நாகரிகம் பழகுவோம்!
சென்னை ஆதம்பாக்கம் ஸ்ரீ லஷ்மி மஹாலில் மூன்று நாட்கள் நிகழ்வாக நடைபெற்று வந்த ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்று. நிகழ்ச்சியை வருடா வருடம் சிறப்பாக நடத்தி வரும் ஸ்ரீராம் ஸேவா டிரஸ்ட், மதியம் வடை பாயசத்துடன் நிகழ்ச்சிக்கு வருகின்ற அனைவருக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.
நேற்று ஞாயிறு என்பதால் கூட்டமான கூட்டம். அதுவும் நேற்றுதான் ராதா கல்யாண வைபவம் என்பதால், தங்கள் குடும்பத்தில் நடைபெறும் திருமணம் என்றால் எப்படி மகிழ்ச்சியுடன் கலகலப்பாக நன்றாக நேர்த்தியாக உடை அணிந்து வருவார்களோ அப்படி வந்திருந்தனர். என் கணக்குபடி 1200 க்கும் குறையாத எண்ணிக்கையில் கூட்டம்.
கல்யாணம் முடிந்து சாப்பாட்டுக்கு கியூ நிற்க ஆரம்பித்தது.
ஒரு பந்தியில் 300 பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். நாங்கள் சென்றது மூன்றாவது பந்தி.
300 பேரும் சாப்பிட்டு கை அலம்பிய பிறகுதான் அடுத்த பந்தியை அனுமதிக்கிறார்கள்.
நாங்கள் சென்ற போது ஒரு வரிசையில் ஒரு 35+ வயதை ஒத்த பெண், போனில் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மற்ற எல்லா டேபிளில்களிலும் சாப்பிட்ட இலைகளை எடுத்து, சுத்தம் செய்து புது இலைகள் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தப் பெண் மட்டும் பேச்சையும் நிறுத்தவில்லை. சாப்பிட்டும் முடிக்கவில்லை. ‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என பேசிக் கொண்டு பரிமாறுபவர்களில் ஒருவர் சென்று ஏதோ சொல்ல, அவர் ‘இதோ’ என சொல்லிக் கொண்டு பாயசத்தை கடைசியாக சுவைத்துக் கொண்டே (அப்போதும் போனை வைக்கவில்லை, பேசியபடியேதான் இருந்தார்) எழுந்து மெதுவாக (நம்மைத் தவிர யாருமே சாப்பாட்டு ஹாலில் இல்லையே என்று ஒரு பரபரப்பு வேண்டாம். ம்ஹும்) நடந்து கை கழுவச் சென்றார். அங்கு சென்றும் கை அலம்பாமல் பேசியபடியே இருந்தார். முக்கியமான விஷயம் என்றால் பரபரப்பு இருக்குமே. அதெல்லாம் எதுவும் இல்லை. வெட்டியாக ஏதோ ஊர்கதை தான் பேசிக் கொண்டிருந்தார்.
பரிமாறுபவர்களுக்கும் வேலை முடிய வேண்டும். வந்திருப்பவர்களும் சாப்பாட்டுக்காக காத்திருக்கிறார்கள். நேரடியாக போய் ‘சீக்கிரம் சாப்பிடுங்கள்’ என சொன்னால் ஏதேனும் கலவரம் வெடிக்கலாம். ‘எதடா சாக்கு’ என நல்ல விஷயங்களை நடத்த விடாமல் செய்ய எத்தனையோ தீய சக்திகள் காத்திருக்கின்றனவே. எனவேதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நபர் ஒருவரே ஒருவர் ஆனாலும் பொறுமையாக காத்திருந்து, அவர் எழுந்தே செல்லாமாட்டார் என்பதை ஆழமாக உணர்ந்த பின்னர்தான் அவரிடம் மிக மென்மையாக சொன்னார்கள்.
இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்றால் நானும் அப்பாவும் அங்குதான் நின்று கொண்டிருந்தோம். அந்த நிகழ்ச்சியின் சமையல் காண்டிராக்டர் அந்த டிரஸ்ட்டின் ஓர் அங்கத்தினர் என்பதாலும், அவர் எங்கள் குடும்பத்து நிகழ்ச்சிகளுக்கு சமைக்கும் ஆஸ்த்தான சமையல் நிபுணர் என்பதாலும் அவரிடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
வண்டி ஓட்டும்போது போன் பேசுவது எத்தனைக்கு எத்தனை ஆபத்தோ, அத்தனைக்கு அத்தனை பலர் கலந்து கொள்ளும் விருந்துகளில், பந்தியில் அமர்ந்து சாப்பிடும்போது போன் பேசிக் கொண்டே சாப்பிடுவதும். முன்னது உயிருக்கு ஆபத்து. பின்னது நாகரிகமற்ற செயல்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 29, 2024 | திங்கள்