ஆணுக்கும் புகுந்த வீடு இருக்கணும்!
கோடிகளில் பிரம்மாண்டமாக திருமணம்…
வரதட்சணையாக 300 சவரன் நகை …
70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்…
கல்யாண செலவு எத்தனை கோடி அல்லது லட்சமானால் தான் என்ன? பிரச்சனையை மட்டுமே இந்தப் பதிவில் பேசி உள்ளேன். செலவே இல்லாமல் கோயிலில் நடைபெற்றிருக்கும் கல்யாணமானாலும் என் கருத்து இந்தப் பதிவில் சொல்லி இருப்பதுதான். எனவே கல்யாண செலவில், நகை நட்டு விஷயத்தில் நான் சொல்லி இருக்கும் கணக்கு முன்னே பின்னே இருக்கலாம். அதைவிட்டு விடுங்கள். இது ஒரு உதாரணத்துக்காக எடுத்துக் கொண்ட கணக்கு.
இப்படி பல கோடிகள் கொடுத்து ஒரு பொருளை (மாப்பிள்ளையைத்தான் சொல்கிறேன்) வாங்கியபின் பொருளை வாங்கியவர்கள்தானே அந்தப் பொருளை தன்னுடன் எடுத்து வர வேண்டும்?
அந்தப் பொருள் உள்ள இடத்துக்கு ஏன் வாங்கியவர் செல்ல வேண்டும் (மணப்பெண்ணைத்தான் சொல்கிறேன்)
உதாரணத்துக்கு சகல வசதிகள் கொண்ட பல இலட்சம் உள்ள காரை காசு கொடுத்து நாம் வாங்கினால் அந்தக் காரை நாம் தானே நம் இருப்பிடத்துக்கு எடுத்துக் கொண்டு வர வேண்டும். அதுதானே நிதர்சனம். அந்த காரை வாங்கிய ஷோரூமிலேயே நாம் குடித்தனம் இருப்போமா? சொல்லுங்கள்.
இந்தக் கேள்வியை நானும் என் 15 வயதில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் இன்றுவரை பதில் இல்லை.
முன்பெல்லாம் பெண்களுக்கு இந்த காலம் அளவுக்கு படிப்பு இல்லை. சம்பாத்தியம் இல்லை. அதனால் திருமணம் ஆனதும் சம்பாதிக்கும் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். இப்போதுதான் படிப்பு, வேலை, தன்னம்பிக்கை என பெண்கள் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் பெண்ணை அவள் பிறந்த வீட்டில் இருந்து வேறோடு பிடுங்கி ஆண் வீட்டிற்கு அனுப்புவதெல்லாம் தீராத மனச்சிக்கல்தான். பெண்களை கேட்டுப் பாருங்கள். அவர்கள் மனதோடு பேசிப் பாருங்கள். இதுபோன்ற துயரங்களை கொட்டுவார்கள்.
எப்போது திருமணம் செய்து வைத்தவுடன் ஆணையும் பெண்ணையும் தனியாக ஒரு வீட்டில் வாழ வைத்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை தனித்துவமாக வாழ வழிவகை செய்கிறார்களோ அப்போதுதான் வரதட்சனை போன்ற பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளும், உளவியல் சிக்கல்களும் பெருமளவில் குறையும்.
நான் தனிக் குடித்தனம் செல்லச் சொல்லவில்லை. யாரையும் யாரை விட்டும் பிரிக்கவும் சொல்லவில்லை. பெண்ணும் பெற்றோரை விட்டு வரட்டும், ஆணும் தன் பெற்றோரை விட்டு வரட்டும். இருவரும் சேர்ந்து புதிதாக ஒரு வாழ்க்கையை தொடங்கட்டும்.
பெண்ணுக்கு மட்டும் புகுந்த வீடு என்ற சம்பிரதாயம். ஆணுக்கு ஒரே வீடு. கல்யாணத்துக்கு முன்னும் பின்னும் உளவியல் ரீதியாக எதுவும் மாறப்போவதில்லை. எனவே தான் சொல்கிறேன், திருமணம் முடிந்ததும் இருவருக்கும் ஒரு வீடு. யாரும் தான் பிறந்து வளர்ந்த வீட்டில் இருந்து இணையின் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக ’புக’ வேண்டாம். இருவரும் தத்தம் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு புது வாழ்க்கையை புது வீட்டில் அமோகமாக வாழ ஆரம்பிக்கட்டும். இதுதான் நான் சொல்ல வரும் தனிக்குடித்தனம் கான்செப்ட்.
காலம் காலமாக பெண்கள் தானே தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து கணவன் வீட்டில் வாழ்கிறார்கள். 20 வயது வரை வாழ்ந்த வாழ்க்கையை அடியோடு மறந்துவிட்டு புதிதாக ‘புகுந்த வீட்டில்’ வாழ ஆரம்பிக்கிறார்கள். தனிக்குடித்தனம் இருந்தாலும் அவர்களுக்கு ஆணின் வீடு புகுந்த வீடுதானே. ஆண்களுக்கு அந்த கஷ்டமோ மனத்துயரமோ ஒரு போதும் கிடையாது என்பதால் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கித்தான் இருந்தது. இன்றும் இருக்கிறது.
‘என்னங்க மேடம்…. புரியாமல் பேசுகிறீங்க… இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு பெண்ணே கிடைப்பதில்லை. பெண்கள் நிறைய டிமாண்ட் செய்கிறார்கள்…’ என கொடி பிடித்துக் கொண்டு வர வேண்டாம். அது தனிக் கதை. தனி பிரச்சனை. தனியாக விவாதம் செய்ய வேண்டும். இந்தப் பிரச்சனையோடு முடிச்சுப் போடக் கூடாது.
மேலும் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாப்பிள்ளைகளை கையாள்வது, மனரீதியாக பாதிக்கப்பட்ட மணப்பெண்களை கையாள்வது இதெல்லாம் தனிக்கதை. வேறு ட்ராக். எனவே அதையும் இன்று இந்தப் பதிவில் நான் சொல்லி இருக்கும் கருத்துக்களோடு முடிச்சுப் போட வேண்டாம். அந்தப் பிரச்சனைகளை தீர்க்க நான் சொல்லும் கருத்துக்கள் தீர்வாகாது.
இன்று பெண்கள் படிப்பு, சம்பாத்தியம், தைரியம், தன்னம்பிக்கை என அசத்துகிறார்கள். இன்றும் ஏன் அந்த பழைய சிஸ்டத்தையே வைத்துக் கொண்டு தொங்க வேண்டும்?
திருமணம் ஆகிவிட்டால் அந்த தம்பதி தனியாக புதுவாழ்க்கையை வாழ ஆரம்பிக்கட்டுமே. கஷ்டமோ நஷ்டமோ அவர்களாகவே புரிந்துகொண்டு வாழத் தொடங்கட்டுமே. தேவைப்படும்போது ஆணின் பெற்றோரோ அல்லது பெண்ணின் பெற்றோரோ அந்த புதுமண தம்பதியின் வீட்டிற்கு வந்து தங்கி உதவிகள் செய்யட்டும்.
தன் வீட்டில் ஒரு பெண்ணை வாழவைக்கும்போது ஆணுக்கும் ஆணின் பெற்றோருக்கும் ஆதிக்கம் இருக்கும்தான், என்னதான் தன் சொந்த மகளைப் போல என வாய் வார்த்தைக்குச் சொன்னாலும். இதுவே, இளம் தம்பதியின் வீட்டிற்கு அவர்களின் பெற்றோர் சென்று தங்கும்போது அத்தனை ஆதிக்கம் செலுத்த முடியாது. இதுவும் நிதர்சனமான உண்மை.
எனக்குத் தெரிந்து ஒரு இளம் தம்பதியை தனிக்குடித்தனம் வைத்தார்கள். அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் பெண்ணின் தாயாரும், பையனின் தாயாரும் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மாற்றி மாறி அந்த இளம் தம்பதி வீட்டிற்கு காலை 9 மணிக்குச் சென்று மாலை 6 மணிக்கு தங்கள் வீட்டிற்கு செல்கிறார்கள்.
இதுகூட நல்ல சிஸ்டமாகத்தானே இருக்கிறது. யாரும் யாரையும் கசக்கிப் பிழிந்து வாழ வேண்டாம்.
பெற்றோருடன் வாழ்வதை நான் தவறு என்று சொல்லவில்லை. யாருடைய பெற்றோருடன் என்பதுதான் என் கேள்வி.
பெண்ணின் பெற்றோருடன் பையன் வந்து வாழத்தொடங்கினால் ‘வீட்டோடு மாப்பிள்ளை’ பட்டம். இருக்கட்டுமே. இத்தனை நாட்கள் ’வீட்டோடு மருமகளாக’ இருந்தவர்கள்தானே பெண்கள்.
நான் சொல்ல வருவது Feminism அல்ல. ஆண்களுக்கு எதிரான கோஷமும் அல்ல. என் எழுத்தை தொடர்ச்சியாக வாசிக்கும் அனைவருக்கும் தெரியும் நியாயம் எங்கிருக்கிறதோ, நியாயமான செயல்பாடுகள் எங்கிருக்கிறதோ அதை நிச்சயம் ஆதிரிப்பதே என் இயல்பு.
திருமணம் என்பது இரண்டாம்பட்சம். கல்வி, பணி / தொழில் செய்து சுயமாக சம்பாதித்தல், தன்னம்பிக்கை இதற்கெல்லாம் அடுத்ததுதான் திருமணம். அதுவும் சரியாக வந்தால்தான். இல்லாவிட்டால் அதையும் தூக்கி சுமக்கத் தேவையில்லை.
அதுவும் என்னளவில் செயல்படுத்திய நியாயங்களைத்தான் பொதுவெளியில் பொதுமைப்படுத்தி குரல் கொடுக்கிறேன்.
எதிர்காலத்தில் ‘ரிதன்யாக்கள்’ இல்லாமல் இருக்க இவைதான் ஒரே தீர்வு.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூலை 3, 2025