புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்!
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் Ai தொழில்நுட்பம்!
சமீபத்தில் Ai குறித்த என் நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அதற்கு நான் அளித்த பதிலையும் பகிர்ந்து கொண்டு இந்த மாத கட்டுரைக்குள் செல்கிறேன். அதிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு Ai ஒரு வரப்பிரசாதம் என்பது புரியும்.
கேள்வி: மாற்றுத்திறனாளிகளுக்கு Ai தொழில்நுட்பம் எந்த வகையில் உதவுகிறது. நீங்கள் அவர்களுக்காக ஏதேனும் Ai சாஃப்ட்வேர்கள் தயாரித்திருக்கிறீர்களா?
என் பதில்: நல்ல கேள்வி. எந்த ஒரு தொழில்நுட்பமும் பாலின பாகுபாடு, பொருளாதாரம் மற்றும் இன்னபிற ஏற்றத்தாழ்வுகள் இன்றி பரவலாக சமுதாயத்தின் எல்லா மக்களுக்கும் சென்றடையும்போதுதான் அது முழுமையான அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என பொருள். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவும் வகையில் அந்தத் தொழில்நுட்பம் அமைந்துவிட்டால் அது மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். அந்த வகையில் Ai தொழில்நுட்பமும் பரவலாக எல்லா மக்களையும் சென்றடைந்துள்ளது. இன்னமும் வளர்ந்து வருகிறது.
எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பலவிதங்களில் உதவி வருகிறோம்.
2000 களிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திரையை படிக்க உதவும் ஜாஸ், என்.வி.டி.ஏ போன்ற திரையில் உள்ளதைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள் (Screen Reading Software) மூலம் அவர்கள் எம்.எஸ்.வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்ற சாஃப்ட்வேர்களை கற்றுப் பயன்படுத்தவும், PDF ஃபைல்களாக உள்ள புத்தகங்களை வாசிக்கவும், இன்டர்நெட்டில் இமெயில் அனுப்பவும், கூகுள் செய்து பார்க்கவும் கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறோம்.
இப்போதும் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்பக் கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம். பிறர் நடத்தும் கருத்தரங்குகளில் சிறப்பு அழைப்பாளராக சென்று தொழில்நுட்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இதற்காகவே, எங்கள் அப்பா (கிருஷ்ணமூர்த்தி) அம்மா (பத்மாவதி) பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறோம். அதன் மூலம் மாற்றுத் திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்புக்கு, வாழ்வாதாரத்துக்கு வெவ்வேறு வழிகளில் தொழில்நுட்பம் சார்ந்து தீர்வு கண்டுபிடித்து உதவுகிறோம். வருடா வருடம் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து வருகிறோம்.
குறிப்பாக பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்க்ரைப் உதவியுடன் தான் தேர்வெழுதுவார்கள். அவர்கள் வாயால் சொல்ல சொல்ல அவர்களுக்கு உதவி செய்ய வந்திருக்கும் ஸ்க்ரைபர்கள் அவர்கள் சொல்வதை டைப் செய்வார்கள். இதனால் அந்த மாற்றுத் திறனாளிகள் அடையும் மன உளைச்சல்கள் பற்றி அவர்களே சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒன்று நல்ல புத்திசாலியான ஸ்க்ரைபர்கள் கிடைத்தால் சுமாராக படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் நல்ல மதிப்பெண் பெறவும், குறைவான புத்திசாலித்தனத்துடன் உள்ள ஸ்க்ரைபர்கள் கிடைத்தால் நன்றாக படிக்கும் மாற்றித் திறனாளி மாணவர் குறைவான மதிப்பெண் பெறவும் வாய்ப்புகள் அதிகம். மேலும் சக மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களை ‘நீயெல்லாம் எங்கே படித்திருக்கப் போகிறாய், உன் ஸ்க்ரைபர் நல்ல அறிவாளியாக இருக்கப் போய்தான் நீ நல்ல மதிப்பெண் பெற்றுள்ளாய்’ என்பது போன்ற தரக் குறைவான வார்த்தைகளால் புண்படுத்துவார்களாம்.
இதுபோன்ற பிரச்சனைகளை எல்லாம் போக்குவதற்கு 2008 ஆம் ஆண்டிலேயே நாங்கள் திரையைப் படிக்கும் (Monitor Screen Reader) சாஃப்ட்வேர்களை உருவாக்கினோம். அதன் மூலம் பார்வையற்றவர்கள் தாங்களே கம்ப்யூட்டர் மானிட்டரில் வெளிப்படும் கேள்விகளை வாசிக்க வைத்து அவற்றை காதால் கேட்டு, அந்த கேள்விகளுக்கான பதில்களை தாங்களே வாயால் சொல்ல சொல்ல அந்த பதில்கள் கம்ப்யூட்டர் திரையில் தானாகவே (டைப் செய்யாமல்) வெளிப்படுமாறு செய்யும் ‘விசியோ எக்ஸாம்’ (Visio Exam) என்ற சாஃப்ட்வேரை உருவாக்கிக் கொடுத்தோம்.
இந்த சாஃப்ட்வேர்களை எல்லாம் இன்று Ai தொழில்நுட்பத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு பெருமளவில் உதவி செய்யும் வகையில் மாற்றி அமைத்துள்ளோம்.
பார்வையற்றவர்களுக்கு மட்டுமல்ல இன்னபிற மாற்றுத் திறனாளிகளுக்கும் Ai தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
வாய் பேச முடியாதவர்களுக்கு உதவும் Ai
மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பமும் Ai மூலம் சாத்தியமாகிவிட்டது.
முதன் முயற்சியாக, வாய் பேச முடியாதவர்களுக்கு அவர்கள் மூளையில் சில பகுதிகளில் இம்பிளான்ட் பொருத்தப்பட்டு, அவர்கள் சொல்ல நினைப்பது வார்த்தையாகவோ அல்லது வாக்கியமாகவோ டைப் ஆகும் அம்சத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
மேலும், தூங்கும்போது கனவுகளை ரெகார்ட் செய்யும் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியினால், Ai பயன்படுத்தி மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் ஒருவரது எண்ணங்களையும் சிந்தனைகளையும் எளிதாக டீகோட் செய்து, மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நாம் நிம்மதியாக வாழ்வதற்கு இரண்டு விஷயங்கள் உதவுகின்றன. ஒன்று நாம் இறக்கும் நாளை தெரிந்து கொள்ள முடியாதது, இரண்டாவது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாதது.
அப்படி இருக்கும்போது, மற்றவர்களின் மனதில் உள்ளதை நாம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெரிந்து கொள்வது ஆபத்தலாவா என பயப்பட வேண்டாம்.
மூளையை Ai ஸ்கேன் செய்வதற்கு இமேஜிங் ஸ்கேனரைப் பயன்படுத்துவார்கள். அந்த ஸ்கேனரை மூளையின் செயல்பாடுகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். அதன் பின்னர்தான் ஸ்கேன் செய்ய முடியும். அதனால், சம்மந்தப்பட்டவரின் முழு சம்மதம் இல்லாமல் ஸ்கேன் செய்ய முடியாது.
Ai தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை கைகால்கள்!
Ai தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை கைகால்கள் அந்த உறுப்புகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. செயற்கை கைகால்களில் பொருத்தப்பட்டிருக்கும் Ai தொழில்நுட்பத்துடன் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் செல்ல வேண்டிய பாதையை வாயால் சொல்லிக் கொண்டே வந்தால் அவை தானாகவே அந்த திசையில் நிஜமான கால்கள் மூட்டுகளை அசைத்து பாதத்தை திருப்பி நடப்பதைப் போலவே நடக்க ஆரம்பிக்கும். போலவே கைகளில் பொருத்தப்பட்டிருக்கும் Ai தொழில்நுட்பத்திடம் பேசினாலும் அவை நாம் என்ன சொல்கிறோமோ அவற்றை செய்யும் திறன் வாய்ந்ததாக உள்ளது. மேலும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கவும் கூட அவற்றில் பொருத்தப்பட்ட Ai தொழில்நுட்பம் உதவி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை நம் நாட்டிலும் அமல்படுத்தப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.
காது கேட்கவும் முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் Ai
காது கேட்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தப் பிரச்சனையை வேறுவிதமாக கையாள Ai தொழில்நுட்பம் வழிவகை செய்துள்ளது.
சப்தங்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்தும் விதமாக புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க ஏற்பாடுகளும், ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.
காது கேட்காதவர்களுக்கு அவர்கள் கைகளில் உள்ள மானிட்டருடன் கூடிய டிஜிட்டல் சாதனத்தில் அவர்களைச் சுற்றி நடக்கும் அல்லது அருகாமையில் வருகின்ற வாகனங்கள் இவற்றைப் பற்றிய செய்திகளை அந்த வாகனங்கள் ஏற்படுத்தும் சப்தத்தை வைத்தோ அல்லது அந்த வாகனம் அவர்களுக்கு அருகாமையில் வருகிறது என்பது போன்ற செய்திகளை உண்டாகும் சப்தங்களை எழுத்துவடிவில் வெளிப்படுத்தினால் அவர்களாலும் பாதுகாப்பாக பொதுவெளியில் இயங்க முடியும் அல்லவா? இதற்கு செயற்கை தொழில் நுட்பம் பெரிய அளவில் உதவி செய்ய வருகிறது.
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் நேரம் மாற்றுத் திறனாளிகளுக்கான Ai சாதனங்களும், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களும் நம் நாட்டிலும் பரவலாக்கப்பட ஆரம்பித்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
Ai தொழில்நுட்பம் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைவதற்கு அதற்கான தொழில்நுட்ப வசதிகளும், அவரவர் மொழியில் பயன்படுத்தும் நுட்பமும், அவற்றைப் பயன்படுத்த செலவிடும் கட்டணமும், விலையும் மிக மிக முக்கியக் காரணம். விரைவில் அத்தனையும் சாத்தியப்படும்.
கனவு(கள்) மெய்ப்படட்டும்!
(வரம் தர வரும் Ai)