சுட்டிகள் கொடுத்த சர்ப்ரைஸ்!
மார்ச் 9, 2024, சனிக்கிழமை சென்னை சோஷிங்கநல்லூரில் உள்ள முகமத் சதக் கல்லூரிக்கு உலக மகளிர் தின சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன்.
மகளிர் தின கொண்டாட்டம் என்பதால் மாணவர்களுக்கு விடுமுறை கொடுத்து மாணவிகளுக்காக நாள் முழுவதும் கொண்டாட்ட தினமாக அறிவித்திருந்ததால் எத்திசை திரும்பினாலும் மாணவிகள் மட்டுமே. பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.
கல்லூரிக்குச் சென்று காரில் இருந்து இறங்கியது முதல், பேண்ட் வாத்தியம் முழங்க மேடைக்கு அழைத்துச் சென்றது வரை ராஜ மரியாதை என்பார்களே, அதற்கும் மேலான கவனிப்பு.
என் கண் முன் அமர்ந்திருந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்காக ‘அசத்தும் Ai’ குறித்து நான் உரையாற்றியதை மிக அமைதியாக கேட்ட மாணவிகளின் பண்பை பார்த்த பிறகு ராஜ மரியாதை என்ற உணர்வு பேரன்பு என்ற உணர்வாக மாறியது என்றால் அது மிகை அல்ல.
நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து இறங்கியதும் எனை நோக்கி இரண்டு குட்டி சிறுமிகள் வந்தார்கள்.
‘ஆண்ட்டி, நீங்க நல்லா பேசினீங்க…’ என்று மழலையில் பேசினார்கள். இருவரும் மூன்றாவதும், நான்காவதும் படிக்கும் சுட்டிகள் என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிபவரின் குழந்தைகள்.
நான் உரையாற்றிய பிறகு கல்லூரி முதல்வருடன் பார்வையாளராக மாணவிகளுடன் அமர்ந்திருந்தபோது அந்தக் குழந்தைகள் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
‘ஆண்ட்டி, நான் உங்களைப் போல வரணும்னு ஆசைப்படறேன்..’ என்று அந்த இரண்டு சுட்டிகளில் 4-வது படிக்கும் சுட்டி தானகாவே என்னிடம் சொன்ன போது மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்.
‘அப்படியா, நான் பேசியது புரிந்ததா?’ என்றேன்.
‘ம்… ரொம்ப…’
’ஏன் என்னைப் போல வரணும்னு ஆசைப்படறே…’ என்றேன் பேச்சை வளர்க்க.
‘நல்லா ஹார்ட் வொர்க் பண்ணி இவ்வளவு பெரிய போஸ்ட்ல இருக்கீங்க, அதனால.,,’ என்றது அந்தச் சுட்டி மழலையில்.
இதற்குள் மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டி என்னையே பார்த்துக் கொண்டிருக்க, ‘உனக்கு என்ன புரிந்தது நான் பேசியதில்?’ என்றேன்.
‘கேர்ல்ஸ் கிட்ட அன்பா இருந்தா தேவதையா இருப்பாங்க, ஹார்ஷா நடந்துகிட்டா சூனியகார கிழவியா மாறிடுவாங்க…’ என்று பேச்சின் ஊடே நான் சொன்ன ஒரு கதையின் சாராம்சத்தை அட்டகாசமாக சொன்னது அந்தச் சுட்டி.
இன்றைய பொழுதை இனிமையாக்கிய அந்த இரண்டு சுட்டிகளும் நான் வீட்டிற்கு கிளம்பிய பொழுது ஒரு இதய வடிவிலான பலூனை எனக்கு பரிசளித்துவிட்டு அதை புகைப்படம் எடுக்கச் சொல்லி போஸ் கொடுத்தன.
வாழ்த்துச் சொல்லி விடைபெற்ற போது ‘Happy Women’s Day Aunty’ என்றன அந்த இரண்டு சுட்டிகளும் ஒரே குரலில்.
வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் அந்த இரண்டு சுட்டிகளும் என்னை ரோல்மாடலாக எடுத்துக்கொள்வதாக பொருள்படும் வகையில் சொன்னவையே என் மனதுக்குள் ரீங்கராம் இட்டபடி இருந்தன.
‘வாழ்த்துகள் செல்லங்களே!’ என மனதுக்குள் மனப்பூர்வமாக ஆசிர்வதித்தேன்.
They Made my Day Today!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மார்ச் 9, 2024 | சனிக்கிழமை
Part-1: காம்கேர் கே. புவனேஸ்வரி
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
மகளிர் தின விழா @ முகமத் சதக் கல்லூரி, சென்னை
Part-2: காம்கேர் கே. புவனேஸ்வரி
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
மகளிர் தின விழா @ முகமத் சதக் கல்லூரி, சென்னை
Part-3: காம்கேர் கே. புவனேஸ்வரி
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
மகளிர் தின விழா @ முகமத் சதக் கல்லூரி, சென்னை