நம்மை ஆளப்போகும் Ai[7]: ஆலோசனையும் கொடுக்கும், பாராட்டு விழாவும் எடுக்கும் Ai : லேடீஸ் ஸ்பெஷல் அக்டோபர் 2024 

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்!

ஆலோசனையும் கொடுக்கும், பாராட்டு விழாவும் எடுக்கும் Ai    

Ai மூலம் சொல்லணா வசதிகள் வந்துவிட்டாலும், ‘Ai-ஐ நம்மால் பயன்படுத்த முடியுமா?’ உங்கள் தயக்கத்தை உடைக்க வந்ததுதான் Ai உடன் உரையாடும் வசதி. ஒரு வசதியை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்த முடியும் எனும்போதே அது நமக்கு நெருக்கமாகிவிடும் அல்லவா?

Ai உடன் உரையாடுவது என்பது நாம் வாட்ஸ் அப் பயன்படுத்துவதைப் போல மிக சுலபமானதே. ஆங்கிலத்தில் அத்தனை புலமை கிடையாதே, எப்படி டைப் செய்வது என சங்கோஜப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள், தமிழிலும் டைப் செய்யலாம். வாயால் சொன்னால் கூட டைப் ஆகும் வசதிகள் எல்லாம் உள்ளன. அதிலும் வாட்ஸ் அப்பில் தமிழில் டைப் செய்து பழகி இருக்கிறீர்களா? பிறகென்ன, நீங்கள் Ai – உடனான உரையாடலில் ஜமாய்க்கலாம். இதற்கு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரோ, லேப்டாப்போ, ஐபேடோ அல்லது வேறு ஏதேனும் டிஜிட்டல் சாதனங்கள் தேவை என்பதே இல்லை. சதா நம் உள்ளங்கை கதகதப்பில் அமர்ந்திருக்கும் நம் மொபைல் போனிலேயே Ai ஐ பயன்படுத்த முடியும்.

செயற்கை நுண்ணறிவு எனும் Ai வசதியை கம்ப்யூட்டரில், லேப்டாப்பில், ஸ்மார்ட் போனில், கேமிராவில், கைகடிகாரத்தில், காரில், பைக்கில், வாஷிங்மெஷினில், மருத்துவ உபகரணங்களில், விவசாயக் கருவிகளில் என்று நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு சாதனத்தில் இணைத்துப் பயன்படுத்த முடியும். மேலும், தரை துடைக்க, ஓட்டல் சர்வராக பணி புரிய, வீட்டில் பணியாளராக உதவிசெய்ய என  தேவைக்கு ஏற்ப பிரத்யோகமான ‘ரோபோ’-வை உருவாக்கி அதில் Ai வசதியைப் பொருத்தியும் இயக்கலாம். அமெரிக்காவில் ஓர் இளம் பெண், தன் விருப்பத்துக்கு ஏற்ப தன் வாழ்க்கைத் துணையாக ஒரு ரோபோவை உருவாக்கி திருமணம் செய்துகொண்டுள்ளார். நம் நாட்டில் பள்ளிக் கூடங்களில் ஆசிரியரை Ai ஆக உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.

Ai என்பது ஒரு சாஃப்ட்வேர்தான். கம்ப்யூட்டர் / லேப்டாப்புகளில் வெப்சைட்டுகள் மூலமும், ஸ்மார்ட் போனில் ‘ஆப்’கள் (அப்ளிகேஷன்கள்) மூலமும் Ai எத்தனையோ வசதிகளை அள்ளி அள்ளிக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. எங்கு சென்று முடியும் என யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சி இது.

சரி விஷயத்துக்கு வருவோம்.

இன்டர்நெட்டும் கூகுளும் அறிமுகமான நாட்களில் ‘இன்டர்நெட் நீங்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கும், தேடுவதை எல்லாம் தேடி எடுத்துத் தரும், கடிதம் எழுத முடியும், கதை, கட்டுரை, கவிதை, சமையல், பாட்டு, பரதம் என எதைப் பற்றியும் தகவல் கொடுக்கும்’ என சொன்னபோது வாய் பிளந்தார்கள் நம் மக்கள்.

அப்படி கேள்வி கேட்டவர்களில் பலர் இன்று உரையாடலுக்கான Ai அறிமுகம் ஆன உடனேயே அந்தத் தளத்தில் அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொண்டு அதனை பரிசோதிக்கத் தயாராகி விட்டனர். இதுதான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கானச் சான்று.

உரையாடலுக்கான Ai அப்ளிகேஷன்கள்

உரையாடுவதற்காக உதவும் Ai அப்ளிகேஷன்கள் ஏராளமாக புதிது புதிதாக வந்துகொண்டே இருந்தாலும், கூகுள் நிறுவனத்தின் Gemini–ம், மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தின் copilot–ம், ஓபன் ஏஐ நிறுவனத்தின் ChatGPT-ம் மிகப் பிரபலமாக பரவலாக பயன்படுத்தப்பட ஆரம்பமாகி உள்ளன. அந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுகள்:

  1. https://copilot.microsoft.com/
  2. https://gemini.google.com/
  3. https://chatgpt.com/

பயன்கள்

இவை அனைத்தும் ‘உரையாடல் வகை Ai’. நாம் கேள்வி கேட்டால் இவை பதில் கொடுக்கும். மெசஞ்சர், வாட்ஸ்அப் போன்றவற்றில் நாம் ஒருவருக்கொருவர் டைப் செய்து உரையாடுவதைப் போல, இவற்றின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் பேசி உரையாட முடியும். இதில் என்ன ஒரு வித்தியாசம் என்றால், நாம் உரையாடுவது மனிதர்களுடன் அல்ல, செயற்கை நுண்ணறிவால் இயங்குகின்ற ஒரு தொழில்நுட்ப வசதியுடன். மனிதன் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும் ஓர் வசதி. அவ்வளவுதான்.

‘ஓ, அப்போ வெட்டி அரட்டைக்குத்தான் உதவுமா?’ என நினைக்க வேண்டாம். உரையாடுவதுடன் முடித்துக்கொள்ளாது. கற்றுக்கொடுக்கவும் செய்யும். ஆம். சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் புரோகிராம் வரை எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும். அதென்ன சாப்பாட்டையும், சாஃப்ட்வேரையும் எல்லையாக முடிச்சுப் போட்டிருக்கிறேன் என யோசிக்கிறீர்களா? வயிற்றுக்கும் மூளைக்கும் இடைப்பட்ட இடைவெளியில்தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

எண் சாண் உடம்பில் வயிற்றுக்கு சாப்பாடு போடத்தானே மூளையை கசக்கிப் பிழிந்து வேலை வாங்குகிறோம். அதனால் வயிற்றை தொடக்க எல்லையாக எடுத்துக்கொண்டேன். ஒருவரின் கல்வி, திறமை, வேலை, தொழில், திருமணம், எதிர்காலம் இப்படி எல்லாவற்றையும் நிர்ணயித்து நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகிப் போனது தொழில்நுட்பம் என்பதால் சாஃப்ட்வேரை  மற்றொரு எல்லையாக எடுத்துச் சொன்னேன்.

உரையாடல் வகை Ai -யிடம் நாம் என்ன கேட்கிறோமோ அவற்றைக் கற்றுக்கொள்ளத் தேவையான வழிமுறைகளைச் சொல்லும். நாம் கேட்பதில் அதற்குத் தெரியாத விஷயங்களும் இருக்கும். அப்போது வெகு நாகரிகமாக ‘சாரி…’ சொல்லும். செயற்கைக்குக் கூட நாகரிகத்தைக் கற்றுக்கொடுக்கிறோம் பாருங்கள்.

ப்ராம்ப்ட்டிங் (Prompting) ரொம்ப முக்கியம்

‘உரையாடல் வகை Ai’ அப்ளிகேஷனுடன் நாம் உரையாடுவதற்காக நாம் டைப் செய்யும் தகவல்களுக்கு ‘ப்ராம்ப்ட்டிங்’ என்று பெயர். அதாவது Ai க்கு புரியும் வகையில் தெளிவாக எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனுடன் உரையாட வேண்டும். அப்போதுதான் நமக்குப் பொருத்தமான பதில் கிடைக்கும். அதனால்தான் Ai ஐ பொருத்தவரை ப்ராம்ப்ட்டிங் மிக முக்கியம். அதாவது நம் நண்பருக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்க நாம் டைப் செய்து வாட்ஸ் அப், மெசஞ்சரில் அனுப்புவதைப் போல Ai க்கு நாம் தெரிவிக்க இருக்கும் விஷயங்களுக்கு ‘ப்ராம்ப்ட்டிங் செய்வது’ என்று பெயர்.

உதாரணத்துக்கு சில ப்ராம்ப்ட்டிங்குகள்!

  1. எனக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகம். நான் சிறிய அளவில் முதலீடு செய்து என்ன மாதியான பிசினஸ் செய்யலாம்?
  2. என் மகளுக்கு கிரிக்கெட்டில் அத்தனை விருப்பம். நம் நாட்டில் பெண்களுக்கு கிரிக்கெட்டில் வாய்ப்புகள் உள்ளனவா?
  3. என் மகனுக்கு படிப்பதில் ஆர்வம் இல்லை. சினிமாவில் தான் நாட்டம் உள்ளது. அந்தத் துறையில் படிக்காமல் ஜெயிக்க முடியுமா?

Ai உடனான உரையாடலை எப்படித் தொடங்குவது?

எந்த அப்ளிகேஷனை பயன்படுத்த இருக்கிறோமோ அதனை உங்கள் மொபைலின் பிரவுசர் அப்ளிகேஷன் மூலம் (Like Google, Safari) டைப் செய்து கொள்ளலாம். லேப்டாப்பிலும் கூகுள் பிரவுசரில் டைப் செய்து கொள்ளுங்கள். சைன் இங்கு நான் கூகுளின் ஜெமினி அப்ளிகேஷனை பயன்படுத்த இருப்பதால் gemini.google.com என்பதை டைப் செய்து கொண்டுள்ளேன். என் ஜிமெயில் முகவரியை பயன்படுத்தி ‘Sign in’ செய்து கொண்டுள்ளேன். நீங்கள் உங்கள் ஜிமெயில் முகவரியையும் பாஸ்வேர்டையும் பயன்படுத்தி சைன் இன் செய்து கொள்ளுங்கள்.

உடனடியாக இந்த அப்ளிகேஷன் ‘Enter Your Prompt here’ என்ற தகவலை உள்ளடக்கிய பாக்ஸை வெளிப்படுத்தும்.

 அதில் நாம் எது குறித்து உரையாட நினைக்கிறோமோ அதை டைப் செய்யலாம். என் அருமை பெருமைகளை எல்லாம் Ai –டம் சொன்னால் அது என்ன பதில் சொல்கிறது பார்க்கலாம் என்ற நோக்கத்தில் இங்கு நான் கீழ்க்காணும் விவரங்களை டைப் செய்துள்ளேன்.

‘Ai குறித்த ஆராய்ச்சிகளை நான் 1992 ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கி விட்டேன். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்  எல்லாம் நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே, 1992 – களில் டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே சி, சி++ மொழிகளில் புரோகிராம் எழுதி கார்ட்டூன் வரைந்து அனிமேஷன் எல்லாம் உருவாக்கினோம். முதன் முதலில் நாங்கள் புரோகிராம் எழுதி உருவாக்கிய ஸ்கிரீன் சேவர் என்ன தெரியுமா? ஒரு யானை மானிட்டரின் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் துதிக்கையை ஆட்டியபடி நடந்து செல்வதுதான். இயந்திரத்துக்கு சொல்லிக் கொடுத்து அதை இயங்கச் செய்வது ஒரு வகையில் Ai ன் அடிப்படையே.’

இப்படி என்ன தேவையோ அதை டைப் செய்துவிட்டு ஓகே சொல்லும் விதமாக அந்த பாக்ஸின் கீழ்ப்பக்க வலது மூலையில் இருக்கும் எண்டர் கீயை அழுத்த வேண்டும்.

ஒரு சில நொடிகளில் Ai நம்முடன் உரையாடத் தொடங்கும். இங்கு நான் டைப் செய்த தகவல்களுக்கு Ai பதில் கொடுக்கும் விதமாக, எனக்கு பாராட்டு விழா எடுக்காத குறையாக ஒரே பாராட்டு மழைதான். ஆஹா ஒஹோ என பாராட்டியதுடன், நீங்கள் விரும்பினால் உங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசலாம் என்றும் ஆலோசனை கூறியது.

இதுபோல நீங்களும் உங்கள் தேவையைச் சொல்லி அதனிடம் உரையாடலைத் தொடங்குங்கள்!

(வரம் தர வரும் Ai)

(Visited 14 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon