வறட்சியாகி விட்டதா நேர்மை?
நேற்று வேளச்சேரியில் ஒரு பகுதியில் டிராஃபிக் ஜாம். வேளச்சேரியில் ‘டிராஃபிக் ஜாம்’ ஆகாத இடம் ஏதேனும் இருக்கிறதா என நானே என்னைக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்.
யோக நரசிம்மர் கோவிலின் மெயின் ரோடை பார்த்த நுழைவாயிலில் காரை நிறுத்திவிட்டு ஒருவர் உள்ளே சென்றிருப்பார் போல. அதனால் எதிரில் இருந்து பஸ் முன்னேறி வர முடியாமலும், நான் சென்று கொண்டிருந்த எதிர் திசையில் உள்ள வண்டிகள் அதன் போக்கில் முன்னேறி செல்ல முடியாமலும் ஒன்றை ஒன்று முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தன.
எனக்கு முன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராயல் என்ஃபீல்டில் காத்திருந்தார். அவரது உடையை வைத்து போலீஸ் என கண்டு கொண்டேன். உடனே அவர் ஹெல்மெட் போட்டிருக்கிறாரா என பார்த்தேன். போட்டிருந்தார்.
ஐந்து நிமிடங்கள் அனைவருமே பொறுமையாகக் காத்திருந்தோம்.
உடனே அந்த போலீஸ் பைக்கை எதிர் திசையில் இலாவகமாக கோயிலுக்கு அருகில் கொண்டு நிறுத்தி உள்ளே சென்றார். கையோடு காரை நிறுத்தியவரை அழைத்து வந்து காரை எடுக்கச் செய்தார்.
கார் ஓட்டுனர் சல்யூட் அடித்து நன்றி சொல்லி (சாரியும் சொல்லி இருப்பார்) காரை எடுத்த பிறகு டிராஃபிக் சரியானது.
அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் பைக்கை கோயிலுக்கு அருகே கொண்டு நிறுத்தியதில் இருந்து கார் ஓட்டுனரை கையுடன் அழைத்து வந்து கார் அங்கிருந்து நகர்ந்து, அவரும் தன் பைக்கில் எங்கள் வரிசையில் வந்து கலந்துகொண்டது வரை, அவர் உடல் மொழியை கவனித்துக் கொண்டே இருந்தேன்.
அத்தனை நேர்மை. கம்பீரம். ஒருதுளி அதிகாரம் இல்லை. ‘என்ன இப்படி பிசியான சாலையில் நிறுத்திவிட்டு பொறுப்பில்லாமல் சென்றுவிட்டீர்களே?’ என்ற ஆதங்கத்தைத்தான் அவர் கார் ஓட்டுனருடன் பேசியதை, தூரத்தில் இருந்து உணர்ந்துகொள்ள முடிந்தது.
இந்த இடத்தில் என்ன ஆச்சர்யம் என்றால் அவர் ஒரு போலீஸ். போலீஸ் என்றாலே நாம் கற்பனை செய்து வைத்திருப்பதைப் போல், நமக்கு இந்த சமூகம் கற்றுத் தந்திருப்பதைப் போல் அவர் கடுமையாக கார் ஓட்டுனரை கடிந்து (அவர் பணியின் பாணியில்) கொண்டிருக்கலாம். ஃபைன் போடுவதாக சொல்லி மிரட்டி பணமும் வாங்கி இருக்கலாம் (அவர் டிராஃபிக் கான்ஸ்டபிளாக இல்லாத போதும்). ஆனால் எதுவுமே செய்யாமல் கழற்றிய ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு பயணிகளுடன் பயணியாய் சென்றது அத்தனை அழகாக இருந்தது.
இப்போதெல்லாம் அவரவர் பணியில் அவரவர் நேர்மையாக இருப்பதே என்னவோ பெரிய சாகசம் செய்துவிட்டதைப் போல் ‘ஆஹா’ போட வைக்கிறதே! அத்தனை வறட்சியாகி விட்டதல்லவா நேர்மை!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 20, 2024 | சனிக்கிழமை