பாரதியும், விவேகானந்தரும், கிருஷ்ணரும்!

Drawn by Ai

பாரதியும், விவேகானந்தரும், கிருஷ்ணரும்!

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கிய புதிது. படித்து முடித்து சென்னை வந்த புதிதும் கூட. ப்ராஜெக்ட்டுகளுக்காக நிறைய பேர் நேரில் சந்திக்க வருவார்கள். 24 மணி நேரமும் கனவிலும் நனவிலும் ப்ராஜெக்ட்டுகள், லாஜிக்குகள், தீர்வுகள் என காம்கேர் குறித்த சிந்தனைதான். இப்போதும் அப்படித்தான்.

அப்போதெல்லாம் ஒரு இளம் பெண் பிசினஸ் செய்வது எல்லாம் பெரிய விஷயம். பலரும் என் அப்பாதான் பிசினஸ் செய்வதாகவும், நான் படித்து முடித்து அதை எடுத்து நடத்துவதாகவும் கருதுவார்கள். வாய்விட்டு கேட்கவும் செய்வார்கள். அத்தனை நேர்த்தியாகஎன் செயல்பாடுகள் இருப்பதால் அப்படி கேட்பதாக காரணமும் சொல்வார்கள்.

ஆனால், நான்தான் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன் என்று சொன்னதும் ஆச்சர்யமாக பார்ப்பார்கள். காரணம், இளம்பெண் ஒரு நிறுவனம் தொடங்குவதெல்லாம் அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய விஷயம்.

குறிப்பாக பெண்கள் இஷ்டப்படி படிப்பது, விருப்பப்பட்ட வேலைக்கு செல்வது, விரும்பிய திருமணம் செய்வது இதெல்லாம் கனவில் மட்டுமே சாத்தியம் பெரும்பாலான குடும்பங்களில். அப்படி இருக்க கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்று, என் பெற்றோர் அரவணைப்புடன் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி வெற்றிப் பாதையில் செல்வதெல்லாம் எல்லோரையும் வாய்பிளக்க வைத்தன என்று நான் சொல்வது மிகையாக இருப்பதைப் போல் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.

அந்த காலகட்டத்தில் ஒரு நேர்காணலுக்காக என் அலுவலகம் வந்திருந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் (அவரே அதன் உரிமையாளரும் கூட) இடை இடையே என்னிடம் ஒருவர் பெயரை குறிப்பிட்டு, ‘நீங்கள் அவர் கனவு கண்ட புதுமைப் பெண்’ என்று சொன்னபோது, ‘அப்படியா சார், அவர் அப்படி என்ன பெண்கள் குறித்து சொல்லி உள்ளார்’ என நிஜமாகவே கேட்டேன்.

‘அப்போ அவர் குறித்து நீங்கள் படித்ததே இல்லையா, அவர் குறித்து படியுங்கள்… வியந்து போவீர்கள்…’ என்று அவர் கொடி பிடித்த ‘பெரியவருக்கு’ சாதகமாக பேசிக்கொண்டே போனார்.

‘அப்படியா சார்?’ என்று சொன்னேன். படிக்கிறேன் என வாக்குறுதி எல்லாம் கொடுக்கவில்லை. அவர் குறிப்பிட்ட நபர் குறித்து என் பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். ஓரளவுக்கு அந்த பத்திரிகையாளர் குறித்த அடிப்படை குணத்தையும் அறிந்து கொண்டேன்.

அதன் பிறகு எங்கள் காம்கேரின் 25 -வது ஆண்டுவிழாவின் போது அதே பத்திரிகையாளரை சந்தித்தேன்.

‘நல்லபடியாக நிறுவனத்தை வளர்த்துள்ளீர்கள்’ என வியந்து பாராட்டினார்.

‘கடவுள் அருளால் எல்லாம் சாத்தியமாயிற்று’ என அடக்கமாக பதில் சொன்னேன்.

‘பாருங்களேன், உங்கள் ஜீன் உங்களை இப்படி பேச வைக்கிறது. நீங்கள் உழைத்தீர்கள், நீங்கள் வளர்ந்துள்ளீர்கள்… இங்கு கடவுள் எங்கே வந்தார். நீங்கள் பெரி… பற்றி தெரிந்துகொள்ளவாவது அவர் குறித்த புத்தகத்தை படியுங்கள். அதன் பிறகு இப்படி பேச மாட்டீர்கள்’ என வெளிப்படையாக விவாதத்தைத் தொடங்க ‘நான் சொன்னதில் என்ன தவறு, சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நம் அனைவரையும் இயக்குவது இயற்கையும், இறைவனும் தான்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன், மற்றொரு முக்கியமான கிளையிண்ட் குடும்பத்தை கவனிக்க.

சிறு வயதில் இருந்தே சரி தவறுகளை ஆராயும் குணமும், என் மனதுக்கு சரி என படுவதை மட்டுமே செய்யும் பிடிவாத குணமும், எதுவாக இருந்தாலும் என் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளும் குணமும் இருப்பதால் வெளியில் இருந்து யாரும் எந்த ஒரு கருத்தையும் என் அனுமதி இன்றி என் மனதுக்குள் புகுத்தி விட முடியாது. இத்தனை மன உறுதியை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாதல்லவா?

ஆனால் பாருங்கள், இப்போது என் வயதுக்கு என்னிடமே ஒரு குறிப்பிட்ட விஷயத்தை என் உள்ளே புகுத்த இத்தனை பிரயத்தனப்படுகிறார்கள் என்பதை பார்க்கும்போது இளைய தலைமுறையை நினைத்து கொஞ்சம் பதற்றமாகவே உள்ளது.

நான் நன்றாக யோசித்துப் பார்க்கிறேன். வெளி உலகில் என் நினைவு தெரிந்து யாருமே பாரதியாரை படியுங்கள், விவேகானந்தரை படியுங்கள், பகவத்கீதை கிருஷ்ணரை படியுங்கள் என்றெல்லாம் வலியுறுத்தியதே இல்லை. ஏன் சொல்லவில்லை? ஏன் கட்டாயப்படுத்தவில்லை?

ஆனால், என் பெற்றோரின் வளர்ப்பில் பாரதியையும், விவேகானந்தரையும், பகவத்கீதை கிருஷ்ணரையும் நாங்களாகவே படித்தோம்.

நான் சொல்ல வருவது, நல்ல விஷயங்களை இளைஞர்கள் மனதுக்குள் புகுத்த பெரிய அளவில் முயற்சிகள் எடுப்பதில்லை என்பதைவிட அப்படி எடுக்கும் முயற்சிகள் நல்லவை அல்லாத விஷயங்களை எதிர்க்கப் போதுமானதாக இல்லை என்பதே.

நல்லவை அல்லாத விஷயங்கள் விலக வேண்டுமானால், நல்லவை பெருக வேண்டும் என்று சொல்வதைவிட நல்லவை சுனாமி போல வெகுண்டு எழுந்து பெருக வேண்டும். அது மட்டுமே நல்லவை நிலைத்திருக்க ஒரே வழி.

இன்று என்னவோ மனசு கொஞ்சம் சஞ்சலமாக இருந்தது. காரணம் வேண்டாமே. உங்களில் பலருக்கும் அதே மன சஞ்சலம் இருந்திருக்கும்.

நல்லவை பெருகட்டும்! என் பிரார்த்தனை அது ஒன்று மட்டுமே!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 4, 2024 | செவ்வாய்

(Visited 986 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon