இராணுவப் பயிற்சி!
#usatrip2025_ckb-8
பாஸ்டனில், தங்கள் மகளுடைய பட்டமளிப்பு விழாவிற்காக சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன். அவருடைய மகன் +2 முடித்திருந்தார். பால் வடியும் முகத்துடன் சமர்த்தாக அப்பா அம்மாவுடன் நின்று கொண்டிருந்தவனிடம் நானாகத்தான் பேச்சு கொடுத்தேன். தமிழ் அழகாக பேசினான். தேவையான இடத்தில் மட்டும் ஆங்கிலம்.
அவன் முகம் ஏதோ ஒரு நடிகனை நினைவூட்டியபடியே இருந்தது. ஆனால் பிடிபடவில்லை. அதை மனதின் ஓரத்துக்கு தள்ளிவிட்டு பேசினேன்.
Me: கல்லூரியில் என்ன டிகிரி சேர்ந்துள்ளாய்?
He: இன்னும் சேரலை ஆண்ட்டி…
Me: ஏன்?
இதற்கு அவன் சொன்ன பதிலில் சிங்கப்பூர் மீதான மதிப்பு இன்னும் கூடியது.
He: இராணுவப் பயிற்சி இரண்டு வருடம் முடித்த பிறகுதான் கல்லூரியில் சேர முடியும்…
Me: அப்படியா? கட்டாயமா அல்லது உன் விருப்பமா?
He: சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களில், பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி சேருவதற்கு முன் இரண்டு வருடம் இராணுவப் பயிற்சியில் சேர வேண்டும். அப்போதுதான் கல்லூரியில் இடம் கிடைக்கும்.
Me: அட, சூப்பரா இருக்கே… ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தானே அந்தப் பயிற்சி?
He: ஆண்களுக்கு கட்டாயம், பெண்களுக்கு ஆப்ஷன்.
Me: அப்படியா… எப்படி பயிற்சி அளிக்கிறார்கள்?
He: இராணுவத்தில் எப்படி பயிற்சி அளிக்கிறார்களோ அப்படியே… துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல் இப்படி.
Me: வீட்டில் இருந்தே தினமும் செல்வாயா?
He: இல்லை ஆண்ட்டி… பயிற்சிக்காக தனி இடம் உள்ளது. அருகில் உள்ள காடுகளுக்கும் பிற இடங்களுக்கும் பயிற்சிக்காக அழைத்துச் செல்வார்கள். வேறு ஊர்களுக்குக் கூட செல்ல வேண்டி இருக்கும். வார நாட்கள் முழுவதும் பயிற்சி. சனி ஞாயிறு அன்று மட்டும் வீட்டுக்குச் செல்லலாம்.
Me: அப்போ, தங்குவதற்கு அறை எல்லாம் அவர்களே ஏற்பாடு செய்து கொடுப்பார்களா? அல்லது டெண்ட் போட்டு தங்குவீர்களா?
He: அறை எல்லாம் கிடையாது ஆண்ட்டி, இராணுவ வீரர்கள் எப்படி குழி தோண்டி பதுங்கி பாதுகாப்பாக தங்குவார்களோ அப்படி தங்க வைப்பார்கள். எப்போதேனும் பெரு மழை வந்தால் மட்டும் டெண்ட். அதுவும் சில நேரங்களில் மழை வெயில் என எல்லாவற்றுக்கும் எங்களை தயார் செய்வதால் நனைந்து கொண்டே கூட பயிற்சி எடுக்க வேண்டி இருக்கும்.
Me: சாப்பாடெல்லாம்?
He: இராணுவ வீரர்கள் எப்படி என்ன சாப்பிடுவார்களோ அப்படித்தான். விதவிதமான சுவையான சாப்பாடெல்லாம் கிடையாது.
Me: அப்படியா? சூப்பர்… உனக்கு இந்தப் பயிற்சி பிடித்திருக்கிறதா?
He: அவன் முகம் கொஞ்சமே கொஞ்சமாக சோகமாக மாறியது. மனதில் உள்ளதை மறைக்காமல் ‘ம்ஹும்…’ என்று பொருள்படும் வகையில் தலையை ஆட்டினான்.
Me: ஏன், இராணுவப் பயிற்சி நல்லது தானே, உடலுக்கும் மனதுக்கும் மிகப் பெரிய கம்பீரத்தைக் கொடுக்குமே?
He: பயிற்சியில் துப்பாக்கி சூடு, குண்டு எறிதல் எல்லாம் கொஞ்சம் பயமா இருக்கு..
Me: என் மனதில் உள்ளதை பட்டென வார்த்தை அலங்காரத்துக்காக வார்த்தைகளைத் தேடாமல் அப்படியே சொன்னேன். ‘நீ நல்ல பையனா இருக்கிறாய். அதனால் சண்டை, போர், துப்பாக்கி சூடு, குண்டெறிதல் இதெல்லாம் உனக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை. ஆனால் கெட்ட பையன்களுக்கு இந்தப் பயிற்சியினால் நல்ல மனப்பக்குவம் ஏற்படும் அல்லவா?’
He: அவன் முகத்தில் அத்தனை மலர்ச்சி. நான் சொன்னதை அமோதிக்கும் வகையில் ‘ஆமாம் ஆண்ட்டி, மெச்சூரிட்டி கிடைக்கும்’ என்றான்.
அதன் பிறகு அவன் பெற்றோருடன் சென்றுவிட நீண்ட நேரம் அவனுடனான உரையாடல் மட்டும் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
நல்ல பையன், கெட்ட பையன் என்ற வார்த்தைகளுக்கு பதிலாக வேறு பொருத்தமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் பேசி இருக்கலாமோ என சின்னதாக ஒரு வருத்தம் / யோசனை.
ஆனால், அந்த நேரத்துக்கு அவனுக்கு உற்சாகம் கொடுக்க வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்க முடியாமல் ‘நீ நல்ல பையனா இருக்கிறாய், கெட்ட பையன்களுக்கு இந்தப் பயிற்சி நல்லது’ என்ற கோணத்தில் பேசியது திரும்பத் திரும்ப ரீவைண்ட் ஆகிக் கொண்டே இருந்தது. மேலும் யோசித்துப் பேசுவதற்கு நேரமும் இல்லை. சட்டென அவன் பெற்றோருடன் கிளம்பி விட்டால் உரையாடல் தடைபட்டிருக்குமே? அதனால், வார்த்தைப் பிரயோகத்தில் தவறில்லை என எனக்கு ஆறுதல் சொன்னது என் மனம்.
இப்படியான யோசனையில் ‘ஏதோ ஒரு நடிகரை நினைவூட்டியது அவன் முகம். யாரென பிடிபடவில்லை’ என்று மனதில் ஓரத்துக்குத் தள்ளிய மற்றுமொரு கேள்விக்கான பதிலும் கிடைத்தது. ‘இளம் வயது மகேஷ் பாபு. தெலுங்கு நடிகர்.’
அவர்கள் என் சகோதரியின் குடும்ப நண்பர்கள் என்பதாலும், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலிலேயே தங்கி இருந்ததாலும் மீண்டும் அவர்களை சந்தித்தோம்.
அவனிடம் ‘நீ மகேஷ் பாபு சாயலில் இருக்கிறாய்’ என்றபோது சிரித்தபடி ‘தேங்க்ஸ் ஆண்ட்டி’ என்றான்.
அவனுடைய அக்கா ‘தம்பிக்கு உங்களை மிகவும் பிடித்துவிட்டது’ என்றாள்.
‘ஆஹா, அப்படியா… இருவருக்கும் வாழ்த்துகள்’.
எனக்கென்னவோ இனி அவன் இராணுவப் பயிற்சியை கூடுதலாக விரும்பி பங்கெடுப்பான் எனத் தோன்றியது.
குழந்தைகளுக்கு பெரிய பெரிய கவுன்சிலிங் எல்லாம் தேவையில்லை. அவர்கள் மனதுக்கு நெருக்கமான வார்த்தைகள் ஒன்றிரண்டு இருந்தாலே போதும். விழித்துக் கொள்வார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை பொருந்திவராது. அவனுக்கு ‘நல்ல பையன், கெட்ட பையன்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தால் நான் பேசியது எங்கோ ஒரு ஓரத்தில் அவன் மனதுக்கு இதமாக இருந்திருக்கலாம்.
குழந்தைகள் மட்டுமல்ல, வளர்ந்த நமக்கும் வார்த்தைகளால் மகிழும் பூஞ்சை (மென்மையான) மனம்தான். ஆனால் காதுகொடுத்து கேட்க நேரமில்லாமல் நாம்தான் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 18, 2025 | ஞாயிறு