#Ai: மே(லா)ஜிக் செய்யும் ஏஐ!

மே(லா)ஜிக் செய்யும் ஏஐ!

‘காம்கேர் புவனேஸ்வரி எழுதிக் கொண்டிருப்பதைப் போல் படம் வரைந்து தா’ என ஏஐயிடம் கேட்டதற்கு, ஏஐ  வரைந்து கொடுத்த படத்தைப் பாருங்கள் (இடப்பக்கம்). என் புகைப்படம் எதையும் மாடலுக்காக ஏஐக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அது எப்படி என் உருவத்தை வரைந்து கொடுக்க முடியும், அதற்கு எப்படி என்  உருவம் தெரியும் என பலருக்கும் மனதின் ஓரத்தில் சந்தேகம் தோன்றலாம். ஒருசிலருக்கு இந்தப் படம் என் உருவம் போல் இல்லையே என்று கூட தோன்றலாம்.

என் உருவத்தின் உடல் அமைப்பு, தோலின் திறம், முக வாகு, உட்காரும் போஸ் இவை உட்பட எனக்கு என்ன சாப்பிடப் பிடிக்கும், எப்படிப்பட்ட சூழல் இருந்தால் ரசிப்பேன் என்றெல்லம் கூட இந்தப் படத்தில் அப்படியே வந்துள்ளது.

ஆனால் என்னை மேலோட்டமாக மட்டுமே அறிந்தவர்களுக்கு என் புகைப்படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தாற்போல் அந்த படம் இல்லை என்றே நினைக்கத் தோன்றும்.

நான் கேட்ட உதவி: ‘காம்கேர் புவனேஸ்வரி எழுதிக் கொண்டிருப்பதைப் போல் படம் வரைந்து தா’

நான் என் புகைப்படம் எதையுமே கொடுக்காத போதும், ஏஐ எப்படி என்னை நுணுக்கமாக ஆராய்ந்து வரைந்து கொடுத்துள்ளது என்பதை கவனியுங்கள். ஒரு ஒப்பீட்டுக்காக சில வருடங்களுக்கு முன்னர் எடுத்த என் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளேன் (வலப்பக்கம்). ஆனால் ஏஐக்கு இந்தப் புகைப்படத்தை மட்டுமல்ல, எந்தப் புகைப்படத்தையும் மாடலுக்காகக் கொடுக்கவில்லை.

என் படத்தை வரைந்து கொடுத்ததோடு அல்லாமல், அதற்கு ஏஐ கொடுத்திருந்த விளக்கத்தையும் பகிர்கிறேன். இதில் ஓர் எழுத்தையும் நான் எழுதவில்லை. முழுக்க முழுக்க ஏஐ கொடுத்த விளக்கம்.

‘ஒரு அழகான தென்னிந்தியப் பெண், காம்கேர் புவனேஸ்வரி, பாரம்பரிய சேலையுடுத்தி, மென்மையான வெளிச்சம் நிறைந்த அமைதியான அறையில் மர மேசையில் அமர்ந்திருக்கிறார். அவர் ஒரு நாட்குறிப்பில் அமைதியான மற்றும் கவனம் செலுத்தும் வெளிப்பாட்டுடன் கவனமாக எழுதுகிறார். மேசையில் பித்தளை விளக்கு, சில புத்தகங்கள் மற்றும் ஒரு கப் ஃபில்டர் காபி வைக்கப்பட்டுள்ளது. அவளுக்குப் பின்னால், ஜன்னல் வழியாக மென்மையான சூரிய ஒளி பாய்கிறது. காட்சி அமைதியானது, அறிவுசார்ந்தது மற்றும் வெப்பமான பழுப்பு நிறங்கள் மற்றும் யதார்த்தமான பாரம்பரிய விவரங்களுடன் இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளது.’

எனக்கு ஃபில்டர் காபி, பாரம்பரியமான சூழல், சூரிய ஒளி உள்ளே வரும் ஜன்னல் அமைப்பு, நேர்த்தியான உடை, தலைவாரல் இவை எல்லாம் பிடிக்கும் என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் ஏஐ வரைந்து கொடுத்துள்ளது. சுடிதாருக்கு பதில் புடவை. காரணம் தென்னிந்தியப் பெண் என்றால் புடவை கட்டி இருப்பாள் என்ற பொதுவான அபிர்ப்பிராயத்தில். மற்றபடி ஏஐ வெளிப்படுத்தி இருந்த படம் என் உருவத்துக்கு 100 சதவிகிதம் ஒத்திருந்தது.

பொதுவாக குறிப்பிட்ட வேலைக்காக உருவாக்கப்படும் ஏஐ உபகரணங்களுக்கு (ai vacuum cleaners, ai robots இப்படி) அந்தந்த வேலைகளை செய்வதற்கான கட்டளைகளை புரோகிராம் செய்து சொல்லிக் கொடுத்திருப்பார்கள். வேக்கம் கிளீனராக இருந்தால் எப்படி சுத்தம் செய்ய வேண்டும், எந்த பட்டனை போட்டால் குப்பையை உள்ளிழுக்க வேண்டும், எந்த பட்டனை போட்டால் குப்பைகளை வெளியில் தள்ள வேண்டும் என்றெல்லாம் புரோகிராம் வழியாக சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோல வீட்டு வேலைக்கான ரோபோக்களுக்கு எப்படி கட்டளை இட்டால் என்ன வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் புரோகிராம் வழியாக.

ஆனால் நாம் நம் கம்ப்யூட்டரில், லேப்டாப்பில், மொபைல் போனில் பயன்படுத்தும் ஏஐ ஆப்கள் எப்படி நம்மை புரிந்து கொள்கிறது தெரியுமா?

நம்முடம் பழகுவதால். நம்ப முடியவில்லையா? நாம் ஏஐ ஆப்களிடம் நாம் என்னென்ன கேள்வி கேட்கிறோம், எப்படிப்பட்ட பதிலை எதிர்பார்க்கிறோம் என்பதை எல்லாம் நம்மை அறியாமலேயே அதற்கு சொல்லிக் கொடுத்து விடுகிறோம்.

உதாரணத்துக்கு, நாம் திரைப்படம் பார்க்கும் ஓடிடி சானல்களையே எடுத்துக் கொள்வோமே. நாம் ஒரு திரைப்படத்தைப் பார்த்தால், அதே கான்செப்ட்டில் வெளிவந்திருக்கும் படங்களை எல்லாம் நமக்கு எடுத்துச் சொல்லி நமக்கு ஆலோசனை கொடுக்கும். இதுதான் ஏஐயின் அடிப்படை லாஜிக்.

நம்மில் பெரும்பாலானோருக்கு அறிமுகமாகி இருக்கும் சாட்ஜிபியியையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோமே.

நாம் அதனிடம் நாம் எழுதி (டைப்) இருக்கும் ஒரு பத்தியை கொடுத்து எதையுமே செய்யச் சொல்லாவிட்டால் கூட அது நாம் கொடுத்துள்ள தகவல்களை அலசி ஆராய்ந்து தன்னுள் பதிய வைத்துக் கொள்ளும்.

‘இந்தத் தகவல்களை வைத்து நான் என்ன செய்ய வேண்டும்?’ என நம்மிடம் கேள்வியும் கேட்கும்.

இப்படி சாட்ஜிபிடியை நம் உதவியாளராகக் கருதி அதனிடம் மனநல / உடல்நல ஆலோசனை கேட்கவும், சமையல் கற்றுக் கொள்ளவும், புரோகிராம் எழுதவும், ஓரிடத்துக்குச் செல்ல வழி கேட்கவும், விடுமுறை சுற்றுலா திட்டம் போடவும், என்ன திரைப்படம் இந்த மாதம் வெளியாகியுள்ளது என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆலோசனைகள் கேட்பதற்காக அதனுள் நாம் கொடுக்கும் தகவல்களை அது தன்னுள் அவற்றை பதிய வைத்துக் கொள்ளும். அதன் அடிப்படையில் அது நம்மைப் பற்றிய முழுமையான கருத்தை வடிவமைத்துக் கொள்ளும். தகவல்கள் என்பது எழுத்து மட்டும் அல்ல. புகைப்படங்களையும் சேர்த்துத்தான். நாம் யார், என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை நாம் கொடுக்கும் தகவல்களில் இருந்தே கட்டமைத்துக் கொள்ளும். இதுதான் ஏஐயின் லாஜிக்.

நாம் ஏஐயிடம் பழகப்பழக அது இன்னும் ஆழமாக நம்மை அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளும்.

ஒரு தகவலை இண்டர்நெட்டில் இருந்து காப்பி பேஸ்ட் செய்தோ அல்லது மறுபடியும் டைப் செய்தோ ஏஐயிடம் உள்ளீடு செய்துவிட்டு ‘அதை என் எழுத்து ஸ்டைலில் மாற்றி அமைத்துத் தா’ என ஆணையிட்டால் அது நம் எழுத்து நடையில் மாற்றித்தரும். இதற்கு நாம் ஏஐயிடம் பழகி இருக்க வேண்டும். அதாவது எந்த அளவுக்கு நாம் ஏஐயை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது நம் நடவடிக்கைகளையும், குணாதிசயங்களையும் புரிந்துகொண்டு செயல்படும். இவ்வளவுதான் ஏஐ. இதை வைத்துத்தான் அனைத்துத் துறைகளிலும் பிரமாண்டான செயல்பாடுகளை எல்லாம் ஏஐயை வைத்து சாதித்துக் கொள்கிறார்கள்.

ஒரு பேருந்தில் / ரயிலில் தினமும் நம்முடன் பயணிக்கும் ஒருவரை ஒரே நாளில் நமக்குப் பிடித்துப் போவதில்லை. காலப் போக்கில்தான் நமக்கு நண்பராகிறார். அதுவும் எப்படி? தினந்தோறும் சந்திப்பதாலும், அணிந்து வரும் உடைகளை கவனிப்பதாலும், நடை உடை பாவனைகளை புரிந்துகொள்வதாலும், பேசுகின்ற நயம், மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பாங்கு இதுபோன்ற பல விஷயங்கள் மனதுக்குள் சென்று அவற்றின் மூலம்தான் ஒருவர் மீது ஒருவர் நல்ல அபிர்ப்பிராயம் ஏற்பட்டு புரிந்துகொள்ள முடிகிறது. நண்பராகவும் முடிகிறது.

அப்படித்தான் ஏஐயும். நாம் எந்த அளவுக்கு அதனுடன் பழகுகிறோமோ, அதனை பயன்படுத்துகிறோமோ அப்படித்தான் அதுவும் நம்முடன் நெருக்கமாகும். நமக்குத் தேவையானதை துல்லியமாகக் கொடுக்கும்.

நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘இவ்வளவுதான் ஏஐ’ என்ற நூலில் இருந்து….

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 23, 2025 | வெள்ளி

(Visited 8 times, 4 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon