ஏஐ – விஸ்வரூப வளர்ச்சி (தினமணி மார்ச் 10, 2024)

சென்னையில் இயங்கும் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற தகவல் தொழில்நுட்ப   நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் காம்கேர் கே. புவனேஸ்வரி. இவர், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆராய்ச்சியாளர்,  தொழில்நுட்ப வல்லுநர்,    எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், ஆவணப்பட  இயக்குநர், அனிமேஷன்   படைப்பாளர்,  தொலைக்காட்சி  நிகழ்ச்சி தயாரிப்பாளர்  என  பன்முக  சாதனையாளரும் கூட. 

நம் நாட்டில்  ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ கால் பதித்த காலத்திலேயே, அந்தத் துறையில் இரட்டைப் பட்டம் (1992) பெற்றவர் இவர். பல வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் புறக்கணித்து, ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற பெயரில் ஐ.டி. நிறுவனத்தை ஆரம்பித்தவர், கடந்த 32 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறார். இன்று தனது தொழில் நிறுவனத்தின் பெயராலேயே, ‘காம்கேர் கே.புவனேஸ்வரி’ என்ற அடைமொழியுடன்   அழைக்கப்படுகிறார்.

இவரது நிறுவனம் பல்வேறு துறைகளில் சாஃப்ட்வேர் தயாரித்து வருகிறது. நம் நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவரது நிறுவனத் தயாரிப்புகள் பரவி உள்ளன.  இவர் 250 நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். அவற்றில் 200 நூல்கள் தொழில்நுட்பம் சார்ந்தவை. 

இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற  புத்தகக் காட்சியில்,  ‘அசத்தும் ஏ.ஐ. –பகுதி-1, அசத்தும் ஏ.ஐ.- பகுதி-2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்)’ என்ற இவரது இரு நூல்கள் பேசுபொருளாக இருந்தன. சூரியன் பதிப்பகம் + காம்கேர் கே. புவனேஸ்வரி – கூட்டு முயற்சியாக இந்த இரண்டு நூல்களும் வெளியாகி உள்ளன. இந்த நூலின் புதுமை என்னவென்றால் நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசிப்பதற்கு முன், ஒரு ‘ஏ.ஐ. அவதார்’ கண் முன் தோன்றி பேசுகின்ற சாதனையைப் புகுத்தியுள்ளனர். பதிப்பக உலகில் இது முதல் முயற்சி. தனது தொழில்நுட்ப, எழுத்துலக அனுபவங்களை இங்கே அவர் பகிர்ந்து கொள்கிறார்…

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

ஏ.ஐ. என்பது Artificial Intelligence (AI) .  தமிழில் இதனை செயற்கை நுண்ணறிவு என்கிறோம். மனிதனுக்கு இயற்கையாக உள்ள நுண்ணறிவைப் போலவே செயற்கையான நுண்ணறிவை உருவாக்கும் ஆராய்ச்சியின் தொடக்கம்தான் ஏ.ஐ. அந்த செயற்கை நுண்ணறிவை இயக்கப் பயன்படும் சாதனங்கள் கணினியாகவோ, மொபைல் போனாகவோ, கேமராவாகவோ, வேறு எதுவாகவும் இருக்கலாம்.

மனிதனைப் போலவே சிந்திக்க வைத்து, மனிதனுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஏ.ஐ, இன்று மனிதனையே விஞ்சிவிடும் அளவுக்கு திறன் வாய்ந்ததாக, சிறு அச்சத்தை உருவாக்கியபடி விஸ்வரூப வளர்ச்சி பெற்று வருகிறது.

1950 ஆம் ஆண்டு, ஆராய்ச்சியாளர் ஆலன் டூரிங்  என்பவர் ‘கணினிகளால் சிந்திக்க முடியுமா?’ என்கிற கேள்வியுடன் தொழில்நுட்ப வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு ‘கணினி இயந்திரம் மற்றும் நுண்ணறிவு’ எனும் கட்டுரையை வெளியிட்டார்.

‘கணினிகளால் சிந்திக்க முடியுமா?’ என்ற கேள்விக்கான பதிலை அவர் ஒரு சோதனை மூலம் பரிசோதித்தார். அந்த சோதனைக்கு ‘இமிடேஷன் கேம்’ என்று பெயர் சூட்டினார். அதாவது ஒருவர் பேசுவதைப் போலவே தங்கள் குரலை மாற்றிப் பேசுவதை நாம்  ‘மிமிக்கிரி’ என சொல்கிறோம் அல்லவா? அதுபோல கணினிகளை மனிதனைப் போல சிந்திக்கச் செய்ய முடியுமா என்ற பரிசோதனையை  ‘இமிடேஷன் கேம்’ என்றார். பின்னாளில் இது ‘டூரிங் டெஸ்ட்’ (Turing Test) என்று பெயர் பெற்றது.

இதுபோன்ற பல முயற்சிகள் உலக அளவில் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் கணினி 1980களில் தான் அறிமுகமாகத் தொடங்கியது. நம் நாட்டில் ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து கடந்த பத்தாண்டுகளில் ஆராய்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் உங்கள் தொடர்பு குறித்து…

பதில்: நாங்கள் எங்கள் காம்கேர் நிறுவனத்தில், 1992-களில்  ‘டாஸ் ஆபரேட்டிங்’ சிஸ்டத்திலேயே  ‘சி’ மொழியில் புரோகிராம் எழுதி கார்ட்டூன்   அனிமேஷன்களை உருவாக்கி இருக்கிறோம். அதற்கடுத்து 2000-களில் அனிமேஷன்களுக்கான சாஃப்ட்வேர்கள் வந்த பிறகு கார்ட்டூன்களை உருவாக்கி பின்னணிக் குரல் கொடுத்து, அவற்றைப் பேச வைத்தோம். அதுவும் எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அந்த மொழியில் அந்த அனிமேஷன் பேசும் வகையில் செய்தோம். இவற்றையே தற்போது ஏ.ஐ. மூலம் செய்கிறார்கள்.

அதே காலகட்டத்தில் அச்சு நூல்களை  நூலாசிரியரின் குரலில் பேச வைக்கும் முயற்சியிலும் இறங்கினோம். அதற்காக எழுத்தாளர்களின் குரலை வாய்ஸ் மாடலாக பதிவு செய்து, தனிப்பட்ட வாய்ஸ் பேட்டர்ன் உருவாக்கி, அவர்கள் எழுதுகின்ற புத்தகங்களை அந்த பேட்டர்னை வைத்து பேச வைத்தோம். இதனையே இன்று நவீனத் தொழில்நுட்பத்தால் மிகவும் எளிதாக ஏ.ஐ. செய்கிறது.

ஏ.ஐ. தொடர்பான ஆராய்ச்சிகள் என்பது உலகம் முழுவதும் எங்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களுக்கு முன்னரே செய்ய ஆரம்பித்தவை தான்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கணினியில், இயந்திரங்களில், மொபைல் போனில், காரில்,  என எதில் வேண்டுமானாலும் பொருத்தலாம். நாம் எந்தப் பணியைச் செய்வதற்காக ஏ.ஐ.யைப் பொருத்தப் போகிறோமோ, அந்தப் பணிக்குத் தேவையான தரவுகளை உள்ளீடாகக் கொடுக்க வேண்டும். அந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு ஏ.ஐ. செயல்பட உதவும் புரோகிராம்களை தொழில்நுட்ப நிபுணர்கள் எழுதுவார்கள். அதையும் உள்ளீடாகக் கொடுப்பார்கள். இவ்வாறு கொடுக்கப்படும் தரவுகள், புரோகிராம்களை ஏ.ஐ. புரிந்து கொள்வதுடன், பணியில் முந்தைய அனுபவத்தைக் கொண்டு தானாகவும் கற்றுக் கொள்ளும். இப்படி நாம் கொடுப்பதைக் கற்றுக்கொள்வதுடன், தானாகவும் மேம்படுத்திக்கொண்டு நம்மைவிட புத்திசாலியாகச் செயல்பட ஆரம்பிக்கும்.

ஏ.ஐ. அப்ளிகேஷன்களுக்குள் என்ன மாதிரியான தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறதோ அதன்படிதான் அவை செயல்பட்டு, நமக்கான தீர்வை எழுத்தாகவோ, படமாகவோ, ஒலி- ஒளியாகவோ கொடுக்கும். அதற்குத் தேவையான அதிகபட்சமான முன்மாதிரிகள் அதில்  உள்ளீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நாம் சொல்லிக் கொடுப்பதை ஏற்றுக்கொண்டும், தன்னுள் இருக்கும் முன் மாதிரிகளுடன் ஒப்பிட்டும், ஏற்கெனவே செய்திருக்கும் பணியின் விளைவு மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையிலும்தான் ஏ.ஐ. அப்ளிகேஷன்கள் நமக்கான தீர்வைக் கொடுக்கும்.

நாம் எதிர்பார்த்த விஷயத்தை ஏ.ஐ. கொடுக்க வேண்டும் என்றால் அதனிடம் நமக்கு கேள்வி கேட்கத் தெரிய வேண்டும். அதற்கு ப்ராம்ப்டிங் (Prompting)  என்று பெயர். மேலும், அதனுள் நாம் கேட்கும் விஷயத்துக்கான தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு டாக்டரிடம் மருத்துவம் சம்பந்தமான விஷயங்களைக் கேட்கலாம், ஏனெனில் அவரது மூளைக்குள் மருத்துவம் குறித்த தகவல்களும் அனுபவங்களுமே பதிவாகி இருக்கும். அவரிடம் பொறியியல் துறை குறித்து கேள்விகள் கேட்டால் அவரால் துல்லியமாக பதில் அளிக்க முடியாது.

ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றி ஆழமாகப் பேசுகிறார் அல்லது எழுதுகிறார்  என்றால், அவரது மூளைக்குள் அந்த விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு தகவல்களாக சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்; கற்றறிந்திருக்க வேண்டும், அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இது தான் லாஜிக். ஏ.ஐ.க்கு தகவல்களை உள்ளீடு செய்து நாம் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதனால் அலசி ஆராய்ந்து நமது தேவைக்கேற்பச் செயல்பட முடியும்.

இந்த அப்ளிகேஷன்களை நிறையப் பேர் பயன்படுத்தும்போது தான் அவை அனுபவம் பெறும். அப்போது அவை துல்லியமான பதிலைக் கொடுக்கப் பயிற்சி பெறும். நம் நாட்டைப் பொருத்த வரை, ஏ.ஐ. அப்ளிகேஷன்களுக்குள் நம் நாட்டு இலக்கியம், கலை, மொழி, தத்துவம் குறித்த தகவல்கள் உள்ளீடு செய்யப்பட வேண்டும். அவற்றை நம் மக்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போதுதான், எப்படியெல்லாம் கேள்விகள் வரும், அதற்கு எவ்வாறு பதில் கொடுக்க வேண்டும் என அவை பயிற்சி பெறும்.

ஏ.ஐ. அப்ளிகேஷன்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்க வேண்டும்; அவற்றை நிறையப் பயன்படுத்த வேண்டும்; நிறைய சிந்திக்க வைக்க வேண்டும். அப்போது அவை சிறப்பாக வேலை செய்யும் திறன் பெறும்.

நீங்கள் எழுதி வெளியிட்டுள்ள  ‘அசத்தும் ஏ.ஐ.’ நூல்களில் என்ன புதுமை செய்துள்ளீர்கள்? 

தொழில்நுட்பத் துறை சாராதவர்களுக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த இரண்டு நூல்களிலும் ஒரு புதுமையான முயற்சியைப் புகுத்தி உள்ளோம். இந்த நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ணத இர்க்ங் அச்சிடப்பட்டிருக்கும். அந்த ணத இர்க்ங்-ஐ மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் அந்த அத்தியாயத்தின் சுருக்கத்தை நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரியின் ‘ஏ.ஐ. அவதார்’ சுருக்கமாக விளக்கும் விடியோ காட்சி வெளிப்படும். இது தமிழ்ப் பதிப்புலகில் முதல் முயற்சியாகும்.

கணினித் துறையில் சாஃப்ட்வேர் சார்ந்து எழுதும் தொழில்நுட்ப நூல்கள் மொழிபெயர்ப்பாக இருக்கும் அல்லது பல்வேறு ஆங்கில நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து எழுதப்படுபவையாக இருக்கும். ஆனால் நான் அனுபவப்பூர்வமாக எழுதுகிறேன். எங்கள் ஐ.டி. நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் ஏ.ஐ. சாஃப்ட்வேர்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மூலமாகக் கிடைக்கும் அனுபவங்கள், நாங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மட்டுமே நூல்களை எழுதுகிறேன். இப்போது வெளியிட்டுள்ள  இந்த இரண்டு நூல்களையும் அப்படித்தான் எழுதி உள்ளேன்.

ஏ.ஐ. வருகையால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிடுமா?

நிச்சயமாகக் குறையாது. கணினி நம் நாட்டில் அறிமுகமாக ஆரம்பித்த காலங்களில், அவை நம் வேலைவாய்ப்பைக் குறைத்துவிடும் என்று மக்கள் அஞ்சினர். ஆனால் நடந்தது என்ன? கணினிகளால் தான் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டு வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது குறைந்திருக்கிறது.

இன்று உலகம் முழுவதும் இந்திய இளைஞர்கள் சாதனை புரிவது கணினியால் தான். அது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தில் பல தலைகீழ் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. அதுபோலவே, ஏ.ஐ. தொழில்நுட்பமும் புதிய வேலை, தொழில் வாய்ப்புகளுக்கு வித்திடும். அதற்கேற்ப நாமும் நம்மை தகவமைத்துக் கொள்வது அவசியம்.

தினமணி – கொண்டாட்டம் (10.03.2024)-

(Visited 913 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon