் படித்து, நான் தொழில்நுட்பத்துறையில் பல ‘முதல்’ முயற்சிகளுக்கு காரணகர்த்தா என்பதை புரிந்துக் கொண்டு ‘மேடம், இன்று நான் மேடையில் முதன் முதலாக தமிழில் பேசப் போகிறேன்’ என்றார்.
அவர் சொன்னதைப் போலவே மேடையில் என்னை அறிமுகப்படுத்திய போது மிக அழகாகப் பேசினார். தமிழில் பேசாதவர்கள் முயற்சிக்கும்போது நடுநடுவில் வரும் சிறு தடங்கல்கள் கூட அவர்களது முயற்சிக்கு அழகு தானே!
சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தும் பொறுப்பை அவரிடம் கொடுத்தவுடன் நான் தமிழில் கொடுத்ததை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்து விட்டாராம். ஆனால் என் சாதனைகளை அவர் படிக்கப் படிக்க அதிலும் குறிப்பாக 250 நூல்களை எழுதி உள்ளதை படித்த போது, ‘இவர் 250 நூல்கள் தமிழில் எழுதி உள்ளார். நம்மால் ஒரு பக்க அளவுள்ள தகவலை தமிழில் படிக்க முடியாதா, முயற்சித்துப் பார்ப்போம்’ என்ற வைராக்கியம் எடுத்ததாக கூறினார்.
முயற்சிகளுக்கும், முன்னெடுப்புகளுக்கும் ஆரம்பப் புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது பாருங்கள்!