சாப்பாட்டுக்கு உப்பு மட்டுமல்ல சூடும் அவசியம்!

சாப்பாட்டுக்கு உப்பு மட்டுமல்ல சூடும் அவசியம்!

நேற்று அம்மாவின் பிறந்த நாள். கோயிலுக்குச் சென்றுவிட்டு வேளச்சேரி சங்கீதாவில் மதிய உணவுக்காக சென்றிருந்தோம். இந்த ஓட்டலுக்கு நிறைய Franchise கொடுத்துள்ளார்கள் என தெரியும்.

சவுத் இந்தியன் மீல்ஸ் ஆர்டர் செய்திருந்தோம். வழக்கம்போல் ஒரு தட்டின் நடுவில் சப்பாத்தி வைத்து சுற்றி கறி, கூட்டு, சாம்பார், ரசம் இப்படி குட்டி குட்டி கிண்ணங்களில். ஒரு தனித் தட்டில் சாதம். அப்பளம். பருப்புப் பொடி, நெய், ஊறுகாய். இப்படி எதற்கும் குறைவில்லைதான்.

ஆனால், முக்கியமான ஒன்று விடுபட்டிருந்தது. சூடு. சாதம் வெதுவெதுப்பான சூட்டில் மற்றவை சாம்பார், ரசம் உட்பட எல்லாமே ஜில் என்று ஆறி இருந்தன.

சுவையும் முன்பிருந்ததைப் போல் இல்லை.

சரி, ரசத்தையாவது சூடாக எடுத்துவரச் சொல்லி சாப்பிடலாம் என்று ரசம் சூடாக எடுத்துவரச் சொன்னோம்.

அதுவும் சூடாக இல்லை. வெதுவெதுப்பாகவே இருந்தது.
ஏன் இப்படி? என்று கேட்டதற்கு நாங்கள் தட்டில் கிண்ணங்களில் எடுத்து வைத்து விடுவோம். அதனால் என்று ஏதோ வாய்க்குள்ளாக பேசிக் கொண்டு சப்ளையர்கள்.

நாங்கள் சென்ற போது மணி 12.30. மதியம் இந்த நேரத்துக்கே எல்லாம் ஆறி இருந்தால் 2 மணி 3 மணி என சாப்பிட வருபவர்களை நினைத்துப் பார்த்தேன்.

முன்பிருந்த சப்ளையர்கள் யாரும் இல்லை. புதிதாக இளைஞர்களை போட்டிருக்கிறார்கள். நல்ல 5 நட்சத்திர ஓட்டல் போல விளம்பரப் பலகைகளும், சப்ளையர்களின் உபசரிப்பும் இருந்தாலும் சாப்பாட்டில் சுவை மிஸ்ஸிங்.

சாப்பாட்டின் சுவை முன்னே பின்னே இருந்தாலும் சூடாக இருந்தால் சாப்பிட முடியும். ஆனால் சுவைக்கு அடிப்படையான சூடே இல்லை என்றால் எப்படி சாப்பிடுவது?

விலையைப் பற்றி நான் குறை கூறவில்லை. ஆனால் 270 ரூபாய் கொடுத்து சாப்பாடு சப்பிடுபவர்களுக்கு சூடான சாப்பாடு போடவில்லை என்றால் சாப்பாட்டுடன் கொடுக்கும் இனிப்பும், சாப்பாட்டுப் பின் கொடுக்கும் ஐஸ்க்ரீமும் சுவைக்கத்தான் செய்யுமா?

நான் கடைசியாக இந்த ஓட்டலில் சாப்பிட்டது டிசம்பர் 2019. பிறகு கொரோனா காலகட்டம். பெரும்பாலும் வெளி உணவுகளை தவிர்த்துவிட்டதால் எப்போதேனும் அவசிய தேவை என்றால் டிபன் சாப்பிட மட்டுமே ஓட்டல்களுக்கு செல்கின்றோம், அதுவும் வெளியூர் பிரயாணங்களில் தவிர்க்கவே முடியாத சூழல்களில்.

அப்போதுள்ள தரத்தைப் பற்றி சிலாகித்த என் பதிவு எத்தனை வரவேற்பை பெற்றுள்ளது என பாருங்களேன். (லிங்க் இணைத்துள்ளேன்)

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
பிப்ரவரி 9, 2025 | ஞாயிற்றுக்கிழமை

2019- ல் இதே ஓட்டல் குறித்து நான் சிலாகித்து எழுதியது!

இந்த நாள் இனிய நாள் – 355
December 20, 2019

பொதுவாகவே எந்த ஒரு நிர்வாகமானாலும் அந்த இடத்தில் உள்ள ஏதேனும் ஒரு நபர் நம்மை கவர்பவராக இருப்பார்.

அதற்கு அன்பு, மரியாதை கொடுத்து பழகும் விதம், நேர்மை, செய்கின்ற வேலையில் நேர்த்தி இவற்றுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு இப்படி ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.

பொதுவாக ஓட்டலில் சாப்பிடுவதில்லை என்றாலும் மதியம் அலுவலகம் திரும்பாமல் வெளியில் எங்கேனும் தொடர்ச்சியான மீட்டிங் இருக்கும் நாட்களில் ஓட்டலில் சாப்பிடுவது உண்டு.

அந்தவிதத்தில் சென்ற வாரத்தில் ஒருநாள் வழக்கமாக செல்லும் ஓட்டலில்தான் போஜனம் (வேளச்சேடி சங்கீதா – கீதம்). நான் அமர்ந்திருந்த டேபிளுக்கு வழக்கமாக வருகின்ற சப்ளையர்தான் வந்தார். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். வெள்ளை சீருடையில் கம்பீரமும், கனிவும் பொதிந்த புன்முறுவலுடன் ‘குட் ஆஃப்டர்னூன் மேடம்…’ என விஷ் செய்துவிட்டு மெனுகார்டை பவ்யமாக என் முன் வைத்தார்.

மீல்ஸ் வந்ததும் ‘சாதம், கூட்டு, காய் இவை எது தேவை என்றாலும் கேளுங்கள்… தருகிறோம்’ என்று அன்புடன் சொல்லிவிட்டு அடுத்த டேபிளில் வந்தமர்ந்த வயதான இரண்டு தாத்தாக்களை கவனிக்கச் சென்றுவிட்டார்.

அவர்களுக்குத் தேவையானதை தேர்ந்தெடுக்க அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை கவனித்தவர், உங்கள் உடல்நிலைக்கு இது பொருத்தமாக இருக்கும் என அவர் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொடுத்துவிட்டு அதைப்பற்றிப் பொறுமையாக விளக்கிக் கொண்டிருப்பதை பார்த்தவாறே நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

அவர்கள் ஆர்டர் செய்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு என் டேபிள் திரும்பி ‘என்ன காய்கறிகள் எல்லாம் அப்படியே இருக்கு. சாப்பிடுங்க… இன்னும் வேண்டுமென்றாலும் தருகிறோம்…’ என்று வீட்டில் அப்பா அம்மா பரிமாறுவதைப் போன்ற அன்புடன் சொல்லிவிட்டு சென்றார்.

இதற்குள் அந்த தாத்தாக்கள் தட்டில் கிண்ணங்களை வைத்துக்கொண்டு நடுவில் கஷ்டப்பட்டு சாதத்தைப் பிசைந்து சாப்பிடுவதைப் பார்த்தவர், அவர்கள் வசதியாக சாப்பிடுவதற்கு ஏற்ப அவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா தட்டை எடுத்துவந்து கொடுத்தார்.

என்னிடம் ‘பாயசமும் இருக்கு… சாப்பிட மறந்துடாதீங்க…’ என அன்புடன் சொல்லிவிட்டு நகர முற்பட்டவரிடம், ‘நான் உங்கள் சர்வீஸை பலமுறை கவனித்திருக்கிறேன்… இவ்வளவு பொறுமையாக கனிவாக அன்பாக ஒரு ஆணால் பரிமாற முடியுமா என வியந்திருக்கிறேன்…’ என சொன்னவுடன் அவர் முகம் சட்டென மலர்ந்தது.

இந்தப் பதிவு காம்கேர் புவனேஸ்வரி எழுதியது.

‘நம்ம வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி கவனிப்போமோ அப்படி கவனித்துக்கொள்கிறேன்… அதுவும் நாங்க தஞ்சாவூர் பக்கம்மா… அந்த ஊர் பக்க பழக்கம். விருந்தினர்களை கவனிப்பதற்கு எங்க ஊர் மக்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது…’ என்று பெருமையாகச் சொன்னவர் நான் ஆர்வமாக கேட்பதை அறிந்து மேலும் தொடர்ந்தார்.

இந்தப் பதிவு காம்கேர் புவனேஸ்வரி எழுதியது.

‘அப்பா போலீஸ் டிபார்ட்மெண்ட்… தஞ்சை, திருச்சி, கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, குத்தாலம்… இப்படி பல ஊர்களில் இருந்திருக்கிறோம்… என்கூட பிறந்த ஒரு அண்ணன், ஒரு தம்பி இரண்டு பேரும் போலீஸ் டிபார்ட்மெண்ட்தான்… நான்தான் இந்தத் துறையில் இப்படி…’ என சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி சற்றே வெட்கப்பட்டார்.

எல்லாற்றுக்கும் முத்தாய்ப்பாக மற்றுமொரு கருத்தையும் சொன்னார்.

‘ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் கோவமாக வரலாம், சந்தோஷமாக வரலாம் எது எப்படியோ பசியோடு வரவார்கள்… எனவே அவர்கள் மனம் கோணாமல் விருந்தாளிகளை கவனிப்பதுபோல கவனிக்கணும் என்று எங்க எம்.டியும் சொல்லி இருக்கிறார்…’

இந்த குணம்தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி என்னைக் கவர்ந்தது.

தான், தான் வளர்ந்த சூழல், ஊர், தன்னை வளர்த்த அப்பா அம்மா இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு தற்போது தான் பணிபுரிந்துவரும் இடத்தையும் விட்டுக்கொடுக்காமல் பேசும் இந்தப் பண்பு அவருடைய ஒட்டுமொத்த உன்னத குணத்தை உச்சாணி கொம்பில் தூக்கி நிறுத்துகிறது.

இந்தப் பதிவு காம்கேர் புவனேஸ்வரி எழுதியது.

இவ்வளவு தெரிந்துகொண்ட பின் பெயரை கேட்காமல் வரலாமா?

தங்கத் திருமேனி.

செயலைப் போலவே பெயரும் வித்தியாசமாகவே இருந்தது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

—***—

(Visited 575 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon