காரைக்குடி ஜாடிகள்!

காரைக்குடியில் செட்டிநாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பீங்கான் ஜாடிகள் பிரபலம். தனித்துவமாகவும் இருக்கும்.

பிப்ரவரி மாதம் 2024 –ல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Ai குறித்து பேசுவதற்காக ஒரு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன்.

காரைக்குடி செல்வது அதுவே முதன்முறை என்பதால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கி இருந்து ஊரை சுற்றிப் பார்த்தோம்.

ஒருநாள் இரவு. சுற்றி உள்ள கோயில்களுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். தெருவோர கடை ஒன்றில் விதவிதமாக பீங்கான் ஜாடிகள் தெரு விளக்கு வெளிச்சத்தில் பளபளத்துக் கொண்டிருந்தன.

பார்க்கவே அத்தனை அழகாக இருந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு பீங்கான் ஜாடிகளை பார்வையிட்டோம். கடையில் ஒரு பெண் தோளில் அழுக்கு துண்டை போட்டுக்கொண்டு நின்றிருந்தார். அவ்வப்பொழுது அனிச்சையாக அந்தத் துண்டால் ஜாடிகள் மீது தூசு தட்டியபடி இருந்தார். அருகில் இருந்த ஒரு சுவற்றில் சாய்ந்துகொண்டு ஒரு ஆண் கூடை பின்னிக் கொண்டிருந்தார்.

என் அப்பா அம்மாவுடன் நான் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அவர்களாகவே விதவிதமான ஜாடிகளை எடுத்து தூசி தட்டி எடுத்துக் காண்பிக்க ஆரம்பித்தார்.

நான்கைந்து ஜாடிகளை வாங்கிக் கொண்ட பிறகு அந்தப் பெண்ணுடன் பொதுவாக பேசினோம். கணவனும், மனைவியும் காரைக்குடியில் ஜாடி விற்பனை செய்ய, அவர்களின் பள்ளி படிக்கும் இரு குழந்தைகளும் சிதம்பரத்தில் பாட்டி வீட்டில் படிக்கிறார்கள்.

‘வீடு காரைக் குடியில் எங்கே?’ என கேட்டதற்கு ‘வீடெல்லாம் கிடையாதும்மா, இப்படியே சாலையோரத்தில் பீங்கான்கள் மீது சாக்கு போட்டு மூடி விட்டு நாங்களும் அப்படியே படுத்துக்குவோம்…’

எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்க ‘மழை வந்தால்…’ என கேட்க ‘ஓடிப் போய் பக்கத்து கடைகளில் அண்டிக் கொள்வோம்…’ என்றார்.

‘அப்ப இந்த சாமான்கள்?’ என்றதற்கு  ‘அதையும் அள்ளிக் கொண்டுதான் கடைகளில் அண்டுவோம்…’ என்றார்.

‘ஏன் சிதம்பரத்தில் இந்த பீங்கான் பிசினஸ் செய்ய முடியாதா?’ என்றதற்கு ‘அங்கு அவ்வளவா ஓடாதும்மா, பீங்கான் சாமான்கள் என்றாலே காரைக்குடிதான்’ என்றார்கள் கணவனும் மனைவியுமாக ஒரு சேர.

பாதுகாப்புக்கு நிச்சயமில்லாத வீதியோர வாழ்க்கை, குழந்தைகள் ஓரிடம், பெற்றோர் ஓரிடம், மழை வரும், பாம்பு வரும், நாய் வரும், மனித உருவில் மிருகங்கள் வரும். இவை அத்தனையையும் மீறித்தான் இவர்கள் வாழ்க்கை.

நாம் வாழும் வாழ்க்கைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லி, பேரம் பேசாமல் பீங்கான் ஜாடிகளுக்கு பணம் கொடுத்தோம். அவர்களே 200 ரூபாய் திரும்பத் தந்தார்கள். ஏன் என கேட்டதற்கு ‘எல்லோரும் பேரம் பேசுவார்கள். அதனால் விலையை கொஞ்சம் அதிகம் வைப்போம். நீங்கள் பேரம் பேசாததால்…’ என சொல்லி பணத்தை எங்களிடம் சேர்ப்பதிலேயே முனைப்பாக இருந்தார்கள்.

ஆனால் நாங்கள் வாங்கவில்லை. ‘உங்கள் உழைப்புக்கு எங்கள் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்…’ என சொல்லி புறப்பட்டோம். கார் டிக்கி வரை வந்து நாங்கள் வாங்கிய பீங்கான் ஜாடிகளை வைத்தார்கள்.

அதற்குள் ஒரு மாடு ஜாடிகளை நோக்கி வர, நாங்கள் கூறிய நன்றியைக் கூட காதில் வாங்க நேரமின்றி, அதை விரட்ட ஓடினார்கள்.

மாடு உருட்டி ஜாடிகள் உடைந்தால் எத்தனை நாள் பட்டினி கிடக்க வேண்டுமோ?

கார் அந்தக் கடையை கடந்து செல்லும்போது நான் தலையைத் திருப்பி அவர்கள் கடையையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்க்கிறேன் என்பதை உணர்ந்துகொண்ட அந்தப் பெண் நட்புடன் சிரித்தார்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 23,  2024 | செவ்வாய் கிழமை

(Visited 3,270 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon