புத்தக வடிவில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்!
கூடி வாழ்ந்தால் Ai நன்மை!
ஒரு தகவல் திரட்டுக்காக, பல வருடங்களுக்கு முன் நான் பொதிகையில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியை யி-டியூபில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த எங்கள் நிறுவனத்தின் வயதில் மூத்த அக்கவுன்டன்ட் ‘மேடம் இது ஏஐ-யில் உருவாக்கியதா?’ என்றாரே பார்க்கலாம். நான் வியந்தேன். ‘வீடியோவில் மிகவும் இளமையாக இருக்கிறீர்களே… அதனால் ஏஐயில் உருவாக்கி இருக்கிறீர்களோ என நினைத்தேன்…’ என்றார்.
இப்படி நிஜத்தைக் கூட ஏஐ ஆக இருக்குமோ என நம்மை சந்தேகிக்க வைக்கும் இந்த மாயத்தோற்றம் மனித குலத்தின் வரமா சாபமா? என பட்டிமன்றத் தலைப்பிலான கேள்வி ஒன்று நம்மை நோக்கி வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஏஐ தொழில்நுட்ப முன்னேற்றம் மக்களிடம் பரவலாகி இருப்பதற்கு திரைப்படங்களின் பங்களிப்பும் இருப்பதை மறுக்க முடியாது. இறந்த நடிகர்களை Ai மூலம் மீண்டும் சினிமாவில் கொண்டு வந்து நடிக்க வைக்கும் முயற்சிகள் எல்லாம் பிரமிப்புத் தானே?
சமீபத்தில் மறைந்த பவதாரிணியின் குரலை Ai நகலெடுத்து அவரே பாடுவதைப் போல இசை அமைத்து, அவர் குரலுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
ஓராண்டுக்கு முன் இறந்த பம்பா பாக்யாவையும், 27 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஷாகுல் ஹமீதையும் Ai தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏ.ஆர். ரஹ்மான் ‘லால் சலாம்’ படத்தில் ‘திமிறி எழுடா’ என்ற பாடலை பாட வைத்துள்ளார். ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தை Ai தொழில்நுட்பத்தின் மூலம் பத்து நிமிடங்கள் நடிக்க வைப்ப இருப்பதாக சொல்லி வருகிறார்கள்.
இப்படி கலைத் துறைக்கு மட்டும்தான் Ai சொந்தம் என நினைத்துவிட வேண்டாம். ஏஐ தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை ஆழமாகவும், அகலமாகவும் அதிவேகமாக ஆக்கிரமித்து கொண்டே வருகிறது.
கல்வி, மருத்துவம், விவசாயம், வங்கிகள், பங்கு சந்தை, வியாபாரிகள், ரேடியோ – டிவி – தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள், யு-டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள், பைக், கார், பஸ், ரயில், விமானம் போன்ற வாகனங்களில் என ஏஐ பெரும்பங்கு எடுக்க ஆரம்பித்து புது உலகை நமக்கு அறிமுகம் செய்யத் தொடங்கி உள்ளது.
ஏஐ என்பது ஒரு சாதனமாகவோ / கருவியாகவோ / இயந்திரமாகவோ உருவாக்கப்படலாம் அல்லது ஒரு தொழில்நுட்பமாக ஏற்கெனவே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சாதனங்களில் பொருத்தப்பட்டு இயக்கப்படலாம்.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், மனித உருவிலான ஒரு ரோபோ என்பது ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்குவதற்காகவே உருவாக்கப்படும் ஒரு ஏஐ சாதனம். அப்படி இல்லாமல், ஏற்கெனவே நம்மிடம் உள்ள ஒரு காரில் ஏஐ தொழில்நுட்பத்தை, விபத்தின்றி கார் ஓட்டுவதற்காகப் பொருத்திக் கொள்ளவும் செய்யலாம். ஆக, ஏஐ தொழில்நுட்பம் என்பது ஒரு வகையான சாஃப்ட்வேர் அவ்வளவுதான்.
வீட்டில் நமக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் ஆலோசனை தேவை என்றால் நம் வீட்டில் உள்ள தாத்தா பாட்டியை கேட்கலாம். அவர்களுக்குத் தெரிந்ததை சொல்வார்கள். இதை அப்படியே மாற்றி கற்பனை செய்து பாருங்கள். நமக்கான ஆலோசனைக்கு உலகில் உள்ள அத்தனை பாட்டி தாத்தாக்களிடமும் ஆலோசனையை கேட்டுப் பெற முடியும் என்றால் எப்படி இருக்கும். ஒரே விஷயத்துக்கு பல தீர்வுகள் கிடைக்கும் அல்லவா? நமக்கு எது பொருத்தமோ அதை தேர்ந்தெடுக்கலாம்.
இதைத்தான் இத்தனை நாட்களும் கூகுள் செய்து வந்தது. எது தேவையாக இருந்தாலும் கூகுள் செய்து பார்த்து தெரிந்து கொண்டோம்.
இந்தப் பணியைத்தன் Ai தொழில்நுட்பம் இன்னும் பிரமாதமாக மேம்படுத்தி செய்து தருகிறது. தேவையைச் சொன்னால் அதற்கான தீர்வை கொடுக்கிறது.
கூகுள் என்ன செய்கிறது? நாம் கேட்கின்ற விஷயங்களுக்கான தீர்வுகள் இன்டர்நெட்டில் எந்தெந்த வெப்சைட்டுகளில் எல்லாம் உள்ளனவோ அந்த வெப்சைட்டுகளை மட்டும் வெளிப்படுத்தும். அதில் நமக்கு தேவையானது எந்த வெப்சைட்டில் உள்ளதோ அதை பயன்படுத்தலாம்.
ஆனால் Ai வெறும் வெப்சைட்டுகளை வெளிப்படுத்திவிட்டு கடமை முடிந்தது என ஒதுங்கி விடாது. நாம் கேட்கின்ற விஷயத்தை உள் வாங்கிக் கொண்டு அது தன்னிடம் உள்ள தகவல் திரட்டுகளில் அலசி ஆராய்ந்து தானாகவே ஒரு புத்தம் புதிய தீர்வை கொடுக்கும்.
இதுதான் கூகுளுக்கும் ஏஐக்குமான வித்தியாசம்.
உதாரணத்துக்கு, மருத்துவத்துறையில் பயன்படும் ஏஐயில் உலகில் உள்ள கோடானுகோடி மருத்துவர்களின் அனுபவங்கள் தகவல்களாக சேகரிக்கப்பட்டிருக்கும். ஒரு மருத்துவர் பத்துப் பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்து பயிற்சி எடுத்தால் மட்டுமே கிடைக்கின்ற அனுபவங்களை எல்லாம் ஒரு மருத்துவ Ai அப்ளிகேஷன் மொபைலின் ஒரு ஸ்வைப்பில் பதிலாகக் கொடுத்துவிடும். காரணம் ஒரு மருத்துவ ஆப் என்பது உலகின் ஒட்டு மொத்த மருத்துவர்களின் அனுவங்களின் தகவல் தொகுப்பு.
‘இந்த மாதிரியான அறிகுறி, இப்படிப்பட்ட ஆரோக்கியக் கோளாறு, இத்தனை நாட்களாக பிரச்சனை உள்ளது’ என தரவுகளைக் கொடுதால் அடுத்த சில நொடிகளில் ‘இந்த நோயின் அறிகுறி இது, இந்த மாதிரியான மருந்துகளை பரிந்துரைக்கலாம், இத்தனை நாட்களில் குணம் தெரியும்’ என மருத்துவ Ai அப்ளிகேஷன் பதில் கொடுத்துவிடும்.
இதே நுணுக்கம் தான் எல்லா துறைகளிலும். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று சொல்வது Ai தொழில்நுட்பத்தில் நிரூபணமாகி உள்ளது.
நீங்கள் ஒவ்வொருவரும் இனி ‘நானும் Ai பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன்’ என பெருமையாக சொல்லிக் கொள்ள, ‘Ai – யிடம் நாம் தேவையானதை கேட்டுப் பெறுவது எப்படி?’ என்பதை செயல்முறை விளக்கத்துடன் அடுத்த மாதம் எழுதுகிறேன். லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையை கையில் வைத்துக் கொண்டு, லேப்டாப் அல்லது மொபைலுடன் காத்திருங்கள்.
(வரம் தர வரும் Ai)