ஒரு சிறுதுளியில் பெருங்கடல்!

ஒரு சிறுதுளியில் பெருங்கடல்!

பிப்ரவரி மாதம் (2024) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கில் தலைமை ஏற்று Ai குறித்து சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள்.

‘ராஜமரியாதை’ என்பார்களே அதுபோன்றதொரு வரவேற்பு. மிக மிக கெளரவமாக நடத்தினார்கள், பழகினார்கள். அவர்களின் மரியாதையும், அன்பும், பண்பும் வியக்க வைத்தன. இரண்டு நாட்கள் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

காரைக்குடி செல்வது அதுவே முதல் முறை என்பதால் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன்.

அங்கிருந்த மூன்று நாட்களும் கிட்டத்தட்ட 20 கோயில்களுக்கு சென்றிருப்போம். சிறியதும், பெரியதுமாக ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு கோயில்.

சென்ற கோயில்களில் எல்லாம் விஐபி தரிசனம். ஆமாம். கூட்டமே இல்லை, நாங்கள் மட்டுமே என்றால் நாங்கள் தானே விஐபி.

பட்டமங்களம் எனும் ஊரில் வீற்றிருந்த தஷ்ணாமூர்த்தி கவனத்தை ஈர்த்தது. 1000 வருடங்களாக விழுதுகள் விட்டு, ஒவ்வொரு விழுதுமே தடிமனாக வேரூன்றி மரமாகி காட்சி அளித்த   ஆலமர விழுதுகளுக்குக் கீழேயே அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்த தஷ்ணாமூர்த்தி திருக்கோயிலுக்கு நாங்கள் சென்றபோது மாலை 4 மணி இருக்கும். வெளியே கொஞ்சம் இருட்டிக் கொண்டு மழை வரும்போல் இருந்ததால், கோயில் முழுவதும் இருட்டாக அரை வெளிச்சத்தில் காட்சி அளித்தது. பிரமாண்டமான கோயிலில் ஆங்காங்கே ஒன்றிரண்டு விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

நாங்கள் எல்லா பிரகாரங்களுக்கும் சென்றுவிட்டு  தஷ்ணாமூர்த்தி சுவாமியை தரிசனம் செய்ய வந்தபோது அந்தப் பிரகாரத்துக்கான குருக்கள் அங்கு இல்லை.

அங்கே இருந்த இன்வர்ட்டருக்கு டிஸ்டில்டு வாட்டர் விட்டுக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்து விட்டு ‘கரண்ட் இல்லை, இன்வர்டருக்கு டிஸ்டில்டு வாட்டர் குறைந்ததால் விளக்குகள் எரியவில்லை. நான் ஒரு ஆள் தான் இருக்கிறேன். எனவே நீங்களே விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள்’ என்றார் மென்மையாக.

நாங்களும் சரி என சொல்லிவிட்டு சுவாமி தரிசனம் செய்துகொண்டு பிரகாரத்தை சுற்றி வந்து அவர் எப்படி டிஸ்டில்டு வாட்டர் விடுகிறார் என பார்த்தபடி சில நொடிகள் நின்றிருந்தோம். எங்கள் வீட்டில் என் அப்பாதான் இன்வர்டருக்கு டிஸ்டில்டு வாட்டர் நிரப்புவார் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. அப்போது அவர் கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்வார். அது எனக்கு நினைவுக்கு வர ‘கைகளில் கிளவுஸ்’ அணிந்துகொண்டு டிஸ்டில்டு வாட்டர்விட்டால் கைகளில் படமால் இருக்குமல்லவா, எரிச்சல், அரிப்பு ஏற்படாதே’ என்றேன் மிக மிக சாதாரணமாக, எந்த உள் நோக்கமும் இல்லாமல். அவர் சிரித்துக்கொண்டார். நாங்கள் ‘கிளம்புகிறோம்’ என அவரிடம் சொல்லி விடைபெறும் தருவாயில் ‘கொஞ்சம் இருங்கள்’ என சொல்லிவிட்டு எங்களுடன் தஷ்ணாமூர்த்தி பிரகாரத்துக்கு வந்தார்.

மந்திரம் சொல்லி தீபாராதனை காண்பித்தார்.   அப்பாவுக்கு மாலை அணிவித்தார். தஷ்ணாமூர்த்தி சுவாமிக்கு அணிவித்திருந்த மஞ்சள் கலர் துண்டுடன் சேர்த்து விபூதி குங்குமம் பூ எங்களுக்குக் கொடுத்தார். சுவாமியை வேண்டிக் கொள்ளுங்கள். நினைத்த காரியம் கைகூடும் என்றார்.

நாங்கள் கிளம்பியதும் அவர் மீண்டும் டிஸ்டில்டு வாட்டர் விட சென்றுவிட்டார். கோயில் டியூப் லைட்டுகளும் ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன.

இதை ஏன் விளக்கமாக சொல்கிறேன் என்றால், கரண்ட் இல்லாததால் டிஸ்டில்டு வாட்டர் விட வேண்டும், நீங்களே விபூதி குங்குமம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்றபோது நாங்களும் அப்படியே செய்துவிட்டு கிளம்பி இருந்தால் தீபாராதனை அர்ச்சனை  இதெல்லாம் கிடைத்திருக்குமா? நான் ஒருதுளி அக்கறையுடன்  ‘கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு டிஸ்டில்டு வாட்டர் விடலாமே’ என்று  சொன்ன வார்தைகள் மந்திர வார்த்தைகளாகிவிட்டதை அப்போதே நாங்கள் உணர்ந்தோம். அடுத்த கோயிலுக்கு செல்லும் வரை அது பற்றியே பேசி வந்தோம்.

கோயில் அர்ச்சகரின் பணி பூஜை செய்து தீபாராதனை காட்டுவதுதானே, அப்படி இருக்க அவர் என்ன செய்துவிட்டார்? அதை ஏன் சிலாகிக்கிறீர்கள் என ஒரு சிலர் நினைக்கலாம்.

சரிதான். ஆனால் அர்ச்சகர்களுக்கும் மாலை இத்தனை மணியில் இருந்துதான் வேலை என்று கணக்கிருக்கும். நாங்கள் சந்தித்த அர்ச்சகர் அவர் பணி நேரத்துக்கும் முன்னமே வந்து, ஆட்கள் இல்லாததால் அவர் பணி அல்லாத மற்றொரு பணியை செய்து கொண்டிருந்தார். மேலும் கரண்ட் வேறு இல்லை. இருட்டாகிக் கொண்டே வந்ததால் இன்வர்ட்டர் பணிக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டார். அதுதான் உண்மை.

ஆனாலும் எங்கள் கனிவான அணுகுமுறைக்கு மரியாதை கொடுத்து எங்களுக்காக அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து கோயில் சிறப்புகளைச் சொல்லி வழி அனுப்பிய பிறகு மீண்டும் அவர் செய்து கொண்டிருந்த பணியை கவனிக்கச் சென்றார்.

இந்த நிகழ்வில் நான் சொல்ல வந்தது, ஒரு சிறுதுளி கனிவை நாம் காண்பித்தால், இந்த உலகம் நம் மீது பெருங்கடல் பாசத்தைக் கொட்டத் தவறுவதில்லை என்பதே.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 6,  2024 | வியாழன்

(Visited 9,098 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon