தினமலர் நாளிதழிலேயே வாசிக்க!
எந்த வகுப்புக்கு என்ன பாடம்?
‘ஹேய் கூகுள்… நாளைக்கு மழை வருமா?’ என்று செல்போனைக் கையில் வைத்துக்கொண்டு 6-ம் வகுப்பு படிக்கும் குழந்தை கேட்கும்போதே, ஏஐ நம் வீட்டு வரவேற்பு அறை வரை வந்துவிட்டதை உணர முடிகிறது. எனவே, பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டம் கொண்டுவருவது சிறப்பான விஷயம்.
வகுப்பு வாரியாக என்னென்ன பாடங்களை மாணவர்களுக்கு கொடுக்கலாம்?
வகுப்பு 1 முதல் 3
ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு ஏஐ பற்றி வகுப்பெடுத்தால் நிச்சயம் தூங்கிவிடுவார்கள். அவர்களை ஈர்க்கும் வகையில், “நீங்கள் பார்க்கும் யூடியூப்பில் அடுத்து என்ன கார்ட்டூன் வீடியோ வரணும்னு ஒருத்தர் முடிவு பண்றார். அவர் பெயர்தான் ஏஐ” என்று ஆரம்பிக்க வேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்பங்கள் (Siri, Alexa) ஆகியவற்றில் ஏஐ எப்படி வேலை செய்கிறது என்பதைச் சொல்லிக் கொடுக்கும்போது, ஆர்வமாகக் கவனிப்பார்கள்.
சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திவிடாமல், ஏஐ எப்படி சிந்திக்கிறது என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இதற்காக https://quickdraw.withgoogle.com/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். அதில், நாம் வரையும் உருவத்தை ஏஐ சரியாகக் கண்டுபிடிக்கிறதா என்பதைப் பார்க்கலாம். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதன் மூலம், ஏஐக்கு புரிந்துகொள்ளும் திறன் இருப்பதை மாணவர்கள் உணர்வார்கள்.
அதேபோல், https://autodraw.com/ என்ற இணையதளத்தில், மாணவர்கள் ஒரு சாதாரண கோட்டோவியம் வரைந்தாலும், அதை ஏஐ அழகான டிஜிட்டல் ஓவியமாக மாற்றிக் காட்டும்.
வகுப்பு 4 முதல் 5
இந்த வயதில், மாணவர்கள் ஒரு ஏஐ மாடலைத் தாங்களே சொந்தமாக உருவாக்கிப் பார்க்கும் திறனைப் பெறுவார்கள்.
https://teachablemachine.withgoogle.com/ என்ற இணையதளம் மூலம், மாணவர்கள் கம்ப்யூட்டரின் வெப்கேமரா முன் அமர்ந்து, கைகளை உயர்த்தினால் “வணக்கம்” என்றும், கைகளைத் தாழ்த்தினால் “நன்றி” என்றும் சொல்லும்படி மிக எளிதாக (No Code) ஒரு ஏஐ மாடலைப் பயிற்றுவிக்கலாம்.
மேலும், https://scratch.mit.edu/ என்ற இணையதளம் மூலம், லெகோ கட்டைகளை அடுக்குவது போல, பிளாக் கோடிங் (Block Coding) முறையைப் பயன்படுத்தி எளிய கேம்கள் அல்லது கதைகளை உருவாக்க முடியும். இது மாணவர்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
வகுப்பு 6 முதல் 8
‘தரவு’ (Data) என்றால் என்ன? நாம் பேசும் மொழி, வரையும் படம், எழுதும் தகவல் என அனைத்துமே கம்ப்யூட்டருக்கு ஒரு டேட்டா என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
அம்மா சாம்பார் வைப்பதற்குப் படிப்படியாக ஒரு செய்முறை (Recipe) வைத்திருப்பதைப் போல, கம்ப்யூட்டருக்கு நாம் கொடுக்கும் படிப்படியான கட்டளைகள்தான் அல்காரிதம் (Algorithm) என்பதை மாணவர்களுக்கு எளிமையாக விளக்க வேண்டும்.
ஒரு வேலையைச் செய்ய ஏஐக்கு நாம் கொடுக்கும் படிப்படியான கட்டளைகளும், அதன்படி அது வேலை செய்யும் விதமும் மாணவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
செயல்முறைப் பயிற்சியாக, Google Teachable Machine போன்ற குறியீடற்ற (No Code) தளங்கள் மூலம், கணினிக்குப் பொருட்களை அடையாளம் காணப் பயிற்றுவிப்பதையும், Scratch போன்ற பிளாக் அடிப்படையிலான (Block-Based Coding) கருவிகள் மூலம் எளிய நிரல்களை உருவாக்குவதையும் கற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, இந்த வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ என்பது ஒரு மந்திரம் அல்ல; தரவு, அல்காரிதம், பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் ஒரு தொழில்நுட்பம் என்பதையும், அதனை தாங்களே பயன்படுத்திப் பார்க்கும் அனுபவத்தையும் வழங்க வேண்டும்.
வகுப்பு 9 முதல் 10
இங்குதான் மாணவர்கள் உண்மையான ஏஐ தொழில்நுட்ப உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார்கள்.
இந்த நிலையில், டேட்டா சயின்ஸ் (Data Science) என்றால் என்ன, தரவுகளை எவ்வாறு சேகரிப்பது, பகுப்பாய்வு செய்வது, அவற்றை வரைபடங்களாக (Visualization) மாற்றுவது போன்ற அடிப்படைக் கருத்துகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதோடு, கம்ப்யூட்டர் விஷன் (Computer Vision) அடிப்படையில், கேமராக்கள் மனித முகங்களையும், பொருட்களையும் எவ்வாறு அடையாளம் காண்கின்றன என்பதையும் விளக்க வேண்டும்.
மேலும், சாட்பாட்கள் (Chatbots) மற்றும் Alexa, Siri போன்ற குரல் உதவியாளர்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றின் பின்னணியில் உள்ள ஏஐ செயல்முறைகள் என்ன என்பதையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல், ஏஐ நெறிமுறைகள் (AI Ethics) பற்றிய விழிப்புணர்வும் அவசியம். போலிச் செய்திகள் (Fake News), தவறான தகவல்கள் (Misinformation), தனியுரிமை (Privacy), பொறுப்புடன் ஏஐயைப் பயன்படுத்துதல் போன்ற கருத்துகளை இந்த நிலையிலேயே அறிமுகப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து, பைத்தான் (Python) நிரலாக்க மொழியை அறிமுகப்படுத்தலாம். அதன் மூலம் Calculator Application, Quiz Application போன்ற சிறிய Mini Projects உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்கலாம்.
வகுப்பு 11 மற்றும் 12
இந்த நிலையில், ஏஐயின் அடுத்த கட்ட வளர்ச்சியான தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
அவற்றில்:
மெட்டாவெர்ஸ் (Metaverse)
ப்ளாக்செயின் (Blockchain)
ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality)
வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality)
இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things – IoT)
எட்ஜ் கம்ப்யூட்டிங் & 5G (Edge Computing & 5G)
இயந்திரக் கற்றல் (Machine Learning)
ஆழ்நிலைக் கற்றல் (Deep Learning)
நியூரல் நெட்வொர்க் (Neural Network)
ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் (Prompt Engineering)
ஆகியவற்றைப் பற்றி கற்றுக்கொடுக்கலாம்.
முக்கியமாக, விவசாயம், மருத்துவம், போக்குவரத்து போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு ஏஐ மூலம் தீர்வு காணும் செயலிகளை (AI Applications) உருவாக்கும் வகையில் செய்முறைப் பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.
ஏஐ பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்த்துவிட்டோம். இதை மாணவர்களுக்குக் கற்பிக்க, பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து நாளை பார்ப்போம்.
தொடரும்…








