Reading Ride: ஆர். ராஜ்குமார் – Ai நூல்களும், ராமகிருஷ்ணா மிஷனும்!

தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக Ai-காக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு நூல்கள் குறித்து  நெடுஞ்சாலைத் துறையில் உதவிக் கோட்ட பொறியாளராக பணிபுரியும் திரு. ஆர். ராஜ்குமார் அவர்களின் கருத்து. மிக அழகாக Ai நூல்களின் வாசிப்பில், ராமகிருஷ்ணா மிஷனுடன் தன் அனுபவங்களை இழைத்துள்ளார். அது சர்க்கரைப் பொங்கலில் முந்திரி போட்டதைப் போல் மிகுந்த சிறப்பாக உள்ளது. நீங்கள் வாசியுங்களேன்!

திரு. ராஜ்குமாருக்கு அளிக்கப்பட்ட காம்கேரின் அவதார் பரிசு!

 Ai நூல்களும், ராமகிருஷ்ணா மிஷனும்!

நான் ஆர். ராஜ்குமார். நெடுஞ்சாலைத் துறையில் உதவிக் கோட்ட பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai – Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு புத்தகங்களையும் வாங்குவதற்காக ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு கோயமுத்தூரில் இருந்து வந்திருந்தேன். நூல் ஆசிரியர் காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களை அவரது ஃபேஸ்புக் பதிவுகள் மூலம் நன்கறிவேன்.

நான் புத்தகம் வாங்க சென்றிருந்த சமயம், புத்தக ஸ்டாலில் ‘ஸ்டாக்  எல்லாம் தீர்ந்துவிட்டன.  நாளை காலை  ஆஃபீஸில் இருந்து புத்தகங்கள் வந்துவிடும்’  என சொன்னார்கள். உடனே நான் என் மகிழ்ச்சியை மெசஞ்ரில் ‘புத்தகங்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. உங்கள் புத்தகங்கள் நல்ல விற்பனை போல் தெரிகிறது’ என தெரிவித்திருந்தேன். உடனே அவர் என் மொபைல் எண் கேட்டு தகவல் கொடுத்தமைக்கு நன்றி சொல்ல போன் செய்தார்.

அப்போதுதான் முதன் முதலாக அவருடன் போனில் பேசுகிறேன். எழுத்துக்களின் வலிமை, பேச்சில்  நிதானத்தை கடைபிடிப்பது, தேவையில்லா வார்த்தைகளை தவிர்ப்பது என்பதை எல்லாம் அவர் பேசிய 2-3 நிமிட உரையாடளில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

அதன் பின்னர் அவர் கொரியரில் புத்தகங்களை அனுப்பி இருந்தார். புத்தகங்களில் என்னைக் கவர்ந்தது, ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு QRCode கொடுத்து அதன் மூலம் Ai அவதாரை அழைத்து அந்தந்த அத்தியாயச் சுருக்கத்தை பேச வைத்ததைச் சொல்லலாம்.

அவர் எழுதியது தொழில்நுட்ப புத்தகங்கள்தான் என்றாலும், ஆங்காங்கே வாழ்வியலையும் தூவிச் சென்றுள்ளார். உதாரணத்துக்கு, அசத்தும் Ai: Part 1 புத்தகத்தில் பக்கம் 162 – ல்,  ‘நாங்களும் என்னை போன்றோரும் செய்த ஆராய்ச்சிகள்தான் இன்று Ai வரை வளர்துள்ளது’ என்று சொல்லி இருக்கிறார். என்னைப் பொருத்தவரை இதை நூலாசிரியரின் தன்னடக்கத்தின் வெளிப்பாடாகவே தோன்றியது.

அடுத்து அதே புத்தகத்தில் பக்கம் 51 – ல் Descriptive – என்ன நடந்துள்ளது, Predictive – என்ன நடக்கப் போகிறது, Prescriptive – எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற மூன்று விஷயங்கள் மூலம் வாழ்வியல் வாயிலாக Ai  தொழில்நுட்பத்தை இணைக்கிறார்.

அசத்தும் Ai – Part2 ‘இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ புத்தகத்தில் Front End, Back End என்ற இரண்டு தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு மிக அழகான உதாரணத்தைச் சொல்லி உள்ளார். Front End: தட்டில் சாப்பிடத் தயாராக இருக்கும் சாப்பாடு, Back End: அந்த சாப்பாட்டை தயார் செய்தவரின் உழைப்பும், சாப்பாடில் பயன்படுத்தப்பட்டுள்ள காய்கறிகள், உப்பு, மிளகாய், மசாலா பொருட்களும். இதைவிட வாசிப்பவர்களை தன் எழுத்துக்கள் மூலம் கட்டிப்போட வேறென்ன வேண்டும்.

இரண்டு நூல்களும் என்னைப் பொருத்த வரை அருமை.

இந்த நூல்களை வாசிக்கும்போது எனக்கு என் பழைய கால நினைவுகள் பல வந்து போனது. 1990-களில் கம்ப்யூட்டர் அறிமுகம் ஆன புதிது. எனக்கு அப்போது 20 வயது. புதிதாக பிசினஸ் தொடக்க நினைத்து, Road Roller வாங்க கல்கத்தாவிற்கு மாமாவுடன் சென்றிருந்தேன். அவர் அப்போது Southern Railway-யில் கிளார்க் வேலை செய்து கொண்டிருந்தார் (பழைய மூர் மார்கெட் அருகில் ஆபீஸ்). அவருக்கு ராமகிருஷ்ணா மிஷினில் மிகவும் ஈடுபாடு. அதனால் நாங்கள் கல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மடத்தில் தங்கி இருக்கும் போது, ஒரு நாள் மாலை புத்த மடாலய துறவி  ஒருவருடன் பேசி கொண்டிருந்தோம். அவர் அருணாசலப் பிரதேசதில் இந்தியாவின் பெரிய புத்த மடாலயம் Twang என்ற ஊரில் இருந்து வந்திருந்தார்.

என்னடய பிசினஸ் பற்றி கேட்டு சிரித்தார். அவர் அப்போது சொன்ன கருத்து ‘Future Business is the current Success Business’ அதாவது ‘எதிர்காலத் தேவையே இன்றைய வெற்றிகரமான   பிசினஸ்’. எனவே, ‘கம்ப்யூட்டர் படி’ என்றார். நான் கேட்கவில்லை. ஆனால், என் மாமா 52 வயதில் கம்ப்யூட்டர் எல்லாம் படித்து Southern Railway Computer Superintendent-ஆக பதவி உயர்வு பெற்றார். நான் பிசினஸில் நஷ்டம் அடைத்தேன்.

அன்று நான் கற்க மறந்த (மறுத்த) பாடங்களை எல்லாம் இன்று நூல் ஆசிரியர் காம்கேர் கே. புவனேஸ்வரி, தன் பிசினஸில் தான் பெறும் அனுபவங்களை எல்லாம் புத்தகங்களாக எழுதி குருவாக இருந்து அனைவருக்கும் கற்று கொடுத்து வருகிறார்.

வருங்காலம் Ai தொழில் நுட்ப அறிவு இல்லாமல் இருக்க முடியாது என்பதை அசத்தும் Ai, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு நூல்களும் உணர்த்துகின்றன.

நான் படிக்க ஆரம்பித்து புரிந்துகொள்ள மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி நூல் ஆசிரியருக்கும், புத்தகங்களுக்கும்!

ஆர். ராஜ்குமார்
உதவி கோட்ட பொறியாளர்
நெடுஞ்சாலை துறை
ஜனவரி 30, 2024

(Visited 795 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon