புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்!
ஹிட்லருக்கும் தெரியுமே Ai தொழில்நுட்பம்!
ஹிட்லரும் Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா உங்களால்? உண்மை அதுதான் என்றால் நம்பித்தானே ஆக வேண்டும்.
இரண்டாம் உலகப் போரில் அடால்ஃப் ஹிட்லர், உலகம் முழுவதும் உள்ள தனது போர் ஆயுதங்களை தன் இருப்பிடத்தில் இருந்தே இயக்கி போர் செய்ததாகவும், எந்த இடத்தில் உள்ள ஆயுதம் எப்போது வெடித்துச் சிதறும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது என்றும், அந்த காலகட்டத்திலேயே செயற்கை நுண்ணறிவுக்கான ஆதாரப் புள்ளி ஆரம்பமாகிவிட்டன என்றும் செய்திகள் கூறுகின்றன.
ஹிட்லர் வாழ்ந்த காலகட்டம் 1899 – 1945. ஜெர்மனியின் நாஜி கட்சியின் தலைவராக இருந்து படிப்படியாக முன்னேறி ஜெர்மனியின் தலைவாரானார். இவரது தலைமையில், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியானது ஐரோப்பிய நாடுகளை சூறையாடி வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. இதற்குக் காரணம் அவர்களின் வலுவான இராணுவ பலம் மட்டுமல்ல, ‘எனிக்மா’ என்ற ஒரு அற்புதமான இயந்திரமும் கூட.
எனிக்மா என்ற புத்திசாலி இயந்திரம் நாஜி படைகளுக்கு ரகசிய குறியாக்கப்பட்ட தகவல்களை (Encrypted Message) அனுப்பி அதன் மூலம் அடுத்தடுத்த தாக்குதல்களுக்கான கட்டளைகளை கொடுத்து வந்தது. அதனால் தாக்குதல் எப்போது எங்கு நடக்கும் என்பதை பிரிட்டன் உட்பட எந்த நாட்டாலும் கண்டுபிடிக்க முடியாமல் திணறியது. எனிக்மா அனுப்பும் ரகசிய குறியாக்கப்பட்ட தகவல்களை உடைத்து (Decode) அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் யாரிடமும் இல்லை, அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்றும் நம்பப்பட்டு வந்தது.
அந்த காலகட்டத்தில் பிரிட்டன் கணிதவியலாளர் ‘ஆலன் டூரிங்’, பிரிட்டன் படைகளுக்கு உதவுவதற்காக பிரிட்டீஷ் இண்டலிஜன்ஸ் ஏஜென்சியில் இணைந்தார். எனிக்மா இயந்திரத்தின் ரகசிய குறியாக்கப்பட்ட தகவல்களை உடைக்கும் முயற்சியில் காலத்தை கடத்துவதைவிட எனிக்மா போலவே ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என சொன்னார். இதற்காக ஒரு குழுவை உருவாக்கி இராப்பகலாக உழைத்து தன் ஆராய்ச்சியினால் ஒரு இயந்திரத்தை உருவாக்கி அதற்கு ‘கிரிஸ்டோபர்’ என்று பெயர் சூட்டுகிறார்.
அதன் மூலம் ஜெர்மனியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தோற்கடித்து ஜெர்மனின் படைகளை வீழ்த்த ஆரம்பித்து, 1941 – க்குப் பிறகு ஜெர்மனியை முற்றிலும் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்கள்.
கணிதவியலாளர் ‘ஆலன் டூரிங்’ நினைவாக அந்த இயந்திரத்தை ‘டூரிங் மிஷின்’ என்றார்கள். அதைதான் நாம் ‘கம்ப்யூட்டர்’ என்று பெயரிட்டு நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக்கிக் கொண்டுள்ளோம்.
1950 ஆம் ஆண்டு, ஆலன் டூரிங் ‘கம்ப்யூட்டர்களால் சிந்திக்க முடியுமா?’ என்கிற கேள்வியுடன் தொழில்நுட்ப வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு ‘கம்ப்யூட்டர் இயந்திரம் மற்றும் நுண்ணறிவு’எனும் கட்டுரையினை வெளியிட்டார். ‘கம்ப்யூட்டர்களால் சிந்திக்க முடியுமா?’ என்ற கேள்விக்கான பதிலை அவர் ஒரு சோதனை மூலம் பரிசோதித்தார். கம்ப்யூட்டர்களை மனிதனைப் போல சிந்திக்க செய்ய முடியுமா என்ற அந்த பரிசோதனையை ‘இமிடேஷன் கேம்’ என்றார்.
மனிதனிடம் கேட்கும் சில கேள்விகளை கம்ப்யூட்டர்களிடம் கேட்டு, அது எந்த அளவுக்கு சரியான பதிலை சொல்கிறது என்று தெரிந்துகொள்ளும் முயற்சி அது. பின்னாளில் ‘இமிடேஷன் கேம்’ என்ற அந்த பரிசோதனையின் பெயர் ஆராய்ச்சியாளர் ‘ஆலன் டூரிங்’ பெயரில் ‘டூரிங் டெஸ்ட்’ என மாறியது.
ஒரு அறையில் கம்ப்யூட்டர், மற்றொரு அறையில் மனிதன். இரண்டு அறைக்கும் வெளியே ஒரு பரிசோதனையாளர். அவர் ஒரே கேள்வியை இரண்டு அறைகளை நோக்கிக் கேட்பார். எந்த அறையில் மனிதன், எந்த அறையில் கம்ப்யூட்டர் உள்ளது என அவருக்கும் தெரியாது. இரண்டு அறையில் இருந்தும் அவர் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதில் வந்துவிட்டால் கம்ப்யூட்டருக்கு மனிதனைப் போல சிந்திக்கும் ஆற்றல் உள்ளது என உறுதி செய்யலாம் என்ற பரிசோதனை அது.
பொதுவாக மனிதர்களிடம், ‘உங்கள் வாழ்க்கையில் மறக்க இயலாத சம்பவம் என்ன?’, ‘உங்கள் தோலின் நிறம் என்ன?’, ‘உங்களுக்கு எந்த உணவு பிடிக்கும்?’ என்றெல்லாம் கேட்டால் நம்மால் சரியான பதிலை கொடுத்துவிட முடியும். இதுபோன்ற கேள்விகளுக்கு கம்ப்யூட்டராலும் சரியான பதிலை சொல்ல முடியக் கூடிய அளவுக்கு அதற்கு பயிற்சி அளித்து சாஃப்ட்வேர்களையும், தரவுகளையும் உள்ளீடு செய்திருந்தால், கம்ப்யூட்டர்களும் சரியான பதிலை சொல்லும். அதுவே Ai. இயந்திரத்தையும் சிந்திக்க வைக்கும் அற்புத கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறவு (Artificial iNtelligence)
இதைத்தொடர்ந்து இவர் மேற்கொண்ட சோதனைகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு எனும் பூதாகரமான தொழில்நுட்ப உச்சத்துக்கு அடிகோலியது.
இவை எல்லாம் உலக அளவில் நடைபெற்ற சோதனை முயற்சிகள். நம் நாட்டில் Ai அறிமுகம் ஆன வரலாற்றை அடுத்த மாதம் சொல்கிறேன்!
(வரம் தர வரும் Ai)