#USA: பல்கலைக்கழக பாஸ்டன்! (மே 10, 2025)

பல்கலைக்கழக பாஸ்டன்!

#usatrip2025_ckb-7

அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்துக்கு வேறு பெயர் கொடுக்கலாம் என்றால் பல்கலைக்கழக நகரம் அல்லது கல்லூரி நகரம் என்று கொடுக்கலாம்.

ஏனெனில், நகரமே புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களாலும், கல்லூரிகளாலும் நிரம்பி வழிந்தது.

பாஸ்டன் பல்கலைக்கழகம், பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக், ஹார்வேர்ட் பல்கலைக்கழகம், எம்.ஐ.டி, நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் என பிரமாண்டமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் நிறைந்து, எங்கு திரும்பினாலும் மாணவர் கூட்டம். சூழல் நம்மையும் கல்லூரி காலத்துக்கே கொண்டு சென்றது.

என் சகோதரியின் மகன் இசையில் மேஜர் எடுத்து படித்து முடித்துள்ளார். நானும் என் பெற்றோரும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தோம்.

பாஸ்டன் நகரத்தின் சாலைகள் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம். இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து மாணவர்கள் பாஸ்டன் நகரத்தில் கல்வி பயில வந்திருப்பது அவரவர்களின் நடை, உடை, பாவனை, மொழி இவை பறைசாற்றின.

யார் சொன்னது அமெரிக்கர்களுக்கு பாசம் நேசம் எல்லாம் நம் அளவுக்கு இல்லை என? அங்கு வந்திருந்த அமெரிக்கப் பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுடன் தோளுக்கு தோளாய் நின்று ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பிள்ளைகளை உற்சாகப்படுத்தி, புகைப்படம் எடுத்துக் கொண்டு, எதிர்படும் நம்மையும் நம் உடன் வரும் நம் வீட்டு பிள்ளைகளையும் வாழ்த்திச் சென்று கொண்டே இருக்கிறார்கள், நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் கல்லூரிக்கு வெளியேயும் சாலைகளில் கருப்பு கவுனுடன் உலா வந்தார்கள். அவரவர்கள் நண்பர்களுடனும், பெற்றோருடனும், உற்றார் உறவினருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். ஆனால் அவர்களின் கொண்டாட்டம் எதுவுமே எல்லை மீறவில்லை. அதுதான் எனக்கு ஆச்சர்யம்.

எனக்கு என்னவோ நான் சந்தித்தவரை அனைத்து மாணவர்களுமே அமைதியாக, ஆனந்தமாக, யாரைப் பார்த்தும் யாரும் பொறாமைப் படாதவர்களாக, நண்பர்களுக்கு உதவுபவர்களாய், பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் மதிப்பு கொடுப்பவர்களாய் இருப்பவர்களாகவே தோன்றியது.

அங்குள்ள புகழ்பெற்ற கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அனுமதி பெற்று உள்ளே சென்று பார்வையிட்டோம்.

நாமும் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போதைக்கு, புகைப்படங்கள் மட்டும் எடுத்து வந்தேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 10, 2025 | சனிக்கிழமை

(Visited 2,006 times, 8 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon